“சினிமா என்பது அரசியல்; கலை என்பதும் அரசியல்”: ‘தங்கலான்’ படவிழாவில் நடிகை பார்வதி!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வருகிற (ஆகஸ்டு) 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகை பார்வதி பேசுகையில், ” நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை.

ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்காக வழங்கிய இசை – ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றிப்படங்களை வழங்கிய நிறுவனம். இவர்களுடன் இந்த படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இயக்குநர் பா.ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு இந்த படத்தில் நனவானது. அவருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தும் என்னால் பல்வேறு காரணங்களால் ஏற்க இயலாதிருந்தது. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் கங்கம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.‌ ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நிறைய நெருக்கடி கொடுத்தேன். கேள்விகளைக் கேட்டு தொல்லை கொடுத்தேன். ஆனால் அவர் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார்.‌

அவர் உருவாக்கிய கங்கம்மா என்ற கதாபாத்திரம் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய உலகம், அரசியல் இதற்கெல்லாம் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.‌ அவருடைய இயக்கத்தில் கங்கம்மாவாக வாழ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.‌  உடன் நடிக்கும் சக கலைஞர் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இதனைத் தான் நான் ஒரு கலைஞருக்கான குறைந்தபட்ச தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.  ஆனால் உடன் நடிக்கும் சக கலைஞர்கள்- நடிகைகள்- நடிகர்கள் – மீது பேரன்பு கொண்டவர்  விக்ரம். நான் கங்கம்மாவாக வாழ வேண்டும் என்றால் அவர் தங்கலானாக வாழ்ந்தால் தான் முடியும். இதற்காக  விக்ரமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஏற்று நடித்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படப்பிடிப்புத் தளத்தில் மாளவிகா, பசுபதி போன்றவர்கள் நடிக்கும்போது நான் தூரத்தில் இருந்து தான் பார்த்து ரசித்திருக்கிறேன்.‌ படத்தில் என்னுடைய வாரிசுகளாக நடித்த நடிகர்களுடன் ஒரு குழுவாகத் தான் இருப்போம்.‌

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். வெற்றியைப் பெறலாம்.  நம் வாழ்க்கை எப்போதும் அரசியலுடன் தான் இருக்கிறது. நாம் எதை செய்தாலும் அது அரசியல். அந்த வகையில் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல. சுதந்திரம், விடுதலை பற்றி நிறைய பேசுகிறோம்.  இதனை தொடர்ந்து பேச வேண்டும்.‌  பாகுபாடு என்பது இன்றும் ஏன் இருக்கிறது என்பது குறித்தும் பேச வேண்டும். இதைப்பற்றி நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் – இதில் எவ்வளவு அசௌகரியம் இருந்தாலும்.. ஏனெனில் சினிமா என்பது அரசியல்; கலை என்பதும் அரசியல். இதற்காக ரஞ்சித் ஒரு ஆர்மியையே வைத்திருக்கிறார். அவருடைய படை வீரர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என்றார்.

நடிகர் பசுபதி பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு பல சிறப்பு காரணங்கள் இருக்கிறது. முதலாவது காரணம் பா.ரஞ்சித். இந்த கதைக்களம் புதிது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத களம் இது. புது அணுகுமுறை. ரஞ்சித்தின் படங்களில் ஒரு புது தேடல் இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்தது.‌ அவருடைய தேடல் எங்களுக்கானதாகவும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்கும் சிறப்பானது” என்றார்.‌

நடிகர் டேனியல் கால்டாகிரோன் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் ‘நன்றி- வணக்கம் -சென்னை’ ஆகிய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன்.  விக்ரம் எனக்கு சகோதரரை போன்றவர்.‌ அவர் இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர். என்னுடைய வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கம். என்னுடைய சென்னை சகோதரர் விக்ரம். இங்கு வருகை தந்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஓராண்டு பழகி இருக்கிறேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது. இயக்குநர் பா.ரஞ்சித்தும் என்னை கவர்ந்தவர். அவருடைய கற்பனையை நாங்கள் நனவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம்.  ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா இந்திய சினிமாவில் சிறந்த நடிகை. அற்புதமாக நடிக்க்க் கூடிய திறன் படைத்தவர்.  இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், ” இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.‌ தங்கலான் என் இதயத்தின் ஒரு பகுதி. என்னுடைய கலையுலகப் பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை.‌  இந்த ஒன்றரை ஆண்டு கால பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பணியாற்றியபோது மனிதநேயமிக்க கலைஞர்களை சந்தித்தேன்.

ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வேடத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன் இந்திய சினிமாவில் இது போன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்கவில்லை என நினைக்கிறேன்.

விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.‌ சக நடிகையை சௌகரியமாக அக்கறையுடன் அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை.‌ தங்கலான்-  ஒரு கூட்டு முயற்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.