ஹிட் லிஸ்ட் – விமர்சனம்

நடிப்பு: விஜய் கனிஷ்கா, ஆர்.சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஷாஜி சென், சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபி நட்சத்திரா, அனுபமா குமார், ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப் – கருடா ராம்), முனிஷ்காந்த், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்

இயக்கம்: சூர்யக்கதிர் காக்கல்லர் & கே.கார்த்திகேயன்

ஒளிப்பதிவு: கே.ராம்சரண்

படத்தொகுப்பு: ஜான் ஆபிரஹாம்

இசை: சி.சத்யா

தயாரிப்பு: ‘ஆர்.கே. செல்லுலாயிட்ஸ்’ கே.எஸ்.ரவிக்குமார்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அஹமத்

குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த‌ தமிழ் திரையுலக ஜாம்பவானான இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படம் என்பதாலும், ஏராளமான கமர்ஷிஷியல் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து சகல தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய இன்னொரு ஜாம்பவானான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படம் என்பதாலும், ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்திற்கு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

கதை சென்னை மாநகரில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் வழியில் ‘உயிர் கொல்லாமை’ என்ற உன்னதக் கோட்பாட்டை தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து நடப்பதோடு, அதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்கான செயல்பாடுகளிலும் ஈடுபடுபவர் நாயகன் விஜய் (விஜய் கனிஷ்கா). பொறியில் சிக்கிய எலியைக் கூட பக்கத்து வீட்டுக்காரர் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக அது தப்பியோட வழிவகை செய்பவர். ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவரை, உடன் வேலை செய்யும் இளம்பெண்கள் பிடித்துப்போய், டேட்டிங் அழைத்துச் சென்றால், அங்கு அவர் ”பழைய பஞ்சாங்கமாய்” பேசுவதைப் பார்த்து, ’ஏன் தான் இவரை டேட்டிங் அழைத்து வந்தோமோ’ என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக மனம் நொந்து, முடிவில் “விஜய் அண்ணா…” என்று அழைத்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இப்படியாக, அவரது அலுவலகத்தில் அவருக்கு “இன்ஸ்டண்ட் தங்கைகள்” அதிகம்!

போலீஸ் அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கிறார் யாழ் வேந்தன். அவரது மனைவிக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று, “உயிர்களைக் கொல்லக் கூடாது” என்பதை வலியுறுத்துவதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறது. சிறப்பு விருந்தினராக யாழ் வேந்தன் அதில் கலந்துகொள்கிறார். “ஆடு, மாடு போன்றவற்றை உண்ணக் கூடாது என்றால், காய், கனியிலும் உயிர் இருக்கிறதே; அவற்றை உண்பது மட்டும் எப்படி சரியாகும்?” என்ற கேள்வி அந்நிகழ்ச்சியில் எழுப்பப்படுகிறது. இதற்கு ஜீவகாருண்யரான விஜய் தர்க்க ரீதியில் தக்க பதில் அளிக்கிறார். நிகழ்ச்சியின் முடிவில், “உயிர் கொல்லாமையை வலியுறுத்தும் உங்களது உலகம் வேறு; எனது உலகம் வேறு” என்று விஜய்யிடம் சொல்கிறார் யாழ் வேந்தன்.

சற்று நேரத்தில், விஜய்யின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் ஒரு மர்ம ஆசாமியின் குரல், அவரது தாயையும் (சித்தாரா), தங்கையையும் (அபி நட்சத்திரா) கடத்தி வைத்திருப்பதாகக் கூறுகிறது. அதைக் கேட்டு அதிச்சி அடையும் விஜய், உடனடியாக அருகிலிருக்கும் அசிஸ்டண்ட் கமிஷனர் யாழ் வேந்தனிடம் அது பற்றி கூறுகிறார்.

தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளும் யாழ் வேந்தன், விஜய்யை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாருக்கு உத்தரவிடுகிறார். விஜய்யின் மொபைலில் உளவு செயலியை பதிவேற்றம் செய்யச் சொல்வதோடு, பைக்கில் ஜிபிஎஸ் ட்ராக்கரை பொருத்துமாறு கூறுகிறார். அவரது சட்டையில் ஒரு பட்டன் கேமிராவும் பொருத்தப்படுகிறது.

