பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை: தலைவர்கள் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜுலை 5) இரவு வழக்கம் போல் ஆம்ஸ்ட்ராங் தன் வீட்டின் முன் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட மாநில அரசியல் தலைவர்களும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

11 பேர் கைது:

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பொன்னை பாலு (வயது 39), சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய எட்டுப்பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொன்னை பாலு என்பவர், கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆவார். தனது அண்ணன் கொலை விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்குக்கு மறைமுகத் தொடர்பு இருந்ததாக பொன்னை பாலு கருதி வந்தார். எனவே தனது அண்ணன் கொலைக்கு பழி தீர்க்க நேரம் பார்த்து காத்திருந்து, கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையம் சாவடி தெருவைச் சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (26) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.