அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்டு ட்ரம்ப் வெற்றி; கமலா ஹாரிஸ் தோல்வி!
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார்.
அமெரிக்காவில், அதிபர் தேர்தலில், வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்கு பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணி நிலவரப்படி, ட்ரம்ப் 276, கமலா ஹாரிஸ் 219 என்ற எண்ணிக்கையில் வாக்குகளை வசப்படுத்தி உள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.