ராயன் – விமர்சனம்
நடிப்பு: தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன், இளவரசு மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: தனுஷ்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு: பிரசன்னா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகம்மது
’நடிப்பு அசுரன்’ என கொண்டாடப்படும் தனுஷ் நடித்துள்ள 50-வது திரைப்படம், அவர் எழுதி இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள முதல் தனுஷ் படம், ’சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள படம் என்ற தகவல்களோடு, ரிலீஸுக்கு முன் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய டீசர், டிரைலர், லிரிக் வீடியோ போன்றவையும் சேர்ந்து திரைத்துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ராயன்’. இந்த எதிர்பார்ப்பை இப்போது திரைக்கு வந்திருக்கும் ‘ராயன்’ பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
படம் பிளாக் அண்ட் ஒயிட்டில் ஆரம்பமாகிறது. தென் தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள ஒரு குக்கிராமம் காட்டப்படுகிறது. இங்குள்ள எளிய குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த பதிமூன்று அல்லது பதினான்கு வயது மதிக்கத் தக்க சிறுவன் ராயன் என்ற காத்தவராயன். அவனுக்கு முத்துவேல் ராயன், மாணிக்கவேல் ராயன் என்ற இரண்டு தம்பிகளும், கைக்குழந்தையாக துர்கா என்ற தங்கையும் இருக்கிறார்கள். ஒருநாள் இவர்களுடைய அம்மாவும் அப்பாவும், “சாயந்திரம் வீட்டுக்கு வந்துருவோம்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிப் போனவர்கள், இருட்டிய பிறகும் வீடு திரும்பாததால் பிள்ளைகள் பதட்டமடைகிறார்கள். இதில் கனமழையும் சேர்ந்துகொள்ள, ஒழுகுகிற வீட்டைவிட்டு இரவோடு இரவாக வெளியேறி, ஒரு பூசாரியின் வீட்டில் தஞ்சம் புகுகிறார்கள். அந்த பூசாரி, கைக்குழந்தையான தங்கை துர்காவை விலைக்கு விற்பதற்காக கடத்த முயலுவதைக் கண்டு ஆவேசம் கொள்ளும் ராயன், கத்தியை எடுத்து ஒரே வெட்டில் பூசாரியை வெட்டி வீழ்த்திவிட்டு, தங்கையை மீட்டு, தம்பிகளையும் அழைத்துக்கொண்டு, ஊரைவிட்டு வெளியேறி, காய்கனி ஏற்றிச் செல்லும் வேனில் ஏறி, சென்னை மார்க்கெட் வந்து சேருகிறான். மார்க்கெட்டில் அவர்களுக்கு சேகர் என்பவர் (செல்வராகவன்) அடைக்கலம் கொடுத்து உதவிகள் செய்கிறார். ராயன் அங்கு கிடைத்த சிறுசிறு வேலைகளைச் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தம்பிகளையும், தங்கையையும் பொறுப்பாக வளர்த்து வருகிறான்.
காட்சிகள் வண்ணத்துக்கு மாற, ராயன் என்ற காத்தவராயன் தனுஷாகவும், அவரது மூத்த தம்பி முத்துவேல் ராயன் சந்தீப் கிஷனாகவும், இளைய தம்பி மாணிக்கவேல் ராயன் காளிதாஸ் ஜெயராமாகவும், தங்கை துர்கா துஷாரா விஜயனாகவும் வளர்ந்திருக்கிறார்கள். தம்பிகளுக்கும், தங்கைக்கும் அண்ணனுக்கு அண்ணனாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருக்கும் ராயன், சிறிய அளவில் ’ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் நடத்தி வருகிறார். இளைய தம்பி மாணிக்கவேல் ராயன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். மூத்த தம்பி முத்துவேல் ராயனோ வேலைவெட்டிக்குப் போகாமல், குடித்துவிட்டு ஊர் சுற்றுவது, முன்கோபத்தில் அடிதடியில் இறங்குவது, மேகலையை (அபர்ணா பாலமுரளி) காதலித்துக்கொண்டே வேறு பெண்களிடமும் தப்பான சகவாசம் வைத்துக்கொள்வது என கொஞ்சம் துஷ்டனாகத் திரிகிறார். என்றாலும், இரு தம்பிகளும் நேரம் கிடைக்கும்போது, ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு வந்து அண்ணன் ராயனுக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள். தங்கை துர்கா வீட்டில் இருந்துகொண்டு குடும்பத்தை நிர்வாகம் செய்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறார் அண்ணன் ராயன்.
