பிரதர் – விமர்சனம்

நடிப்பு: ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, ’நட்டி’ நடராஜ், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், பேபி விருத்தி, மாஸ்டர் அஸ்வின் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ராஜேஷ்.எம்

ஒளிப்பதிவு: விவேகானந்த் சந்தோஷம்

படத்தொகுப்பு: ஆஷிஷ் ஜோசப்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் (பி) லிட்.’ சுந்தர் ஆறுமுகம்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

சென்னையில் அப்பா குமாரசாமி (அச்யுத் குமார்), அம்மா சரஸ்வதி (சீதா) ஆகியோருடன் வசிக்கும் கார்த்திக் குமாரசாமி (ஜெயம் ரவி) சட்டம் பயிலும் மாணவர். எதிலும் நேர்மை வேண்டும் என்ற குணம் உள்ளவர் என்பதால் பின்விளைவுகளை ஆராயாமல் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. அப்பாவின் கோபத்தையும் சம்பாதிக்கிறார்.

இந்த நிலையில் தம்பி கார்த்திக் குமாரசாமியை நல்வழிப்படுத்துவதாக அப்பாவுக்கு வாக்குறுதி அளித்து ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார் அக்கா ஆனந்தி (பூமிகா சாவ்லா).

ஊட்டியில் கார்த்திக் குமாரசாமிக்கும் அக்கா ஆனந்தியின் கணவர் அரவிந்த் (நட்டி நடராஜ்), மாமனார் சிவகுருநாதன் (ராவ் ரமேஷ்), மாமியார் ஹேமமாலினி (சரண்யா பொன்வண்ணன்) உள்ளிட்ட அக்கா குடும்பத்தினருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக ஆனந்தியின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. கணவரின் வீட்டைவிட்டு தம்பியுடன் வெளியேறுகிறார் ஆனந்தி.

தன்னால் பிரிந்த அக்கா குடும்பத்தை கார்த்திக் குமாரசாமி எப்படி மீண்டும் ஒன்று சேர்க்கிறார் என்பது ‘பிரதர்’ படத்தின் மீதிக்கதை.

விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் தவறுகளை தட்டிக்கேட்கும் நாயகனாக, இளைஞர் கார்த்திக் குமாரசாமியாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். ஆக்ரோஷக் காட்சிகளில் அசத்துவதைப்  போல் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகளிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகனின் அக்கா கணவரது தங்கை அர்ச்சனாவாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அழகில் வசீகரிக்கிறார். காதல் காட்சிகளிலும் பாதகம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

நாயகனின் அன்புள்ள அக்கா ஆனந்தியாக பூமிகா சாவ்லா நடித்திருக்கிறார். அவர் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, உணர்ந்து, உடல் மொழியாலும், பாச மழையாலும் கவனிக்க வைக்கிறார்.

நாயகனின் அக்கா கணவர் அரவிந்தாக வரும் ‘நட்டி’ நடராஜ் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கேர்டேக்கர் கேசவ்வாக வரும் விடிவி.கணேஷின் காமெடி சிரிக்க வைக்கிறது.

சிவகுருநாதனாக வரும் ராவ் ரமேஷ், ஹேமமாலினியாக வரும் சரண்யா பொன்வண்ணன், குமாரசாமியாக வரும் அச்யுத் குமார், சரஸ்வதியாக வரும் சீதா, வினய்யாக வரும் சதீஷ் கிருஷ்ணன், அபியாக வரும் பேபி விருத்தி, அர்ஜுனாக வரும் மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

காமெடி, காதல், செண்டிமெண்ட், அக்கா – தம்பி பாசத்துடன் கவலைகளை மறந்து ரசிக்கும்படியான பொழுதுபோக்குப் படமாக இதைக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம். ஆனால் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். மாவு பாவம் மிஸ்டர் ராஜேஷ் எம்! திரைக்கதை பாடாவதியாக இருக்கிறது. அப்டேட் ஆகுங்கள் இயக்குநர்வாள்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்காமிஷி” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் கதையை இலகுவாக நகர்த்த உதவுகிறது.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் ஊட்டியின் அழகை பல கோணங்களில் படம் பிடித்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். பாடல் காட்சிகளை உயர் தரத்தில் படமாக்கிய விதம் அருமை.

’பிரதர்’ – ஜெயம் ரவிக்காக ஒருமுறை பார்க்கலாம்!