ஹரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி: உதயநிதி வாழ்த்து!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.

இத்தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வினேஷ் போகத்துக்கு தமிழ்நாடு துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ”மக்களின் பிரதிநிதியாக புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள வினேஷ் போகத்துக்கு வாழ்த்துகள். பாசிச சக்திகளுக்கு எதிராக போராடக்கூடிய ஆற்றலுடன் முன்னேறிச் செல்ல வாழ்த்துகள்” என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.