‘மண்டைக்குள் குப்பை’ எனும் உவமைக்கு நடிகை கஸ்தூரி நல்ல உதாரணம்!

‘அமரன்’ படத்தின் நாயக பாத்திரத்தின் பிராமணப் பின்புலத்தை மறைத்து விட்டார்கள் என்பது பிரச்சினையாகி இருக்கிறது.

தலித், பழங்குடி சமூகங்கள் குறித்த படங்கள் வெளியாகும் போதெல்லாம் ‘ஒடுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்’ என்று இடைநிலை சாதியினர் விமர்சிப்பது வழக்கமானது. அதில் பிராமணர்களும் இணைந்து விமர்சிப்பார்கள். இப்போது ’ஒடுக்குகிறார்கள், பிதுக்குகிறார்கள்’ என்று பிராமணர்கள் பேசுகிறார்கள். மனித அவலங்களை எல்லாம் தலைக்குள் சுமந்து திரியும் நடிகை கஸ்தூரியும் பேசி இருக்கிறார். அவர் வழக்கம் போல ஒரு படி மேலே போய் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மக்களையும் சேர்த்து அவமானப்படுத்தி இருக்கிறார். ‘மண்டைக்குள் குப்பை’ எனும் உவமைக்கு அவர் நல்ல உதாரணம்.

அமரன் முகுந்த் கதாபாத்திரம் தன் தந்தையை ‘நைனா’ என்றுதான் விளிப்பார் என்று இயக்குநர் விளக்கம் கூறி இருக்கிறார். தவிர, தம் குடும்பத்தை பிராமண அடையாளங்களுடன் சித்தரிக்க வேண்டாம் என்று அவர்களே கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

அது உண்மையில் ஒரு privilegeதான். பிராமணர்கள் மற்றும் Forward Caste கேட்டகரி சாதியினர் மட்டும்தான் சாதி அடையாளங்கள் தேவையின்றி இந்தியாவில் இயங்க முடியும் என்று ஹார்வர்ட் ஆய்வாளர் அஜந்தா சுப்பிரமணியன் தனது Caste of Merit எனும் புத்தகத்தில் வாதிடுகிறார்.

ஒரு தலித்தோ அல்லது ஒரு முஸ்லிமோ எவ்வளவு முயன்றாலும் இந்தியாவில் தங்களது அடையாளங்கள் இன்றி இயங்கவே முடியாது. தனிப்பட்ட முறையில் சாதி அல்லது மதம் குறித்த எந்தக் கருத்தியல்களும் இல்லாமலே என்னால் பதினோராவது வகுப்பு வரை வாழ முடிந்திருக்கிறது. ஒரு தலித்தாக அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி அல்லது முஸ்லிமாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கவே இராது.

அது ஒரு புறம் இருக்க, இந்த சர்ச்சையை வைத்து பிராமணர்கள் நிஜமாகவே ஒடுக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் பிரபுத்துவ சிஸ்டம் நீக்கப்பட்ட பின்னரும் அந்தப் பின்னணி கொண்டவர்களின் வம்சாவளிகள் சமூகப் படிநிலைகளில் முன்னணியிலேயே தொடர முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம் தங்களது பிரபுத்துவ தகுதியை சமூகத் தகுதியாக அவர்கள் உருமாற்றிக் கொண்டு விட்டனர் என்று பியர் போர்தியே எனும் ஃபிரெஞ்சு அறிஞர் வாதிடுகிறார். இந்த தியரிக்கு Social Capital என்று பெயர்.

இதே போன்ற ஒரு நிலையை நவீன உலகில் பிராமணர்கள் அடைந்து விட்டனர் என்று அஜந்தா கூறுகிறார். 19-ம் நூற்றாண்டு வரை தங்களிடம் இருந்த சாதித் தகுதியை சமூகத் தகுதியாக மாற்றிக் கொண்டு விட்டனர். Encashing Caste Capital into Social Capital. அதன் மூலம் தங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படாமல் முன்பிருந்த உயர் நிலையில் தொடர முடிகிறது என்கிறார். [The Caste of Merit: Engineering Education in India, Ajantha Subramanian, Harvard University Press, 2019]

அவர் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இன்றளவும் கல்வியில், வருவாயில், மற்றும் இதர சமூகக் குறியீடுகளில் பிராமணர்கள்தான் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறார்கள். பிராமணர்களில் ஏழைகள் உள்ளார்கள்; எனினும் இதர சாதி ஏழைகளுடன் ஒப்பிடுகையில் பிராமண ஏழைகளின் நிலை பற்பல மடங்கு உயர்வாகவே உள்ளது. சொல்லப் போனால் பிராமணர்களின் ஏழ்மையை செல்வந்த பிராமணர்களுடன் மட்டுமே ஒப்பிட இயலும். Income Inequality எனப்படும் வருவாய் சமநிலை இன்மையும் பிராமணர்களிடையே உள்ளதிலேயே குறைவாக நிலவுகிறது.

