டீன்ஸ் – விமர்சனம்
நடிப்பு: ராதாகிருஷ்ணன் பார்த்திபன், யோகி பாபு, தீபேஸ்வரன், ஃபிராங்கின்ஸ்டன். கே.எஸ்.தீபன், விஷ்ருதா ஷிவ், ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், டி.அம்ருதா, அஸ்மிதா மகாதேவன், உதய் பிரியன், பி.கிருத்திகா, டி.ஜான் பாஸ்கோ, ரோஷன், பிரசிதா நசீர் மற்றும் பலர்
இயக்கம்: ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
ஒளிப்பதிவு: கேவ்மிக் ஆரி
இசை: டி.இமான்
தயாரிப்பு: கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி ஸ்ரீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
பதிமூன்று, பதினான்கு வயதிலிருக்கும் பதின்ம வயது (டீன் ஏஜ்) சிறுவர் – சிறுமியர் 12பேர். ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள். பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். அவர்களது வயதினருக்கே உரிய வழக்கப்படி, தங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்களை குறை கூறி, அதிருப்தியுடன் ஒருநாள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “நாம இப்ப குழந்தைகள் இல்ல. பெரியவர்கள் ஆயிட்டோம். அது நம்மை பெத்தவங்களுக்குத் தெரியலை. இன்னும் சின்னப் பிள்ளையாவே நம்மை ட்ரீட் பண்றாங்க. ஃபாரின்ல எல்லாம் நம்ம வயசு பிள்ளைகளை அவங்க பேரண்ட்ஸ் பெரியவர்களா பார்க்குறாங்க. அது போல நம்ம பேரண்ட்ஸ் நம்மையும் ஈக்குவலா பார்க்கணும். பார்க்க வைக்கணும். என்ன செய்யலாம்?” என்று விவாதிக்கிறார்கள்.
அப்போது ஒரு சிறுமி, “எங்க பாட்டியின் ஊர்ல ஒரு கிணறு இருக்கு. அந்த கிணத்துக்குள்ள பேய் இருக்குனு சொல்லுவாங்க. நாம போய் பெரியவங்க மாதிரி பேயை தைரியமா நேரில் பாத்துட்டு வந்து, நாங்களும் பெரியவங்க தான்னு நிரூபிப்போம்” என்று சொல்ல, அந்த யோசனை மற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் பிடித்துப்போகிறது. வகுப்பை கட் அடித்துவிட்டு பெற்றோர்களுக்குத் தெரியாமல் கிளம்பிச் செல்கிறார்கள். அப்படி செல்லும் வழியில் தங்கள் வயதையொத்த ஒரு சிறுவனையும் சேர்த்துக்கொண்டு 13 பேராகப் போகிறார்கள்.
இடையில், சாலையில் நடக்கும் போராட்டத்தால் அவர்கள் செல்லும் பேருந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் போக, ‘முன் வைத்த காலை பின்வைக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் அவர்கள் கிராமத்தை நோக்கி காட்டுப்பாதையில் நடந்து செல்கிறார்கள்.
வழியில், பெரியவர்கள் போல கள் குடிக்கிறார்கள். ஒரு சிறுமி ஒரு பையனைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறார். ஒரே ஆட்டமும் பாட்டமுமாக வம்பளந்துகொண்டே நடந்துபோகிறார்கள்.
அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று காணாமல் போக, அவரை தேடும்போது ஒவ்வொருவராக மாயமாகிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கும் இங்குமாக சிறுவர்கள் ஓடிக் கொண்டிருக்க, மறுபக்கம் ஒவ்வொருவராக மாயமாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களின் இந்த திடீர் மாயத்தின் பின்னணி என்ன? மாயமானவர்களின் கதி என்ன? அவர்கள் மீண்டு வந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் பதின்ம வயதினரான 13 சிறுவர் சிறுமிகளும் நடிப்பு, வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்திலும் போட்டிபோட்டு நடித்தும், டான்ஸ் ஆடியும் தங்கள் திறமைகளை அசால்ட்டாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கே.எஸ்.தீபன் ஏற்றுள்ள ’அய்யங்காளி’ கேரக்டர் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. ’சாரா’வாக வரும் பி.கிருத்திகாவின் மென்மையான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ’அபூர்வா’வாக வரும் விஷ்ருதா ஷிவ், ’நைனிகா’வாக வரும் அஸ்மிதா மகாதேவன், ’அஃபில்’லாக வரும் ஃபிராங்கின்ஸ்டன், ’நஃபில்’லாக வரும் சில்வென்ஸ்டன், ’டிலன்’னாக வரும் எல்.ஏ.ரிஷி ரத்னவேல் நன்றாக நடித்துள்ளனர்.
படத்தின் இரண்டாம் பாதியில் நாசா விஞ்ஞானி ஜனார்த்தனனாக ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி போல் இருந்தாலும், வழக்கமான நக்கல் நையாண்டி இல்லாமல், தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை மட்டும் வழங்கியிருக்கிறார்.
சாமியாராக வரும் பெண்ணின் நடிப்பும் கூட தேவலை. ஆனால், தணிகாசலமாக கொஞ்ச நேரம் மட்டும் வரும் யோகி பாபு இந்த படத்தில் எதற்கு வருகிறார்? இந்த கதைக்குள் அவர் யார்? என்றே தெரியவில்லை. வேஸ்ட்.
படத்துக்குப் படம் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அதே வேட்கையுடன் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முதல் பாதியை பேய்ப்படமோ என்று சந்தேகிக்கும்படி திரைக்கதை அமைத்து, இரண்டாம் பாதியை அறிவியல் புனைவாக நகர்த்தி, இப்படத்தை அட்வஞ்சர் திரில்லர் ஜானரில் படைத்தளித்திருக்கிறார். ஓரிரு சிறுவர்களை நடிக்க வைத்து படம் எடுப்பதே சிரமம் என்ற நிலையில், 13 சிறுவர் சிறுமிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பாத்திரத்தின் தன்மையையும், நடிப்பையும் கற்றுக் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார். பாராட்டுகள். படம் என்ன வசூல் செய்யும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கு ஏற்ப, ‘விரலுக்குத் தகுந்த வீக்கம்’ என்பது போல, புத்திசாலித்தனமாக மிக மிகக் குறைந்த பட்ஜெட்டில் இதை எடுத்திருக்கிறார். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி, படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால், நாம் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
விஎஃப்எக்ஸ் பணிகள் ஓ.கே ரகம்.
டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. “பிப்ளி பிப்ளி” பாடல் செம. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி, பட்ஜெட்டுக்கு ஏற்ப, தன் வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
’டீன்ஸ்’ – புதுமை பித்துப்பிடித்த ‘புதுமைப்பித்தன்’ ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் மற்றுமொரு புதுமையான முயற்சி. கண்டு களிக்கலாம்!