போட் – விமர்சனம்

நடிப்பு: யோகி பாபு, குலப்புள்ளி லீலா, சின்னி ஜெயந்த், கௌரி ஜி கிஷன், மதுமிதா, மாஸ்டர் அக்‌ஷத், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் ஷா ரா, ஜெஸ்ஸி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சிம்புதேவன்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ‘மாலி அண்ட் மான்வி மேக்கர்ஸ்’ & ’சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட்’ – பிரபா பிரேம்குமார்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர்களை கதையின் நாயகர்களாக நடிக்க வைத்து, அரசியல், சமூக, பண்பாட்டு அவலங்களை பகடி செய்யும் திரைப்படங்களை எடுப்பவர் என பெயர் பெற்றவர் இயக்குநர் சிம்புதேவன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, சந்தானத்தை வைத்து இயக்கிய ‘அறை எண் 305-ல் கடவுள்’, ராகவா லாரன்ஸை வைத்து இயக்கிய ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணம். இந்த வரிசையில், தற்போது மிகவும் பிரபலமாகவும், பிஸியாகவும் இருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ‘போட்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் சிம்புதேவன். யோகி பாபு – சிம்புதேவன் கூட்டணி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

‘Based On A True incident’ என்ற வாக்கியத்தில் உள்ள சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே ‘Boat’ என்ற தலைப்பு. அதே நேரத்தில், இந்த படம் முழுக்க முழுக்க கடலுக்குள் இருக்கும் ஒரு படகை மையமாகக் கொண்டிருப்பதால், ’படகு’ என்பதன் ஆங்கிலச் சொல்லான ‘போட்’ என்ற பொருளிலும் இந்த தலைப்பு பொருத்தமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ என்ற உலகப் புகழ் பெற்ற நாவல், 1957ஆம் ஆண்டு வெளிவந்த ‘டுவெல்வ் ஆங்கிரி மென்’ என்ற திரைப்படம் ஆகியவற்றின் இன்ஸ்பிரேஷனில் ‘போட்’ படத்தை உருவாக்கியதாக, படத்தின் ஆரம்பத்திலேயே தெரிவித்துவிடுகிறார் இயக்குநர்.

உலகெங்கும் இரண்டாம் உலகப் பெரும் போரும், இந்தியாவில் கூடுதலாக ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 1943ஆம் ஆண்டு இப்படக்கதை நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் பிரதேசங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தும் ஜப்பான் போர் விமானங்கள், சென்னை மீதும் குண்டு வீச திட்டமிட்டிருப்பதாக அவசர செய்தி பரவுகிறது. இதை அறிந்து பதறும் சென்னைவாசிகள் பலர், வீடு வாசல்களை விட்டுவிட்டு, நகரத்தை விட்டே வெளியேறுகிறார்கள். வேறு சிலர் பதுங்குக் குழிகளுக்குள் தஞ்சம் அடைகிறார்கள். நிலத்தை நோக்கித் தான் குண்டு வீசப்படும் என்பதால், நடுக்கடலுக்குள் சென்றுவிட்டால் உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்று கருதும் சென்னை பூர்வக்குடியான காசிமேட்டைச் சேர்ந்த மீனவர் குமரன் (யோகி பாபு), தனது பாட்டி முத்துமாரி (குலப்புள்ளி லீலா) சகிதம் தன்னுடைய துடுப்புப் படகில் ஏறுகிறார்.

படகு புறப்படும் சமயம், குண்டு வீச்சுக்கு பயந்து ஓடிவரும் ஏழு நபர்கள், அவசர அவசரமாக குமரனின் படகில் ஏறிக்கொள்கிறார்கள். பிராமணரான நாராயணன் (சின்னி ஜெயந்த்), அவரது மகளான லட்சுமி (கௌரி ஜி கிஷன்), தெலுங்கு பேசும் கர்ப்பிணிப் பெண்ணான விஜயா (மதுமிதா), அவரது மகனான மகேஷ் (மாஸ்டர் அக்‌ஷத்), வட நாட்டு வியாபாரியான சேட்டு (சாம்ஸ்), நூலகரும், இறை மறுப்பாளருமான முத்தையா (எம்.எஸ்.பாஸ்கர்), எழுத்தாளரும் முகமது அலி ஜின்னாவை ஆதரிக்கும் இஸ்லாமியருமான ராஜா (ஷா ரா) ஆகியோர் தான் அந்த ஏழு நபர்கள்.

