மக்கள்நலக் கூட்டணி – பாமக மீது ஜெயலலிதா பாய்ச்சல்!

தனக்கு எதிரி திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான்; தன் கட்சிக்கு எதிரி திமுக – காங்கிரஸ் கூட்டணி மட்டும் தான்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு கட்சியோ, அணியோ இல்லை என்பதுபோல் பாசாங்கு செய்துவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனக்கு ஆதரவான வாக்குகளை மக்கள் நலக் கூட்டணி, பாமக போன்றவையும் கைப்பற்றி வருகின்றன என்பதை காலதாமதமாகப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதும் முதல்முறையாக பாய்ந்துள்ளார்.

அரக்கோணத்தில் செவ்வாயன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில் கூறியதாவது:

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க.வினர், பா.ம.க., மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் என பலரும் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சொல்லிவந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீது குறைகள் சொல்வதோடு மட்டுமல்லாமல், குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வந்தனர். தற்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களது தேர்தல் அறிக்கையைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இதில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என இவர்கள் எல்லோரும் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்; இந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது; அந்த அம்மாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கூக்குரல் இடுகின்றனர்.

எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப்பற்றி 100 தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருபவள் தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால் தான் நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.

 இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.