மக்களவை தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 950 பேர் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வரும் ஏப்.19-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. மார்ச் 27-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த மார்ச் 28-ம் தேதி காலை 11 மணி முதல் 39 தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. கோவை, வடசென்னை, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீது ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டு பரிசீலனை சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
இதனிடையே வேட்புமனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி நிறைவாக 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 135 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.
பின்னர் அந்தந்த தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஈரோடு தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 27 பேர் சமர்ப்பித்த 36 மனுக்கள் பரிசீனைக்குப் பிறகு ஏற்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக தமிழ்வேந்தன், 19 சுயேச்சைகள் உட்பட 26 பேர் புதுச்சேரி தேர்தல் களத்தில் உள்ளனர்.
விளவங்கோடு:
மக்களவைத் தேர்தலோடு காலியாகவுள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிட 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல்படி இங்கு 10 பேர் களத்தில் உள்ளனர்.