விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்: தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்துவிட்டு திரும்ப முயன்றவர்களில் 240த்திற்கும் மேற்பட்டவர்கள், வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக மயக்கம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 93 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இந்திய விமானப்படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின்போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்பட செயல்படுத்துவதில், இனிவரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.