மெய்யழகன் – விமர்சனம்
நடிப்பு: அரவிந்த்சாமி, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ராஜ்கிரண், சுவாதி, இளவரசு, ஜெயப்பிரகாஷ், ஆண்டனி, சரண் சக்தி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பிரேம்குமார்
ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
இசை: கோவிந்த் வசந்தா
தயாரிப்பு: ’2டி எண்டர்டெயின்மெண்ட்’ ஜோதிகா, சூர்யா
சிறுவயதிலிருந்து வளர்ந்துவந்த பூர்விக வீட்டினைச் சொத்து பிரச்சனையால் இழக்கிறது அருள்மொழியின் (அரவிந்த்சாமி) குடும்பம். இதனால் தந்தையின் முடிவுக்கு ஏற்ப தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்கிறார்கள். 22 வருடங்கள் கழித்து உறவுக்கார தங்கையின் திருமணத்துக்காக மீண்டும் ஊருக்குச் செல்கிறார் அருள்மொழி. இரவு திருமண வரவேற்பை முடித்துவிட்டு கடைசிப் பேருந்து ஏறி சென்னைக்கு வந்துவிடவேண்டும் என்பது அவரது முடிவு. ஆனால் சென்ற இடத்தில் ‘அத்தான், அத்தான்’ என அன்பில் திக்குமுக்காட வைக்கிறார் ஒரு பெயர் தெரியாத உறவினர் (கார்த்தி). மிகவும் தெரிந்தவர் போலக் கூடவே ஒட்டிக்கொண்டு பால்யகாலத்து நினைவுகளைப் பகிரும் அவரிடம், உங்களை அடையாளம் தெரியவில்லை என்று கூறச் சங்கடப்படுகிறார் அருள். இந்தச் சூழலில் பேருந்தையும் தவறவிட ‘பெயர் தெரியாத நபரி’ன் வீட்டிலே இரவு தங்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. அந்த ‘ஓர் இரவு’ அவர்கள் இருவருக்கும் நடக்கிற உரையாடல்கள், உணர்வுப் பகிர்வுகள், நினைவலைகள் ஆகியவற்றை நெகிழ்ச்சியான அத்தியாயமாகத் தர முயன்றிருக்கிறது இந்த ‘மெய்யழகன்’.
நினைவுகளைத் திரும்பிப் பார்க்கிற இடத்தில் ஏற்படுகிற தவிப்பு, பிரிந்த உறவுகளை மீண்டும் காண்கிற இடங்களில் கண்களைக் குளமாக்கும் நடிப்பெனக் கதையின் ஆன்மாவாக உருமாறியிருக்கிறார் அரவிந்த் சாமி. குறிப்பாக ‘யாரோ இவன் யாரோ’ என அன்பில் கலங்கி ஓடுகிற இடத்தில் நம் மனத்திலும் நின்றுவிடுகிறார்.
அந்த ஆன்மாவிற்கு உயிர் கொடுக்கும் அளவிற்குக் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சு, யதார்த்தமான உடல்மொழி எனப் படத்தின் பாதி பலத்தை தன் தோள்களில் சுமந்திருக்கிறார் கார்த்தி. கார்த்தி அடித்து விளையாடும் இயல்பான பாத்திரம்தான் என்றாலும் இதில் கூடுதலாகத் தொற்றிக்கொள்ளும் அந்த நெகிழ்ச்சியான உணர்வு தஞ்சாவூர் ஸ்பெஷல் கல்யாண விருந்து.
பெரிதாகத் திரை நேரமில்லாவிட்டாலும் தேவதர்ஷினியும், ஸ்ரீ திவ்யாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தங்கையாக வரும் சுவாதி, அந்த ஒரு காட்சியிலேயே கலங்கடித்திருக்கிறார்.
கேட்டரிங்காரராக வரும் இளவரசு, பிளாஷ்பேக்கில் வரும் ஆண்டனி என சின்ன சின்ன பாத்திரங்களும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயப்பிரகாஷ், ராஜ் கிரண் நமது வீட்டிலுள்ள மூத்தோர்களை ஞாபகப்படுத்துகிறார்கள். இருவரும் தொலைப்பேசியில் பேசி முடித்து உடைந்து அழுகிற இடத்தில் அத்தனை நெகிழ்ச்சி. கம்பீரமாக மட்டுமே நமக்குப் பழக்கப்பட்ட ராஜ்கிரண் இதில் கலங்கவும் வைக்கிறார்.
