தமிழ்நாடு அரசின் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமனம்!

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (ஃபிலிம் இன்ஸ்டிடியூட்) இயங்கி வருகிறது. இங்கு திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைக்கலைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடிகர் ராஜேஷ் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்நிறுவனத்தில் மேலும் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு, அதில் ட்ராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையை பூர்விகமாகக் கொண்ட ட்ராட்ஸ்கி மருது, ஓவியராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அனிமேஷன், எஸ்எஃப்எக்ஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்குவதில் முன்னோடியாக செயல்பட்டார். திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.