ஆலன் – விமர்சனம்
நடிப்பு: வெற்றி, மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன், ஹரிஷ் பெராடி, கருணாகரன், டிடோ வில்சன், ஸ்ரீதேவா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சிவா ஆர்
ஒளிப்பதிவு: விந்தன் ஸ்டாலின்
படத்தொகுப்பு: மு.காசி விஸ்வநாதன்
இசை: மனோஜ் கிருஷ்ணா
தயாரிப்பு: ‘3 எஸ் பிக்சர்ஸ்’ சிவா ஆர்
வெளியீடு: கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளில் புழங்கும் ‘ஆலன்’ என்ற சொல்லுக்கு “அழகான”, “மகிழ்ச்சியான”, “பிரகாசிக்கும் கடவுள்” என எக்கச்சக்கமான பொருள் இருக்கிறது. ஆனால் இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் சிவா ஆர், சிவபெருமானுக்கு ‘ஆலன்’ என்றொரு பெயரும் இருப்பதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியிருப்பதால், அந்த பொருளில் தான் இந்த படத்துக்கும், இந்த படக்கதையில் வரும் ஒரு புத்தகத்துக்கும் ‘ஆலன்’ என அவர் பெயரிட்டிருக்கிறார் எனக் கொள்ளலாம். இதை உறுதி செய்யும் வகையில் கதை நாயகனை சிவபக்தனாகவும், கதையின் பெரும்பகுதி காசி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம் போன்ற சிவத்தலங்களில் நடப்பதாகவும் கட்டமைத்திருக்கிறார் தனது பெயரிலேயே சிவனைக் கொண்டிருக்கும் இயக்குநர் சிவா ஆர்.
கொடைக்கானல் மலையில் உள்ள கிராமம் ஒன்றில் வசிப்பவர் செல்வேந்திரன் (அருவி மதன்). விவசாயி. முட்டைக்கோஸ் பயிரிடுபவர். அவரது மகன் தியாகு. விடலைப் பையன். “உன் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் எழுதி வைக்க வேண்டும்” என்று அவனது தாத்தா சொன்ன அறிவுரையைக் கேட்டு, எழுதுவதில் ஆர்வத்தையும், திறமையையும் வளர்த்துக்கொண்டு, கதை, கவிதை எழுதுபவன். பிற்காலத்தில் பெரிய எழுத்தாளனாகப் புகழ்பெற வேண்டும் என்ற கனவை, லட்சியத்தை தனக்குள்ளே வளர்த்துக்கொண்டிருப்பவன்.
தியாகு வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிப்பவர் பாக்கியநாதன் (விவேக் பிரசன்னா). தியாகுவுக்கு அவர் மாமா முறை வேண்டும். பாக்கியநாதனின் மகள் தாமரை. அவளும் தியாகுவும் பால்ய சினேகிதர்கள். இப்போது தான் அவர்களுக்குள் விடலைப்பருவக் காதல் மொட்டுவிடத் தொடங்கியிருக்கிறது. தியாகு எழுதும் கதை, கவிதைகளுக்கு தாமரை தீவிர ரசிகை.
ஒருநாள் தியாகுவின் அப்பா செல்வேந்திரன், தன் மனைவி, மகன் மற்றும் தாமரையுடன் ஒரு வேனில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வருகையில், செல்வேந்திரனின் தம்பிகள் இரண்டு பேர், சொத்தாசையில் சதி செய்து, வேனை விபத்துக்கு உள்ளாக்குகிறார்கள். இதில் செல்வேந்திரனும், அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார்கள். தாமரை பலத்த காயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தியாகு சிறு காயங்களுடன் தப்பிப் பிழைக்கிறான்.
