பணி – விமர்சனம்

நடிப்பு: ஜோஜு ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, ஜுனாயஸ் வி.பி, சீமா ஐ.வி.சசி, பிரசாந்த் அலெக்ஸாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன்,  ரஞ்சித் வேலாயுதன், சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லட்சுமி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜோஜு ஜார்ஜ்

இசை: விஷ்ணு விஜய், சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு: வேணு ISC, ஜிண்டோ ஜார்ஜ்

படத்தொகுப்பு: மனு ஆண்டனி

தயாரிப்பு: அப்பு பது பப்பு & ஸ்ரீகோகுலம் மூவிஸ் & அட்ஸ் ஸ்டூடியோஸ்

தயாரிப்பாளர்கள்: எம்.ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன்

தமிழக வெளியீடு: ஸ்ரீகோகுலம் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம், கேரளாவில் சினிமா பார்வையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, திரையிட்டுள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நான்கு வாரங்கள் ஓடி, தற்போது வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் மலையாளப்படம், தமிழ் திரையுலகில் உள்ள ஜோஜு ஜார்ஜின் நண்பர்களது ஆலோசனையை ஏற்று, தமிழில் மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு, தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் படம் என்பன போன்ற தகவல்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பணி’ திரைப்படம், எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

கேரள மாநிலம் திருச்சூரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் ரியல் எஸ்டேட் பிசினஸ் மற்றும்  ரவுடித்தனத்துடன் கட்டப்பஞ்சாயத்து செய்து பிரபலமாகத் திகழும் தாதாக்கள் அனைவரும் தங்களுக்குள் ‘சிண்டிகேட்’ அமைத்து (அதாவது, தொழில் மற்றும் நட்பு ரீதியில் குழுவாக ஒன்று சேர்ந்து கொண்டு) இயங்கி வருகிறார்கள். இவர்களுக்குத் தெரியாமலோ, இவர்களில் ஒருவர் சம்பந்தப்படாமலோ அப்பகுதியில் குற்றச்செயல் எதுவும் நடக்காது என்பது நடைமுறை. இந்த ’சிண்டிகேட்’டில் அங்கம் வகிக்கும் பிரபல தாதா, நாயகன் கிரி (ஜோஜு ஜார்ஜ்). அவர் மீது பொதுமக்கள் அச்சம் கலந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். அவருடைய ஆசை மனைவி கௌரி (அபிநயா ஆனந்த்).

மறுபுறம், 20 வயது முதல் 22 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களான டான் செபாஸ்டியன் (சாகர் சூர்யா), சிஜு கே.டி (ஜுனாயஸ் வி.பி) இருவரும் நண்பர்கள். ஒரு மெக்கானிக் ஷெட்டில் உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள். குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுகிறவர்கள். ஒருநாள் மெக்கானிக் ஷெட் உரிமையாளரிடம் விடுமுறை வாங்கிக் கொண்டு, பைக்கில் கிளம்பிச் செல்லும் இவர்கள், பிஸியான மெயின் சாலையில், யாரும் கவனிக்காத இடத்தில் வைத்து ஒரு நபரை படுகொலை செய்கிறார்கள். பின்னர் விலகிச் சென்று , “ரத்தம்… ரத்தம்… கொலை… கொலை…” என்று சத்தம் போட்டு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். போலீசார் வந்து, “யார் முதலில் பார்த்தது?” என்று கேட்க, இந்த இருவரும் “நாங்க தான் பாத்தோம்… நாங்க தான்…” என்று முந்திக்கொண்டு சொல்கிறார்கள். (படம் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் இந்த இளைஞர்களின் நடத்தை கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்கிறோம்.)  மேற்கண்ட கொலைக்காக இளைஞர்கள் இருவரும் உரியவர்களிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் கூலி பெற்றுக் கொள்கிறார்கள். தாதாக்களின் சிண்டிகேட்டில் உள்ளவர்கள் இக்கொலையை யார் செய்திருப்பார் என்று தெரியாமல் குழம்புகிறார்கள்.