ராயன் வசிக்கும் ஏரியாவில் துரை (சரவணன்), சேதுராமன் (எஸ்.ஜே.சூர்யா) என இரண்டு தாதாக்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான தொழில் போட்டி நிரந்தரப் பகையாக மாறி அடிக்கடி மனித ரத்தம் பார்க்கிறது. அந்த ஏரியாவுக்கு மாற்றலாகி வரும் புதிய போலீஸ் அதிகாரி (பிரகாஷ்ராஜ்) இரண்டு தாதாக்களையும் மோதவிட்டு, ஒருவரை ஒருவர் அழிக்கும்படி செய்து, ரவுடியிசத்துக்கு முடிவுரை எழுத சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஒருநாள் குடிபோதையில் ஏற்பட்ட கைகலப்பில், தாதா துரையின் மகனை – அவன் தாதா துரையின் மகன் என்பது தெரியாமலேயே – ராயனின் மூத்த தம்பி முத்துவேல் ராயன் கொன்று விடுகிறார். இது தெரிந்து ஆத்திரம் கொள்ளும் தாதா துரை, பழி தீர்ப்பதற்காக, முத்துவேல் ராயனை தன்னிடம் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு ராயனுக்கு கட்டளை இடுகிறார். இதை ஏற்க மறுக்கும் ராயன், சிறு வயதில் தங்கையைக் காக்க பூசாரிக்கு எதிராக கத்தி எடுத்ததைப் போல இப்போது மூத்த தம்பியைக் காக்க ஆயுதம் எடுக்கிறார். தம்பிகளோடு சேர்ந்து தாதா துரையையும், அவரது அடியாட்களையும் கமுக்கமாகக் கொன்று குவிக்கிறார். எனினும், இதை மோப்பம் பிடித்துவிடும் தாதா சேதுராமன், ராயனை தன்னுடன் வந்து சேர்ந்துகொள்ளுமாறு அழைக்கிறார். ராயன் மறுக்கவே, “இப்படிப்பட்ட ஒருத்தன் ஒண்ணு நம்மோடு இருக்கணும். இல்லேன்னா பொணமாக்கிடணும்” என்ற முடிவுக்கு வருகிறார் தாதா சேதுராமன்.
இதன்பின் என்ன நடந்தது? மோதலில் வென்றது யார்… சேதுராமனா, ராயனா? இதில் போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி விளையாட்டு என்ன? ராயனின் தம்பிகள் – தங்கை என்ன ஆனார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு பல்வேறு திடீர் திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ராயன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, ராயன் என்ற காத்தவராயன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். ‘மொட்டைத் தலை’ என்று சொல்லுமளவுக்கு ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி, கொஞ்சம் அடர்த்தியாய் கீழிறக்கி நுனியில் முறுக்கிவிடப்பட்ட மீசை, சதா சர்வகாலமும் இறுக்கமான முகம் என்ற லுக் தனுஷுக்கு பிரமாதமாகவும், கேரக்டருக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது. அப்பா – அம்மா இல்லாத குடும்பத்தில் கண்டிப்பும், பாசமும், பொறுப்பும் உள்ள அண்ணனாக அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தவிர்க்க இயலாமல் ஆயுதம் எடுத்து சம்பவம் செய்ய நேர்கையில், முற்றிலும் வேறான – ஒரு தாதாவுக்கு உரிய – கம்பீரமான உடல்மொழியை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். தம்பிகளிடம் கறார் காட்டினாலும், தங்கையோடு பேசும்போது மட்டும் இளகி மெழுகாய் உருகுவது டச்சிங். படம் முழுக்க தனுஷையும், நடிப்பு என்ற பெயரில் அவர் செய்யும் மேஜிக்கையும் கண்கொள்ளாமல் பிரமிப்போடு பார்த்துக்கொண்டே இருக்கலாம். பாராட்டுகள்.
நாயகனின் பாசத்துக்குரிய தங்கை துர்கா என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். தனுஷுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பது துஷாரா விஜயன் தான். துர்கா கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் ராயனை அழகாகப் பார்க்க ஆசைப்பட்டு, “ஏன்’ண்ணே எப்பவும் மொட்டைத் தலையாவே இருக்க?” என்று ஆத்மார்த்தமாக கேட்பது, படுத்த படுக்கையாக இருக்கும் ராயனைக் கொல்ல முயலும் ரவுடிக் கும்பலை, சிங்கப்பெண்ணாக சீறிப் பாய்ந்து வெட்டி எறிவது, கிளைமாக்ஸில் சின்ன அண்ணனைப் பார்த்து, “அண்ணனை எப்படிடா குத்தினே?” என்று கத்தியபடியே அவர் வயிற்றில் கத்தியை சொருகுவது என தன் கதாபாத்திரத்துக்கு மாஸாக உயிருட்டி, நிறைய கைதட்டல்கள் பெறுகிறார் துஷாரா விஜயன்.
நாயகனின் மூத்த தம்பி முத்துவேல் ராயன் கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். யாருக்கும் அடங்காமல் குடியும் கும்மாளமுமாய் விட்டேத்தியாய் திரிவது, எதற்கெடுத்தாலும் சட்டென அடிதடியில் இறங்குவது, கன்னத்தில் காதலி அறைந்தாலும் வெட்கமே இல்லாமல் வாங்கிக் கொள்வது, காதலியின் அப்பாவாக வரும் இளவரசை தெருவில் ஓட ஓட விரட்டியடிப்பது என துடுக்குத்தனமாய் துடியாக நடித்து கவனம் பெறுகிறார் சந்தீப் கிஷன். இவரது காதலி மேகலை கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். உருண்டு திரண்ட செழிப்பான உடற்கட்டுடன் அசல் குப்பத்துப் பெண்ணாகவே வந்து தன் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார் அபர்ணா.
