ஹிட்லர் – விமர்சனம்
நடிப்பு: விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
இயக்கம்: தனா எஸ்.ஏ
ஒளிப்பதிவு: நவீன்குமார். ஐ
படத்தொகுப்பு: சங்கத்தமிழன்.இ
இசை: விவேக் – மெர்வின்
தயாரிப்பு: டி.டி.ராஜா – டி.ஆர்.சஞ்சய்குமார்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)
“ஆரிய இனம் தான் உலகிலேயே உயர்ந்த இனம்; உலகை ஆளத் தோன்றிய இனம்” என்ற இறுமாப்போடு, தன் சொந்த நாட்டு கம்யூனிஸ்டுகளையும், சோஷலிஸ்டுகளையும், ஜனநாயகவாதிகளையும், யூதர்களையும் கொன்று குவித்து, உலகை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என்ற பேராசையில் மூர்க்கத்தனமாக இரண்டாம் உலகப்போரை நடத்திய கேடுகெட்ட ஜெர்மன் சர்வாதிகாரி தான் ‘ஹிட்லர்’ என்று காரி உமிழ்கிறது உலக சரித்திர ஏடு. அத்தகைய மனிதகுல விரோதியின் பெயரை இந்த படத்துக்கு தலைப்பாக வைக்க என்ன காரணம்? படக்கதையில் இது ஹீரோ அல்லது வில்லனின் பெயரா என்றால் அது இல்லை. அல்லது கதையில் அந்த இருவரில் ஒருவராவது அப்பாவி மக்களை கொன்றொழிக்க வதை முகாம் அமைத்து செயல்படுகிறாரா என்றால் அதுவும் இல்லை. இப்படி எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒரு கேடுகெட்ட தலைப்பை என்ன மயிலாப்பூருக்கு, என்ன புன்னகைக்கு இந்த படத்துக்கு வைத்தார் என்பதை இப்படத்தின் இயக்குநர் தனா தான் விளக்க வேண்டும்.
சரி, கதையாவது புதுசாக இருக்கிறதா என்றால், அது ஹிட்லரைப் போலவே அரதபழசாக இருக்கிறது. சுவாரஸ்யமாகவாவது இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை; ஹிட்லரைப் போலவே கடுப்பைத் தான் கிளப்புகிறது…
பிளாக் அண்ட் ஒயிட்டில் படம் ஆரம்பமாகிறது. தேனி மாவட்டம் மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த கூலிப் பெண் தொழிலாளர்கள் (ஒரு நிறைமாத கர்ப்பிணி உள்ளிட்ட) பத்து பதினைந்து பேர், வேலை முடிந்து, கொட்டும் மழையில், ஒற்றையடி மலைப்பாதையில் திரும்பி வருகிறார்கள். வழியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் காட்டாறு இடை மறிக்கிறது. ஆற்றைக் கடக்க பாலம் கிடையாது. இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே நீளமாக கட்டப்பட்டிருக்கும் கயிறைப் பிடித்துக்கொண்டே ஆற்றில் இறங்கித் தான் அக்கரைக்குச் செல்ல வேண்டும். அவ்விதம் அந்த பெண்கள் கழுத்தளவு தண்ணீர் உள்ள ஆற்றுக்குள் இறங்கி நடக்கும்போது, திடீரென பெருக்கெடுக்கும் மேல்வெள்ளம் அவர்களை இழுத்துச் சென்று, மூழ்கடித்து, உயிர் பறிக்கிறது…
காட்சி வண்ணத்துக்கு மாற, மதுரை அருகே உள்ள செக்காணுரணியைச் சேர்ந்த நாயகன் செல்வா (விஜய் ஆண்டனி), தனியார் வங்கி ஒன்றின் பணியில் சேர சென்னை வருகிறார். இங்கு கட்டை பிரம்மச்சாரியாக ஓர் அறையில் வாடகைக்கு வசிக்கும் கருக்காவேலுடன் (ரெடின் கிங்ஸ்லி) வலுக்கட்டாயமாக நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய ரூம்மேட் ஆகிறார். அதே நேரத்தில், புறநகர் ரயிலில் பயணிக்கும் நாயகி சாராவை (ரியா சுமன்) கண்டதும் காதல்கொண்டு, அவரை பின்தொடர்ந்து திரிகிறார்.
இதனிடையே, மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. ஆளும் ’தமிழ் திராவிட சமுதாயக் கட்சி’ மீண்டும் ஆட்சிக்கு வர முனைப்புடன் செயல்படுகிறது. இக்கட்சியின் பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜவேலு (சரண்ராஜ்) ஊரறிந்த ஊழல் பெருச்சாளியாக இருப்பதால், மக்களின் ஆதரவை இழந்திருக்கிறார். இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்தாவது வாக்குகளை ‘கொள்முதல்’ செய்து, மீண்டும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறியில், ரூ.300 கோடி – கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை – தயார் செய்கிறார். அந்த 300 கோடியை அவரது ஆட்கள் ரகசியமாக தொகுதிக்கு எடுத்துச் செல்லும்போது, அவர்களை ஒரு மர்ம கும்பல் சுட்டுக் கொன்றுவிட்டு, மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறது.
கொள்ளை போனது கருப்புப் பணம் என்பதால், அதை ரகசியமாகக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு, ‘அதிகாரபூர்வமற்ற முறையில்’ போலீஸ் துணை ஆணையர் சக்தியிடம் (கௌதம் வாசுதேவ் மேனன்) ஒப்படைக்கப்படுகிறது. “பணத்தை கொள்ளையடித்தது நாயகன் செல்வாவும் அவரது ஆட்களும் தான். அந்த பணத்தைக் கொண்டு, படத்தின் ஆரம்பத்தில் தேனி மாவட்டத்தில் பெண் கூலித் தொழிலாளர்களின் உயிர் பறித்த காட்டாற்றின் குறுக்கே – அரசின் உதவி இல்லாமலேயே – செல்வாவும் பொதுமக்களும் பெரிய பாலம் கட்டிக்கொள்கிறார்கள்” என்பதை துணை ஆணையர் சக்தி தான் கண்டுபிடிக்க வேண்டுமா? ‘ஜெண்டில்மேன்’ தொடங்கி 1990களில் வெளியான ஏராளமான ‘ நவீன ராபின்குட்’ திரைப்படங்களைப் பார்த்து ரசித்து, பின் சலிப்படைந்த நீங்களே கண்டுபிடித்துவிட மாட்டீர்களா…?
மேலும், “காட்டாறு அரசுக்கு சொந்தமானது. அதன் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்றால், அது குறித்து நன்முறையில், வன்முறையில், எப்படி வேண்டுமானாலும் அரசை நிர்பந்திக்கலாமேயொழிய, தனியார் யாரும் தங்களிஷ்டத்துக்கு நெடுநெடுவென நீளமான பாலம் கட்டிக்கொள்ள முடியாது” என்பதும் உங்களுக்குத் தெரியும் தானே!
இதுகூட தெரியாமல், ‘படக்குழு’ என்ற பெயரில் ஒரு கும்பல் கூடி திரைப்படம் எடுத்திருப்பது வேதனை!