“சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும்!” – ’கங்குவா’ 3டி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் இம்மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் 3டி டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இதுதான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான். 10,500- 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகியிருந்தால் நமக்கு 4000 ஸ்கிரீன்ஸ்தான் கிடைத்திருக்கும். பான் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இது அடுத்த வெலவல் பாய்ச்சலாக இருக்கும். நன்றி” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன், “’கங்குவா’ படத்தின் புரமோஷன்கள் ஒவ்வொரு இடத்திலும் திருவிழா போல நடந்து வருகிறது. நேற்று படம் பார்த்த அனைவரும் படத்திற்கு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கொடுத்து வருகிறார்கள். சிவா அண்ணன் மற்றும் சூர்யா சாருடைய கடின உழைப்பு உலகம் முழுவதும் கொண்டாடப்படும். நிச்சயம் இது சூர்யா ரசிகர்களுக்கு இரண்டாவது தீபாவளியாக இருக்கும்” என்றார்.
பாடலாசிரியர் விவேகா, “ஒவ்வொரு நாளும் ‘கங்குவா’ படத்திற்கு புதிய மகுடம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு படத்தை திரையில் கொண்டு வருவதற்கு சிவாவிற்கு பெரிய திரை அனுபவம் வேண்டும். அது அவருக்கு கைகூடியிருக்கிறது. சிறந்த இலக்கிய வார்த்தைகளைக் கொண்டு இந்தப் படத்தில் நான் பாடல்கள் கொடுப்பதற்கு சிவா முக்கிய காரணம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற சூர்யாவின் முனைப்புதான் ‘கங்குவா’. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.