காவல் நிலையத்தில் இருக்கும் விஜய்யை வீடியோ காலில் அந்த மர்ம ஆசாமி தொடர்பு கொள்கிறார். முகமூடி அணிந்திருக்கும் அந்த மாஸ்க் மனிதனின் குரல் கரகரவென்று கேட்கிறது. தாய், தங்கை கடத்தப்பட்ட காரைக் கொண்டு தன்னை கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லும் அந்த மாஸ்க் மனிதன், அந்த காரை ஒரு ட்ரக்கில் ஏற்றிய வீடியோவை அனுப்புகிறான். “நான் சொல்வதை மட்டும் செய்; போதும்” என்று மிரட்டுகிறான்.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும் விஜய்யை, ஒரு கோழிக்கடைக்குள் சென்று ஒரு சேவலை வாங்குமாறு கட்டளையிடுகிறான் மாஸ்க் மனிதன். அதன்படி ஒரு சேவலை வாங்கிக்கொண்டு தன் வீட்டுக்குள் செல்லும் விஜய்யை, மீண்டும் வீடியோ காலில் அழைக்கும் மாஸ்க் மனிதன், சேவலைக் கத்தியால் வெட்டிக் கொல்லுமாறு உத்தரவிடுகிறான். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் விஜய் ”முடியவே முடியாது” என்று மறுக்க, அவரது தாயும் தங்கையும் சித்திரவதை செய்யப்படும் வீடியோவைக் காட்டுகிறான் மாஸ்க் மனிதன். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல் விஜய் அந்த சேவலை வெட்டிக் கொல்கிறார். உயிரை கொல்லக் கூடாது என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் விஜய், சேவலை வெட்டிக் கொன்றதை வீடியோ காலில் பார்த்து ரசிக்கும் மாஸ்க் மனிதன், “ இதே போல் நான் சொல்லும் ஒரு ஆளை நீ கொல்ல வேண்டும்” என்கிறான். விஜய் பேரதிர்ச்சி அடைகிறார்.

யார் அந்த மாஸ்க் மனிதன்? அவனுடைய பின்னணி என்ன? அவன் யாரை கொல்ல வேண்டும் என்கிறான்? அந்த நபருக்கும் மாஸ்க் மனிதனுக்கும் அப்படி என்ன பகை? மாஸ்க் மனிதன், தானே நேரில் சென்று கொல்லாமல், விஜய்யின் அம்மா, தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு, அவர் மூலம் கொல்ல நினைப்பது ஏன்? விஜய்க்கும் மாஸ்க் மனிதனுக்கும் என்ன தொடர்பு?” என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் விஜய்யாக அறிமுக நடிகர் விஜய் கனிஷ்கா நடித்திருக்கிறார். உயிர் கொல்லாமை கொள்கையைக் கடைப்பிடிக்கிற அதே நேரத்தில் கொலைகளும் செய்ய வேண்டும் என்ற கனமான, சிக்கலான கதாபாத்திரத்தை மிகுந்த பொறுப்புணர்வுடன், திறமையாக கையாண்டிருக்கிறார். ஒருபுறம் மாஸ்க் மனிதனும், மறுபுறம் காவல்துறையும் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் தவிப்பை, புதுமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் மிக்க நடிகர் போல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, பல இடங்களில் அப்ளாஸை அள்ளுகிறார். அதிரடி ஆக்‌ஷனிலும் மிரட்டியிருக்கிறார். தமிழ் திரைக்கு மற்றொரு வெற்றிகரமான ஹீரோ கிடைத்திருக்கிறார். அவரை வரவேற்போம்.

போலீஸ் அசிஸ்டண்ட் கமிஷனர் யாழ் வேந்தனாக சரத்குமார் நடித்திருக்கிறார். படத்துக்கு முதுகெலும்பாக இருக்கிற அந்த மாஸ்க் மனிதன் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் பரத்தியிருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் சமுத்திரக்கனி, அம்மாவாக வரும் சித்தாரா, தங்கையாக வரும் அபி நட்சத்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் கதைக்கு பலம் சேர்ப்பவை என்பதால், அதற்கேற்ற அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஸ்மிருதி வெங்கட்டின் கதாபாத்திரம், உலக மக்கள் அனைவரையும் கலங்கடித்த கொடூர பிரச்சனையோடு தொடர்புடையது என்பதால், அவர் வரும் காட்சிகள் மனசை பதற வைக்கிறது; கண்களைக் குளம் ஆக்குகிறது.

மருத்துவமனை டீனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன், ரவுடி காளியாக வரும் ராமச்சந்திர ராஜு, மற்றும் ஷாஜி சென், ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், முனிஷ்காந்த், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

மாஸ்க் மனிதன் யார்? அவன் எதற்காக கொலைகள் செய்யுமாறு நாயகனை நிர்பந்திக்கிறான்? என்ற முக்கியமான இரண்டு கேள்விகள் தான் முழு படத்தையும் எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கின்றன என்பதால், அந்த இரண்டு கேள்விகளுக்கான சஸ்பென்ஸை இறுதி வரை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, படத்தை பரபரவென விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். பாராட்டுகள்.

வில்லன் காளியாக வரும் ராமச்சந்திர ராஜுவுடனான நாயகனின் அதிரடி மோதல், மருத்துவமனை டீனாக வரும் கெளதம் வாசுதேவ் மேனனின் திடீர் திரைப் பிரவேசம் ஆகியவை படத்தை ரசிக்க வைப்பதோடு, நடக்கும் சமூகத் தீமைகள் குறித்து மாஸ்க் மனிதன் மனக்குமுறலுடன் கொடுக்கும் விளக்கம் யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதால் கதையுடன் ஒன்றி பயணிக்க முடிகிறது.

கே.ராம்சரண் ஒளிப்பதிவும், ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பும், சி.சத்யா இசையும் படத்துக்கு பலம்.

‘ஹிட் லிஸ்ட்’ – நிச்சயம் ஹிட்! பார்த்து, ரசித்து, மகிழுங்கள்!