‘தங்கலான்’ தொழில்நுட்ப ரீதியிலும், உள்ளடக்கத்திலும் போதாமை கொண்ட ஒரு படைப்பு!

முதலில் ஒரு டிஸ்களைமர்: நான் தலித் விரோதி அல்ல. என்னைத் தொடர்ந்து படிக்கும் யாருமே அப்படி சொல்லி விட முடியாது. தங்கலான் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட ரஞ்சித்தின் ஒரு கருத்தை ஆதரித்து பதிவிட்டிருந்தேன். காலா, கபாலி, சார்பட்டா, even நட்சத்திரம் நகர்கிறது என்று ரஞ்சித்தின் படங்களை எல்லாம் கொண்டாடி எழுதி இருக்கிறேன்.

அப்படிப்பட்ட நான் தங்கலானை பெருத்த ஆர்வத்துடன்தான் எதிர்கொண்டேன். ஆனால் எனக்கு படத்தின் கதை புரியவே இல்லை. பெரும்பாலான வசனங்கள் புரியவில்லை. இடைவேளையில் கூட வந்திருந்த நண்பர் ‘என்ன நடந்தது?’ என்று கேட்க நான் உதட்டைப் பிதுக்கினேன். ஒருவேளை இரண்டாம் பாதியில் புரிபடும் என்று நினைத்தால் அதே போல பயணிக்கிறது. வசனங்கள் கேட்காமல், கதை புரியாமல் பார்த்ததில் ஒரு பெரிய ஆயாசம்தான் மேலிட்டது.

சரி, வசனங்கள் பழைய தமிழில் எழுதப்பட்டிருப்பதால்தான் எனக்குப் புரிபடவில்லை என்று நினைத்தால் ஏதோ சவுண்ட் குவாலிடி பிரச்சினையாம். அதையெல்லாம் ரீமிக்ஸ் செய்து இன்றைக்கு அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று படித்தேன். Subtitleலும் சேர்த்திருக்கிறார்களாம். ‘இப்போது திரும்பவும் போய்ப் பாருங்கள். அற்புதமான அனுபவமாக இருக்கும்!’ என்று வாசுகி பாஸ்கர் பதிவிட்டிருக்கிறார். நண்பர்களுடன் போனதில் ஏற்கனவே 2000 ரூபாய் செலவு; கதை புரிவதற்கு இன்னொரு 2000 ரூபாய் நான் செலவிட வேண்டுமா?

படம் புரியாதவர்கள் உலக சினிமா தெரியாதவர்கள், Magical Realism பற்றி அறியாதவர்கள் என்று வேறொருவர் எழுதுகிறார். கேப்ரியல் கார்சியா மார்கெஸ் முதல் ருஷ்டி வரை Magical Realism நாவல்கள் படித்திருக்கிறேன். நான் திரைக் கலை ரசிகன், டைம் இதழ் மற்றும் ரோஜர் ஈபர்ட் பட்டியல் படங்கள் மற்றும் உலக சினிமா பிதாமகர்களின் படங்கள் பார்த்திருக்கிறேன். இங்கிலாந்தில் படித்த முதுகலை பட்டத்தில் எலெக்டிவ்-வாக Narration Technques In Classical Hollywood Cinema எடுத்துப் படித்தேன். அதன் பகுதியாக இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். எனவே அந்த விஷயத்திலும் போதாமை கிடையாது.

ஆனால் நியாயமாகப் பார்த்தால் அப்படி ஒருத்தரை சொல்வதே தவறு. ‘உனக்கு உலக சினிமா அறிவு போதவில்லை, எனவேதான் தங்கலான் புரியவில்லை,’ என்று சொல்வதே ஒரு அநியாயம். அப்படி எதுவும் உலக அறிவு தேவைப்படுவதாக படம் வெளியாகும் முன்பு ரஞ்சித் சொல்லவில்லை. இது ஒரு வெகுஜன சினிமாவாக மட்டுமே முன்வைக்கப்பட்டது. இப்போதுதான் ‘டாரண்டினோ தெரியுமா?’, ‘Magical Realism தெரியுமா?’ என்று பேசுகிறார்கள்.

படத்தின் ஆதாரப்பிரச்சினை குழப்படியான திரைக்கதை. அரைகுறையாக அமைக்கப்பட்ட ஒலித்தரம். தெளிவில்லாத எடிட்டிங். யாருக்கு என்ன நடக்கிறது. யார், யாரிடம் சண்டையிடுகிறார்கள் என்று எந்தப் புரிதலும் கொடுக்காத ஸ்டண்ட் திட்டமிடல். விக்ரம், ஓரளவு பார்வதி தவிர வேறு யாருமே முழுமையாக உருவாக்கப்படாத பாத்திரப் படைப்புகள்.

இவையெல்லாம்தான் படத்தின் பிரச்சினைகள். ஒலியை மெருகேற்றுவதோ, subtitle சேர்ப்பதோ, வேறு எந்த முயற்சியுமோ இந்த ஆதாரப் பிரச்சினைகளை சரி செய்து விடாது.

உங்களுக்கு கோலார் தங்க வயலில் தலித்துகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தெரியவில்லை, அதனால்தான் இந்தக் குழப்பம் என்று இன்னொருவர் சொல்கிறார். ‘பொன்னி’ நாவல் குறித்தும் அந்தப் புத்தகத்துக்காக ஷான் கருப்பசாமி செய்த ஆராய்ச்சிகள் குறித்தும் அவருடன் நிறைய உரையாடியதில் அதுவும் ஓரளவு நன்றாகவே தெரியும்.

சரி, அப்படியே அது குறித்து எதுவுமே தெரியாது என்று வைத்துக் கொண்டாலும், அது பார்வையாளன் தவறல்லவே? அந்த வரலாற்றை எனக்குப் புரிய வைப்பதுதானே இயக்குநரின் வேலை? அல்லது அதையும் நானே படித்து விட்டு படத்துக்கு வர வேண்டுமா? ‘விக்ரம் பார்க்கும் முன் கைதி பார்த்து விடுங்கள்,’ என்று லொகேஷ் கனகராஜ் ட்வீட் போட்ட மாதிரி ‘தங்கலான் பார்க்கும் முன் இந்தந்த புத்தகங்களை படித்து விட்டு வந்து விடுங்கள்,’ என்று ரஞ்சித் ஏதாவது ட்வீட் போட்டிருக்கிறாரா? அதை நான் மிஸ் பண்ணி விட்டேனா?

All said and done, தங்கலான் தொழில் நுட்ப ரீதியிலும், உள்ளடக்கத்திலும் போதாமை கொண்ட ஒரு படைப்பு. சவுண்ட் டிசைன், வரலாற்று அறிவு, க்வெண்டின் டாரண்டினோ என்றெல்லாம் சொல்லி அதை மழுப்பப் பார்க்கக் கூடாது. அப்படியெல்லாம் சொல்லி ரஞ்சித்தை ஆறுதல்படுத்த முயற்சி செய்யாதீர்கள். அப்படி செய்தால் அவரது அடுத்த படமும் இதே போன்ற பிரச்சினைகளுடன்தான் வெளிவரும்.

அப்படி செய்யாமல் விமர்சனங்களை நேரடியாக முன்வைத்தால், அவற்றை ரஞ்சித் ஏற்றுக் கொண்டு தெளிவுடன் இயங்கக் கூடும். நமக்கு அடுத்து இன்னொரு மெட்ராஸ், காலா, அல்லது சார்பட்டா கிடைக்கக் கூடும்.

ஸ்ரீதர் சுப்ரமணியம்

(முகநூல் பதிவு)