நாயகனின் இளைய தம்பி மாணிக்கவேல் ராயன் கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அண்ணன் சொன்னதால், அதைக் கேட்டு போட்டியிலிருந்து விலகிக்கொள்ளும் அளவுக்கு அண்ணனுக்கு அடங்கிய நல்ல தம்பியாக முதலில் இருப்பது, பின்னர் இரண்டாம் பாதியில் மனம் குழம்பி தலைகீழாய் மாறிப்போவது என்ற கதாபாத்திரத்தை திறம்பட கையாண்டிருக்கிறார் காளிதாஸ்.
நாயகனுக்கும், அவரது தம்பிகள் – தங்கைக்கும் சென்னையில் அடைக்கலம் கொடுத்து உதவிகள் செய்யும் சேகர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் செல்வராகவன், தாதா துரை கதாபாத்திரத்தில் ஒரு வில்லனாக வரும் சரவணன், தாதா சேதுராமன் கதாபாத்திரத்தில் மற்றொரு வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா, அவரது முதல் மனைவியாக வரும் வரலட்சுமி சரத்குமார், போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் யதார்த்தமாக நடித்து, தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ‘பவர் பாண்டி’ படத்தை ஃபீல் குட் திரைப்படமாக இயக்கி, தமிழ் திரைத்துறையில் வெற்றிப்பட இயக்குநராக அறிமுகமான தனுஷ், இப்போது ‘ராயன்’ திரைப்படத்தை குடும்ப செண்டிமெண்ட் – குறிப்பாக அண்ணன் தங்கை பாசம் – கலந்த அதிரடி ஆக்ஷன் திரில்லராக இயக்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் நுணுக்கமாக வேறுபடுத்தி சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். உதாரணமாக தனது கதாபாத்திரத்துக்கு பிற இயக்குநர்கள் போல் இல்லாமல் அறிமுக பில்டப் கொடுக்காமல், ஜோடி தராமல், காதல் இல்லாமல், டூயட் இல்லாமல், பஞ்ச் வசனம் பேசாமல், எளிமையாக கதையோடு அறிமுகமாகி ஆட்டத்தை ஆடுமாறு செய்திருக்கிறார். அதுபோல், ஆக்ஷன் படங்களில் பெண் கதாபாத்திரங்களை உதிரிகளாகப் பயன்படுத்தும் பிற இயக்குநர்கள் போல் இல்லாமல், கதையில் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி கதாபாத்திரங்களை படைத்திருக்கிறார். படத்தில் சிறிது நேரமே வரும் வரலட்சுமி சரத்குமாரை ஒரு காட்சியில் நமட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்து திரையரங்கம் அதிர அப்ளாஸ் அள்ள வைத்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு ஃபிரேமையும் இன்றைய இளம் தலைமுறைக்குப் பிடிக்கும் வகையில் அற்புதமாக செதுக்கி, சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்று, இதை வெற்றிப்படமாக படைத்தளித்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
படத்தில் தனுஷ் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் சந்தேகமே இல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். மிகப் பெரிய பலமாய் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது அவரது பின்னணி இசை. படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் போடும்போதே சிலிர்க்க வைக்கும் பின்னணி இசை, “இசை யார்?” என கேட்க வைக்கிறது. பின்னர் “இசை – ஏ.ஆர்.ரஹ்மான்” என்ற டைட்டில் வரும்போது மனம் பேருவகை கொள்கிறது. படம் முழுக்க நல்லதொரு கதாபாத்திரமாகவே பின்னணி இசை சிறப்பாக பயணித்திருக்கிறது. பாடல்களும் ரசிக்கவும், முணுமுணுக்கவும் வைக்கின்றன.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு, பிரசன்னாவின் படத்தொகுப்பு, ஜாக்கியின் கலை இயக்கம், பீட்டர் ஹெய்னின் ஸ்டண்ட் இயக்கம், பிரபு தேவா மற்றும் பாபா பாஸ்கரின் நடன இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்ப வளங்கள் அனைத்தும் படத்தின் செழுமைக்கும் நேர்த்திக்கும் பங்களிப்புச் செய்து, இயக்குநர் தனுஷின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
அதீத வன்முறைக் காட்சிகள் இருப்பதால் தான் படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ்கூட அல்ல; ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்பிறகும் ஐயோ, கத்தி, குத்து, ரத்தம் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம் இல்லை.
ராயன் – பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பினரும் தனுஷுக்காக பார்க்கலாம்…! நடிகர் தனுஷுக்காக மட்டும் அல்ல; இயக்குநர் தனுஷுக்காகவும்…!