ஃப்ளாஷ்பேக்கில் ஜூனியர் அரவிந்த்சாமியாக வரும் சரண் சக்தியின் நடிப்பும் சிறப்பு.
“நீ விட்ட அதே இடத்துலதான் நிற்கிறேன்” என்று ’96’ படத்தின் வசனத்தைப் போலவே ஓர் இரவில் நடக்கும் கதையினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். அதற்காக முன்னரே வைக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் நினைவுகள் ஆரம்பத்திலேயே நம்மைக் கதையோடு சேர்ந்து பயணிக்க வைக்கின்றன. சொந்த ஊர், உறவு ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் கூடு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பதித்து நம்மையும் நீடாமங்கலம் பேருந்தில் ஒரு பயணியாக அழைத்துச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் பிரேம்குமார்.
கார்த்தியின் வருகைக்குப் பின்னர் ‘அவர் யார்’ என்கிற ஆவலைத் தூண்டும் சுவாரஸ்யமான திரைக்கதை வடிவமைப்பும், எளிமையான வசனங்களும் சிரிப்பொலி ‘மணி’யை மனதில் தட்டுகின்றன. இரு மைய கதாபாத்திரங்களை மட்டுமே காட்சி சட்டகத்தில் வைத்துக்கொண்டு இடைவேளை வரை எந்தவித சலிப்பினையும் தராமல் இழுத்துச் சென்ற திரைமொழிக்குப் பாராட்டுகள்.
இரண்டாம் பாதி தொடங்கிய நொடிகளில் கார்த்தியின் வாழ்வின் அத்தியாயங்கள் வாடிவாசலாகத் திறக்கப்படுகின்றன. சீறிவரும் காளை ‘தோனி’ பகுதி அட்டகாசமான மேக்கிங் என்றாலும் இதுவரையில் சென்ற யதார்த்த திரைமொழியிலிருந்து விலகி தனியான பாதையில் அது பயணிப்பது நெருடல். இருப்பினும் நாம் சாதாரணமாகக் கடந்து செல்கிற விஷயம், மற்றவர்களுக்கு வாழ்க்கையையே மாற்றுகிற பொக்கிஷம் என்பதாக வரும் ‘சைக்கிள் கதை’ மனதைச் சிறகாக்குகிறது.
கோயில், மண்டபம் எனக் கோட்டைகளும் கற்சுவர்களும் நம்மை வரவேற்க, வயல்வெளிகளின் வழியே காவிரி நதிக்கரையோரம் தஞ்சை மண்ணில் நம்மையும் சேர்ந்து நடக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ. ஜல்லிக்கட்டு காளையின் சீற்றமும், இரவில் அணைக்கட்டில் தளும்பி ஓடும் அமைதியும் செல்லுலாய்டில் எழுதப்பட்ட டெல்டா கவிதைகள்.
தரிசு நிலத்தில் முளைத்த பயிர்கள் போல எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் கதையின் நோக்கத்தினை அறுவடை செய்கிறது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. அதில் “யாரோ இவன் யாரோ” என்று கமல்ஹாசனின் குரலில் வரும் பாடல் ‘ராஜபோகம்’.
ஒரு குறுநாவலின் உணர்வோடு அத்தியாய அத்தியாயமாக விரியும் திரைக்கதைக்குத் தலையாட்டி பொம்மையின் இறுதி நொடி அசைவைப் போல எந்தத் தொந்தரவும் இல்லாத நிதானத்தைக் கொடுத்துத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ்.
திருமண வரவேற்பு செட்டப், பழைய சைக்கிளில் இருக்கும் அண்டர் டேக்கர் ஸ்டிக்கர், கார்த்தி வீட்டுக் கிணற்று மேடு, கிளிக்கு உணவு வைக்கிற மாடி ஆகியவற்றில் கலை இயக்குநர் அய்யப்பனின் சிரத்தை தெரிகிறது.
ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழி, எளிமையான வசனங்கள், யதார்த்த மனிதர்கள் என்று உன்னதமான நினைவலைகளை அசைபோட வைத்து ஆசுவாசப்படுத்தும் இந்த `மெய்யழகன்’, இரண்டாம் பாதியிலும் தன் தாக்கத்தைக் குறைக்காமல் சென்றிருந்தால் `சியர்ஸ்’ அடித்தும் உடைந்திடாத மண்பானையாக நம் மனதில் இன்னும் உறுதியாக நின்றிருப்பான்.
’மெய்யழகன்’ – கண்டு களிக்கலாம்!