தியாகுவின் சித்தப்பாமார்கள் அவனையும் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என அஞ்சும் அவனது மாமா பாக்கியநாதன், அவனை சென்னைக்கு அழைத்து வந்து, அங்கு மேன்சன் உரிமையாளராக இருக்கும் தன் நண்பரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார். விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை எண்ணி நிம்மதியிழந்து தவிக்கும் தியாகு, சென்னையில் இருக்கப் பிடிக்காமல், அங்கிருந்து வெளியேறி, கால்போன போக்கில், மனம்போன போக்கில் திரிகிறான்.
காசி என்ற வாரணாசியில், கங்கைக் கரையோரம் அனாதையாகத் திரியும் தியாகுவை, ஒரு மடத்தின் தலைமை சாமியார் (ஹரிஷ் பெராடி) கவனித்து, அவன்மேல் கருணை கொண்டு, தன்னுடன் அழைத்துச் சென்று, காவியுடை கொடுத்து, சன்னியாசம் வழங்கி, சாமியார் ஆக்குகிறார். தியாகு வளர்ந்து, நீண்ட தலைமுடியும், அடர்ந்த தாடி-மீசையும் கொண்ட இளம் சாமியார் (வெற்றி) ஆகிறார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தியாகு, மனதை ஒருநிலைப்படுத்தி ஆன்மிகத்தில் திளைக்க இயலாமல், எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளே வைத்து தவிப்பதை அறிந்துகொள்ளும் தலைமை சாமியார், “ஒருவன் எதை அதிகம் நேசிக்கிறானோ அதுதான் அவனுக்கு ஆன்மிகம். நீ நேசிக்கும் ஆன்மிகத்தைத் தேடிப் போ” என்று அன்புடன் அறிவுரை கூறி வழியனுப்பி வைக்கிறார்.
காசியிலிருந்து சென்னை செல்லும் தொடர் வண்டியில் பயணிக்கும் தியாகு, தமிழ்மொழி மீது அளப்பரிய பற்றுக்கொண்டு தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய இந்தியா வந்திருக்கும் ஜனனி தாமஸ் (மதுரா) என்ற ஜெர்மன் நாட்டுப் பெண்ணை சக பயணியாக சந்திக்கிறார். இருவரும் நட்புடன் பேசுகிறார்கள். அந்நியோன்யமாகப் பழகுகிறார்கள். சென்னையில் முன்பு தியாகு தங்கியிருந்த மேன்சனில் இருவரும் தங்குகிறார்கள். காதல் வயப்படுகிறார்கள். ஜனனி தாமஸின் வேண்டுகோளை ஏற்று, முடி வெட்டி, ஷேவ் செய்து, காவியுடை துறந்து, டிப்டாப்பாக உடை உடுத்தி, நவநாகரிக இளைஞன் ஆகிறார் தியாகு. மேலும், ஜனனி தாமஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கதை எழுதவும் தொடங்குகிறார்.
ஆய்வுக்காக புதுச்சேரிக்குப் புறப்படும் ஜனனி தாமஸ், ஓரிரு நாட்களில் திரும்பி வந்தவுடன் தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொள்வோம் என்று தன் ஆசையை தியாகுவிடம் தெரிவித்துவிட்டு, விடை பெற்றுச் செல்கிறார். ஆனால் அவர் புதுச்சேரியில் துர்வாய்ப்பாக சில காமக்கொடூரர்களிடம் சிக்கி, அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் பலமாக தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கிறார்.
தகவலறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் தியாகு, விரக்தியில் ரிஷிகேஷ் சென்று மீண்டும் சாமியார் ஆகிறார். அதன்பிறகு அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழ்ந்தது? தாத்தா அறிவுரைப்படியும், ஜன்னி தாமஸின் விருப்பப்படியும் அவர் பெரிய எழுத்தாளர் ஆனாரா? தன் விடலைப்பருவ காதலியான தாமரையை மீண்டும் சந்தித்தாரா? எங்கே? எப்படி? என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘ஆலன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதை நாயகன் தியாகுவாக வெற்றி நடித்திருக்கிறார். வித்தியாசமான கதையையும், வித்தியாசமான கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடிப்பவர் என பெயர் பெற்ற வெற்றி, இப்படத்திலும் அப்பெயரை தக்க வைத்துக்கொள்வதோடு, வித்தியாசமான தோற்றத்திலும் தோன்றியிருக்கிறார். நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடி – மீசை, காவி வேட்டி, சாந்தமான முகம், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு என இளம் சாமியார் கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனனி தாமஸ் மீது காதல் கொண்டவுடன், அவரது வேண்டுகோளை ஏற்று, சாமியார் கோலம் களைந்து, நவநாகரிக இளைஞனாகத் தோன்றி வெட்கப்படும் காட்சியில் நேர்த்தியாக நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்திருக்கும் ஜனனி தாமஸாக மதுரா நடித்திருக்கிறார். வெளிநாட்டுப் பெண் கதாபாத்திரம் என்பதற்காக கவர்ச்சி காட்டாமல், சிரித்த முகத்துடன் நம் பக்கத்து வீட்டுப்பெண் போல் எளிய தோற்றத்தில் கொஞ்சிக் கொஞ்சி வசனம் பேசி பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார். கொடூரமான முடிவைச் சந்திப்பதன் மூலம் பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.
சென்னை நூலகத்தில் நூலகராகப் பணிபுரியும் தாமரை கதாபாத்திரத்தில் அனு சித்தாரா நடித்திருக்கிறார். வட்ட நிலவு முகம் மற்றும் காந்தக் கண்களுடன் காண்போரை அடித்து வீழ்த்தும் இயற்கை அழகுடன் வசீகரத் தோற்றம் தந்திருக்கிறார். தன் விடலைப்பருவ காதலன் தியாகு தான் இப்போது சாமியாராக உருமாறி வந்திருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்கும் கணத்திலிருந்து ஆனந்தமும் உருக்கமுமாய் பிரமாதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நாயகனின் அப்பா செல்வேந்திரனாக வரும் அருவி மதன், நாயகனின் மாமா பாக்கியநாதனாக வரும் விவேக் பிரசன்னா, காசி மடத்தின் தலைமை சாமியாராக வரும் ஹரிஷ் பெராடி, சென்னை மேன்சன் நிர்வாகியாக வரும் கருணாகரன் மற்றும் தனசேகரனாக வரும் டிடோ வில்சன், ராகவனாக வரும் ஸ்ரீதேவா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருப்பதோடு இப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் சிவா ஆர். ‘ஒருவன் எதை அதிகம் நேசிக்கிறானோ, அது தான் அவனுக்கு ஆன்மிகம்” என்ற கருத்தையும், “ஒருவன் தன் வாழ்க்கை அனுபவத்தை பிறருக்கு பயன்படும் வகையில் எழுதி வைக்க வேண்டும்” என்ற கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு, காதல் கதையாக வளர்த்தெடுத்து, சுவாரஸ்யமான காட்சிகளை திரைக்கதையில் புகுத்தி, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட வேலை வாங்கி, பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். அடுத்தவரின் பணத்தில் பரிசோதனை செய்து பார்க்காமல், தன் சொந்தப் பணத்தில், தனக்குப் பிடித்த கதையை, தனக்குப் பிடித்த மாதிரி படமாக எடுக்க வேண்டும் என்ற அவரது ‘பாலிசி’ பாராட்டுக்கு உரியது.
மனோஜ் கிருஷ்ணாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விந்தன் ஸ்டாலின் தன் ஒளிப்பதிவு மூலம் பக்தி தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார். மு.காசி விஸ்வநாதன், இயக்குநரின் படைப்புத் திறனுக்கு சேதம் வராமல் படத்தைத் தொகுத்திருக்கிறார்.
‘ஆலன்’ – நாத்திகர்கள் ஒருமுறையும், ஆத்திகர்கள் பலமுறையும் கண்டு களிக்கலாம்!