ஆக மொத்தம் ஒன்பது பேருடன் படகுப் பயணம் தொடங்குகிறது. போகும் வழியில், தன் படகு விபத்துக்குள்ளாகி மூழ்கியதால் கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியான இர்வின் தோமஸ் (ஜெஸ்ஸி) குமரனின் படகில் ஏறிக்கொள்ள, அப்படகில் பயணிப்போரின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துவிடுகிறது.

இதன்பின்னர் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் ஏற்படும் சலசலப்பால் படகு சேதமடைய, கடல்நீர் படகுக்குள் நுழையத் தொடங்குகிறது. அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், அதன் எடையைக் குறைக்க, படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும் என்கிறார் படகுக்காரரான குமரன். நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும்? மூன்று பேர் கடலில் குதித்து உயிரை விட்டால், மற்ற ஏழு பேர் கரைக்குப் போய் சேர முடியும் என்ற நிலையில், தற்கொலை செய்துகொள்ள முன்வரும் மூவர் யார் என்று விவாதிக்கிறார்கள். தற்கொலை செய்ய இயலாமல் தாங்கள் உயிர் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம் தங்களுக்கு இருப்பதாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, படகை ராட்சச சுறா ஒன்று சுற்றி வளைக்கிறது.

இறுதியாக கடலுக்குள் குதித்தவர்கள் யார்? சுறாவுக்கு பலியானவர்கள் எத்தனை பேர்? கரை சேர்ந்தவர்கள் யார் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத திருப்பங்களுடனும் விடை அளிக்கிறது ‘போட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, சென்னையின் பூர்வக்குடியாக, காசிமேடு மீனவர் குமாராக யோகி பாபு நடித்திருக்கிறார். தனது வழக்கமான உருவ கேலி நகைச்சுவை வசனங்களைப் பேசி எரிச்சலூட்டாமல், இயக்குநர் சிம்புதேவன் சொன்னதை மட்டும் பேசி, அடக்கமாக, இயல்பாக நடித்திருப்பது கதைக்கு பலமாகவும், ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. “இது என் ஊர்; என் போட்” என்று சொல்லும்போது, உரிமைக்குப் போராடும் பூர்வக்குடியை பிரதிபலித்திருக்கிறார்.

நாயகனுடன் படகில் பயணிக்கும் குலப்புள்ளி லீலா, சின்னி ஜெயந்த், கௌரி ஜி கிஷன், மதுமிதா, மாஸ்டர் அக்‌ஷத், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் ஷா ரா, ஜெஸ்ஸி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். ஒரு சிறிய படகில் அனைவரும் அமர்ந்தபடி நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும், வசனங்களுக்கு ஏற்ப, தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

”உலகத் தரத்திலான தமிழ் சினிமா”வாக இப்படத்தைப் படைக்க அரும்பாடு பட்டிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். அதற்காக அவரை பாராட்ட வேண்டும்.

ஒரு படகில் வெவ்வேறு சூழ்நிலைகளையும், மனநிலைகளையும் கொண்ட மனிதர்கள், அவர்களுக்குப் பொதுவான ஒரு குறிக்கோளும், தனித்தனியான குறிக்கோளும் இருக்க, அதை நிறைவேற்ற, அவர்கள் என்னென்ன அவதாரங்கள் எடுக்கிறார்கள், எந்தெந்த எல்லைகளுக்குச் செல்கிறார்கள் என்பதைக் காட்ட முயன்றிருக்கும் இயக்குநர் சிம்புதேவன், அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.

சென்னையின் பூர்வக்குடிகளான மீனவர்களின் சமூக நிலை, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா, அபத்தமான சாதி அடுக்குகளும் சாதிய பாகுபாடுகளும், கோயில் நுழைவு போராட்டம், உணவு அரசியல், நீதிக்கட்சி, காங்கிரஸ், முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சிகளின் சமூக – விடுதலைப் போராட்ட பங்களிப்புகள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாலுள்ள அரசியல், நேதாஜியின் இந்திய தேசியப் படை

எனப் பல விஷயங்களை நெற்றிப் பொட்டில் அடிக்கிற மாதிரி நறுக்கெனப் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன சில வசனங்கள். பிரிட்டிஷ் மகாராஜா தொடங்கி, இங்கேயுள்ள உழைக்கும் மக்கள் வரைக்கும் விரிந்திருக்கும் சமூக படி நிலையை காமெடியாக விவரிக்கும் காட்சி கலக்கல்!

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் பின்னணி இசை, தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு, டி.சந்தானத்தின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்துக்கு பிரமாண்டத்தையும், நேர்த்தியையும், பலத்தையும் அளித்துள்ளன.

‘போட்’ – தரமான, வித்தியாசமான படம் பார்க்க ஏங்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!