சமூகப் பெருமையிலும் குறைவில்லை. தமிழ் நாட்டில் மட்டும்தான் பிராமண சமூகத்தை விமர்சிப்பதோ அல்லது எள்ளி நகையாடுவதோ ஓரளவு நிலவுகிறது. மீதி இந்தியாவில் பிராமணர்கள் மீதான மரியாதை பெருமளவு அப்படியே தொடருகிறது. வீடு கிடைப்பதில், வேலை கிடைப்பதில், பள்ளிக் கல்லூரி இடங்களில், எங்குமே பிராமண சமூகத்தினருக்கு பிரச்சினைகள் இருப்பதில்லை. இட ஒதுக்கீடு கூடப் பிரச்சினையாக இருக்கவில்லை. இருந்திருந்தால் கடந்த 70 ஆண்டுகளில் பிராமணர் கல்வி நிலை மோசமாகி இருந்திருக்க வேண்டும். நிஜம் அப்படி இல்லை. சராசரிப் பள்ளி ஆண்டு பிராமணர்களுக்கு 10.17 ஆண்டுகளாக இருக்கிறது. இதர முன்னேறிய சாதிகளுக்கு 8.18.

இந்தியாவில் சாதி சமநிலையின்மை குறித்த ஒரு ஆய்வறிக்கையில் பின்வரும் வரிகள் உள்ளன:

The results show strong and significant differences between brahmins and other forward castes on almost all outcomes… they appear to be uniquely privileged. Brahmins are more likely to have high education, they are more likely to have higher incomes and consumption expenditure and greater social connections than other forward castes.

இதுதான் நவீன உலகிலும் பிராமணர்களின் நிலை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தமாக நிலவி வந்த பிராமண உயர்வுவாதம் வெறும் 50 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடாது. தமிழ் நாட்டில் கூட இன்றும் பிராமண எதிர்ப்புப் பிரச்சாரத்தை விட அதிகப் பரவலாக பிராமணர்கள் மீதான மரியாதை தொடரவே செய்கிறது என்பதுதான் நிதர்சனம். கடந்த 75 ஆண்டுகளாக பிராமணர்களுக்கு எதிராக திராவிட இயக்கத்தில் இருந்து எழும் குரல்களுமே கூட வெறும் கலகக் குரல்களாகவேதான் இருக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக எந்த ஒரு தீவிர வன்முறையும் அரங்கேறியதாக தகவல் இல்லை.

என்னைப் பொருத்தவரை அந்தக் கலகக் குரல்கள் அவசியம் என்றுதான் சொல்வேன். இன்னும் ஒரு படி மேலே போய், பிராமணியக் கட்டுடைப்பு தேசிய அளவில் நடக்க வேண்டும் என்றும் சொல்வேன். சாதியவாதம் தொடருவதில் இடைநிலை சாதியினருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பது போல இந்துத்துவம் வலுப் பெறுவதில் பிராமணர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, இந்துத்துவத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனில் பிராமணியத்தை பலவீனப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் நாட்டில் துவங்கியது போன்ற ஒரு பிராமண எதிர்ப்புப் பிரச்சாரம் தேசமெங்கும் பரவ வேண்டும். ‘கல்யாணத்துக்கும் கருமாதிக்கும் பிராமணர்கள் இல்லாமல் போய் விடுவார்கள்’ என்று கஸ்தூரி அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கெல்லாம் பிராமணர்கள் தேவையா என்பதுதான் இங்கே கேட்க வேண்டிய கேள்வி. கோயில் கருவறையிலேயே கூட பிராமணர்கள் அற்ற நிலையை நோக்கி சமூகம் நகர வேண்டும். கருவறையில் பிராமணர்கள் தொடர முடிவதற்கு உதவும் முக்கிய நூல் ஆகமங்கள். இந்த நூல்கள் எந்த மாதிரியானவை? சாதிக் கொடூரங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பிராமண உயரவுவாதங்கள், மூட நம்பிக்கை சார்ந்த பயமுறுத்தல்கள் இவையெல்லாம் மலிந்து கிடப்பவைதான் இந்த ஆகம நூல்கள். ஆகம நூல்களின் பெரும்பாலான அடக்குமுறைகளை நாம் தாண்டி வந்து விட்டாலும் கருவறையில் பிராமணர்கள் இன்று வரை நடத்தும் ஆதிக்கத்தை தாண்ட இயலவில்லை. அதுவும் நடந்து விட்டால் இந்த உயர்வுவாத சிந்தனை ஒரு முடிவுக்கு வர இயலும்.

அதை நோக்கி சமூகத்தை செலுத்தும் முயற்சியில் செக்யூலர் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் இயங்க வேண்டும். அதில் தமிழ் நாடு பெருமளவு திறம்பட இயங்கிக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒடுக்குமுறைகள், மூட நம்பிக்கைகள், உயர்வுவாதங்கள், வன்முறைகள் போன்றவற்றின் கூடாரம் பிராமணியம். அது ஒழிந்து அழிவது பிராமண சமூகத்துக்கே கூட நல்லது. இந்தியாவுக்கு மிக மிக நல்லது.

எனவே ‘அமரன்’ நாயகப் பின்னணி குறித்து அங்கலாய்க்கும் பிராமணர்களுக்கு நான் சொல்வது இதுதான்: கொஞ்சம் ஷட்அப் பண்ணுங்க பாஸ்.

-ஸ்ரீதர் சுப்ரமணியம்