மழை பிடிக்காத மனிதன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், ப்ருத்வி அம்பார், இயக்குநர் ரமணா, ஏ.எல்.அழகப்பன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எஸ்.டி.விஜய் மில்டன்

ஒளிப்பதிவு: எஸ்.டி.விஜய் மில்டன்

படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்

இசை: விஜய் ஆண்டனி & ராய்

தயாரிப்பு: ’இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்’ கமல் போரா, பங்கஜ் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா

இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் ரகசிய ஏஜெண்டாக பணிபுரிகிறார் நாயகன் சலீம் (விஜய் ஆண்டனி). அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை ஒருநாள் தீர்த்துக்கட்டி விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் அமைச்சர் தன் கையாட்களை ஏவி விட, அவர்கள் மழை நேரத்தில் சலீமும் அவரது மனைவி தியாவும் செல்லும் கார் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் தியா பரிதாபமாக உயிரிழக்கிறார். சலீம் படுகாயம் அடைகிறார். (மழை பெய்கையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்வதால், ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிவிடுகிறார் சலீம்.)

சலீம் படுகாயத்துடன் உயிர் பிழைத்தது அமைச்சருக்குத் தெரிந்தால், அவர் மீண்டும் சலீமை கொல்ல முயற்சி செய்வார் என்பதால், “மனைவியோடு சலீமும் இறந்துவிட்டார்” என்ற பொய்ச்செய்தியை பரப்பும் சலீமின் நண்பரான சீஃப் (சரத்குமார்), அவரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கப்பலில் அழைத்துச் சென்று அந்தமானில் விட்டுவிட்டுப் போய்விடுகிறார்.

தன் பழைய அடையாளத்தை மறைத்து அந்தமானில் வாழ்க்கையைத் தொடங்கும் சலீமுக்கு, பர்மா (ப்ருத்வி அம்பார்), சௌமியா (மேகா ஆகாஷ்) என்ற இருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்த இருவருக்கும் தாதா டாலியாலும் (டாலி தனஞ்செயா), காவல்துறை அதிகாரி சுர்லாவாலும் (முரளி சர்மா) பிரச்சனைகள் வர, அதை சரி செய்ய களமிறங்குகிறார் சலீம். இதனால் சலீமுக்கு புதிதாக என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன? அவற்றை அவர் எப்படி சமாளிக்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்‌ஷனுடன் விடை அளிக்கிறது ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் சலீம் என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரது லுக் மற்றும் கெட்டப்  வசீகரிக்கிறது. மிகக் குறைவாக வசனங்கள் பேசி, கடினமாக உழைத்து, ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி, முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தொடரட்டும் அவரது முழு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம்.

நாயகி சௌமியா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். கதையில் அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைவு என்றாலும், கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.

சீஃப்பாக சரத்குமாரும், கேப்டனாக சத்யராஜும் சிறப்புத் தோற்றங்களில் வந்தாலும், தங்கள் அனுபவ நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

தாதா டாலியாக வரும் டாலி தனஞ்செயா தனது தோற்றத்தாலும், வில்லத்தனத்தாலும் கவனம் ஈர்க்கிறார். காவல்துறை அதிகாரி சுர்லாவாக வரும் முரளிசர்மா சில இடங்களில் நக்கலாகவும், சில இடங்களில் மிரட்டலாகவும் நடித்து ரசிக்க வைக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், ப்ருத்வி அம்பார், இயக்குநர் ரமணா, ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.டி.விஜய் மில்டன். விஜய் ஆண்டனியின் கெட்டப்பை கவர்ச்சிகரமாக மாற்றியதில் தொடங்கி, அவரை முழு ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்த்தியது வரை நிறைய மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். “கெட்டவனை அல்ல, கெட்டதைத் தான் அழிக்கணும்” என்ற வலிமையான மெசேஜுடன் சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லராக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும், படத்தை நகர்த்திச் சென்றுள்ளார்.

இயக்குநர் விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். அவரது ஒளிப்பதிவில் அந்தமானின் இயற்கை அழகும், ஆக்‌ஷன் காட்சிகளும் அருமை.

சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகியோரின் சண்டைப்பயிற்சி இயக்கம், இப்பட்த்துக்கு வலிமை சேர்த்துள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் ராய் இசையமைப்பில் பாடலிசையும், பின்னணி இசையும் ஓ.கே ரகம். பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

‘மழை பிடிக்காத மனிதன்’ – பார்க்கலாம்!