சட்டம் என் கையில் – விமர்சனம்
நடிப்பு: சதீஷ், அஜய் ராஜ், பாவெல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, கேபிஒய் சதீஷ், வெண்பா, வித்யா பிரதீப், பவா செல்லதுரை, இ.ராமதாஸ், அஜய் தேசாய் மற்றும் பலர்
இயக்கம்: சாச்சி
ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா
படத்தொகுப்பு: மார்ட்டின் டைட்டஸ் ஏ
இசை: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்
தயாரிப்பு: ’சண்முகம் கிரியேஷன்ஸ்’ பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்ய நாராயணன்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)
’சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்’ ஜானரில் உருவாகியிருக்கும் ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தின் மொத்த கதையும் ஒரே இரவில் எழில் கொஞ்சும் ஏற்காடு மலைச்சாலையிலும், ஏற்காடு காவல் நிலையத்திலும் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைச்சாலையில், பனிமூட்டம் நிறைந்த இரவு நேரத்தில், நாயகன் கௌதம் (சதீஷ்) குடிபோதையில் வேகமாக ஓட்டிவந்த காரும், எதிரே, ஹெல்மெட் அணிந்த நபர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து நடக்கிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார். பிணத்தை ஏதாவது ஒரு பள்ளத்தில் வீசி எறிந்துவிடும் எண்ணத்தில் அதை கார் டிக்கியில் வைத்துக்கொண்டு, வேகமாக காரை ஓட்டிச் செல்கிறார் கௌதம். வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போலீசார் கௌதம் காரை மறிக்கிறார்கள். மனதை பதற்றம் தொற்றிக்கொண்டால் பேச்சுக் குழறி வாய் திக்குவது கௌதம் இயல்பு. இப்போது பிணத்துடன் போலீசில் சிக்கிக் கொள்வோமோ என்ற பதற்றத்தில், போலீசாரின் கவனத்தை திசை திருப்ப, “நான் குடிச்சிருக்கேன். என் மேலே ‘டிரங்க் அண்டு டிரைவ்’ கேஸ் போட்டுக்கங்க” என்று திக்கித் திக்கி கௌதம் சொல்ல, அவர் திக்குவதை சப்-இன்ஸ்பெக்டர் பாஷா (பாவெல் நவகீதன்) நக்கலடிக்க, அவரது கன்னத்தில் பளாரென்று கௌதம் அறைந்துவிடுகிறார். இதனால் ஆத்திரப்படும் சப்-இன்ஸ்பெக்டர், காரோடு கௌதமை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுபோய் உட்கார வைத்து விடுகிறார். காருக்குள் பிணம் இருப்பது அவர் உள்ளிட்ட போலீசார் யாருக்கும் தெரியாது.
இதற்கிடையில், அந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாலையில், அதே இரவில் ஒரு பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்த பெண் யார்? கொலையாளி யார்? என்பதை புலன் விசாரணை செய்வதில் இன்னொரு சப்-இன்ஸ்பெக்டரான நாகராஜ் (அஜய் ராஜ்) தீவிரம் காட்டுகிறார்.
அதே நேரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக யார் பதவி உயர்வு பெறுவது என்பது தொடர்பாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவுக்கும், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான நாகராஜுக்கும் இடையே கடும் போட்டியும் ஈகோ யுத்தமும் நடந்து கொண்டிருக்கிறது.
கௌதமின் கார் டிக்கியில் ஓர் ஆணின் பிணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தார்களா? அந்த ஆண் யார்? போலீஸ் நிலையத்தில் இருக்கும் கௌதம் விடுதலையானாரா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டாரா? வெட்டிக் கொல்லப்பட்ட பெண் யார்? அக்கொலையை செய்த கொலையாளி யார்? அவர் போலீசில் சிக்கினாரா? பாட்ஷா, நாகராஜ் ஆகிய இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தம் எந்த எல்லை வரை செல்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன், விறுவிறுப்பாக விடை அளிக்கிறது ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’, ‘தங்கமகன்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சதீஷ், பின்னர் ‘நாய் சேகர்’, ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். அதன் தொடர்ச்சியாக இந்த படத்தில் நாயகன் கௌதமாக, துளியளவும் காமெடி பண்ணாமல் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து, எப்படிப்பட்ட சீரியஸான கதாபாத்திரங்களையும் தன்னால் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை தனது சிறப்பான நடிப்பு மூலம் நிரூபித்திருக்கிறார்.
சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவாக பாவெல் நவகீதன் நடித்திருக்கிறார். வழக்கம்போல் தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான இயல்பான நடிப்பை அளவோடு வழங்கியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜாக அஜய் ராஜ் நடித்திருக்கிறார். இதற்குமுன் சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்த இவருக்கு, இந்த படத்தில் கவனம் ஈர்க்கும் முக்கிய வேடம். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது நடிப்புத் திறமையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வெண்பா, வித்யா பிரதீப், பவா செல்லதுரை, இ.ராமதாஸ், அஜய் தேசாய் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தில் குறைவின்றி நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நாயகன் தனது காரில் பயணிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே அவரிடம் இருக்கும் பதற்றம் படம் பார்க்கும் பார்வையாளர்களிடமும் தொற்றிக் கொள்ளும் வகையில், திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சாச்சி, பிணத்துடன் அவரை காவல் நிலையத்தில் உட்கார வைத்து பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதோடு, தப்பிப்பதற்காக நாயகன் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்துடன் ஒன்றி பயணிக்க வைக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்கள் மூலம் ரசிகர்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவதோடு, அனைத்து விஷயங்களையும் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி படத்தை வேகமாக நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இயக்குநரின் சாமர்த்தியமான கதை சொல்லல் பார்வையாளர்களுக்கு ஒரு அட்டகாசமான கிரைம் திரில்லர் அனுபவத்தைக் கொடுக்கிறது.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை, மார்ட்டின் டைட்டஸின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்து, படத்தின் தரத்தை உயர்த்த உதவியுள்ளன.
’சட்டம் என் கையில்’ – சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு செம விருந்து!