40க்கு 40: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி!
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகம், புதுச்சேரியை பொருத்தவரை, திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக, தேமுதிக இணைந்து ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி முடிந்த பிறகு, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.
கடந்த ஜூன் 1-ம் தேதி இறுதி கட்ட தேர்தல் முடிந்த நிலையில் அன்று மாலை,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்றே பெரும்பாலான கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியின் 40 மையங்களிலும், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டதால், காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கியது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டும் திமுக, பாஜக, அதிமுக வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.
மற்ற அனைத்து தொகுதிகளிலும், தொடக்கம் முதலே திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிமுகத்தில் இருந்தனர். இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
மாலை 3 மணி அளவில், அனைத்து தொகுதிகளும் திமுக கூட்டணி வசமாகின. இறுதி நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கைப்பற்றியது.
உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளர் போட்டியிட்ட நாமக்கல் உட்பட 22 தொகுதிகளில் திமுகவும், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வசமாகியுள்ளன. கடந்த 2004 மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றியது. கடந்த 2019 தேர்தலில் தேனி தவிர்த்து மற்ற 39 தொகுதிகளையும் வசமாக்கியது. தற்போது மீண்டும் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.