இந்நிலையில், நாயகனான தாதா கிரி, தன் மனைவி கௌரியுடன் பர்ச்சேசுக்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்கிறார். அதே சூப்பர் மார்க்கெட்டுக்கு ரவுடியாக முளைவிட ஆரம்பித்திருக்கும் டான் செபாஸ்டியனும், சிஜு கே.டியும் வருகிறார்கள். கௌரி தனியாக இருக்கும்போது, அவரது ஜாக்கெட்டுக்கும் புடவைக்கும் இடையில் தெரியும் இடுப்பு டானின் பார்வையில் படுகிறது. அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் அவன், சட்டென கௌரியின் இடுப்பைத் தொட்டு விடுகிறான். கௌரி அதிர்ச்சியும், அச்சமுமாய் இருப்பதைப் பார்த்து, என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிடும் தாதா கிரி, ஆத்திரத்துடன் டானையும், சிஜுவையும் அடித்து, உதைத்து, கீழே தள்ளி மிதித்து, அவர்களை எச்சரித்துவிட்டு, கௌரியை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார்.

கிரியை பழி வாங்க வேண்டும் என்ற கொதிப்பிலிருக்கும் டானும், சிஜுவும், கிரி வீட்டில் இல்லாத ஒருநாள், அத்துமீறி உள்ளே நுழைகிறார்கள். கௌரியின் புடவையை இழுத்து, ஜாக்கெட்டைக் கிழித்து, டான் மானபங்கம் செய்ய, அலங்கோலத்தில் கதறும் கௌரியை போனில் படம் பிடிக்கிறான் சிஜு.

மனைவி கௌரியின் மானத்துக்கும், தன் குடும்பத்தின் தன்மானத்துக்கும் ஏற்பட்டுள்ள அவமானம் கண்டு கொந்தளிக்கும் கிரி, அந்த இளைஞர்களைப் பழி வாங்குவதற்காக தனது மொத்த அடியாட்களையும் களத்தில் இறக்கிவிடுகிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த இளைஞர்கள் திருப்பித் தாக்கி தக்க பதிலடி கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனையை வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் நேரடியாக களத்தில் குதிக்கும் கிரி, தான் நினைத்ததை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பது ‘பணி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, தாதா கிரியாக ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான தோற்றத்தில், கூர்மையான பார்வையுடன் வேட்டி சட்டை அணிந்த தாதாவாக படம் முழுக்க வலம் வருகிறார். மனைவி மேல் அதீத அன்பு செலுத்துவது, இளைஞர்கள் மேல் நெருப்பாய் கோபம் கொள்வது என சகல உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

நாயகியாக, தாதா கிரியின் மனைவி கௌரியாக அபிநயா ஆனந்த் நடித்திருக்கிறார். அழகில் வசீகரிக்கிறார். அருமையாக நடிக்கிறார். மானபங்கம் செய்யும் ரவுடிகளிடம் சிக்கி போராடும் காட்சியில் பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார்.

வில்லன்களாக – டான் செபாஸ்டியன், சிஜு கே.டி  என்ற இரு இளம் ரவுடிகளாக – சாகர் சூர்யாவும், ஜுனாயஸும் நடித்திருக்கிறார்கள். தோற்றத்தில் சாதாரணமாக இருந்தாலும், செயல்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். பிரபல தாதாவையே ஆட்டங்காண வைக்கும் இவர்களது கதாபாத்திரங்களும், அவற்றுக்கேற்ப இவர்கள் வெளிப்படுத்தியுள்ள நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.

மங்களா தேவகியம்மாவாக வரும் சீமா ஐ.வி.சசி, குருவில்லாவாக வரும் பிரசாந்த் அலெக்ஸாண்டர், சஜியாக வரும் சுஜித் சங்கர், தேவி அந்தோணியாக வரும் பாபி குரியன், கல்யாணி பிரகாஷாக வரும் சாந்தினி ஸ்ரீதரன், லயாவாக வரும் அபயா ஹிரண்மயி, கார்த்திகாவாக வரும் சோனா மரியா ஆபிரகாம், லட்சுமியாக வரும் லங்கா லட்சுமி, சுலோச்சன்னாக வரும் பிரிட்டோ டேவிஸ், செபாஸ்டியனாக வரும் ஜெயசங்கர், பலேட்டனாக வரும் அஷ்ரப் மல்லிசேரி, சினேகாவாக வரும் டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் மற்றும் ரஞ்சித் வேலாயுதன் உள்ளிட்டோர் தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.

பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். வித்தியாசமான தாதா கதையை, வித்தியாசமான கோணத்தில் வளர்த்தெடுத்து, அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சேசிங்குடன் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். படைப்பாக்க ரீதியிலும், தொழில் நுட்பரீதியிலும் தரமான, ரசிக்கத்தக்க படமாக இதை கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

விஷ்ணு விஜய், சாம் சி.எஸ் இசையும், வேணு, ஜிண்டோ ஜார்ஜ் ஒளிப்பதிவும் இயக்கு நரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘பணி’ – மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கலாம்!