தமிழ்நாடு அரசே, சென்னையில் எதையும் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள்!

சென்னை மெரினாவில் நடந்த ’ஏர்ஷோ 2024’ – விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காணவந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், 90க்கும் மேற்பட்டோர் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 36°C வரை வெப்பநிலை இருக்கும் என நேற்றே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இன்று சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 °C. மெரினாவில் நிலவிய சதவீத ஈரப்பதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 43 °Cக்கு மேலான வெப்பத்தை மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

பல லட்சம் பேர் கூடுவார்கள் என்பதும் முன்பே எதிர்ப்பார்க்கபட்ட ஒன்றுதான் ஆனாலும் நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்டுவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய IAF_MCC, Def_PRO_Chennai மற்ற விஷயங்களில் காட்டிய அலட்சியம் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படும் அரசியல் கட்சி மாநாடுகள், மதக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தும்போது தீவிர வானிலையையும் கருத்தில் கொண்டு மட்டுமே நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட வெப்ப செயல் திட்டங்கள் அனைத்தும் காகித அளவில் மட்டுமே இருப்பது வேதனைக்குரியது.

சென்னை காவல் துறைக்கும், மாநகராட்சிக்கும் இவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரிந்தும் அதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டன? கடுமையான கண்டனங்கள்.

தமிழ்நாடு அரசே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:-

சென்னைதான் இந்தியாவின் மிகவும் வெப்பமான மாநகரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சென்னையில் எதையும், எதையும், எதையும், எதையும் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள். போதும்.

-சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்