தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் துவக்க விழா!
Connekkt Media, PK Prime Production & Mercuri Movies நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினை துவங்கி வைத்தார்.
இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு.கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு.ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாக ராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குநர் பாரதிராஜா பேசும்பொழுது..
உலக அதியசங்கள் என எதை எதையோ சொல்கிறோம் ஆனால் இளையராஜா நம் நாட்டின் அதிசயம். நான் சிறு வயதிலிருந்து அவனுடன் பழகி வருகிறேன், ஆனால் அவனது திறமை, இசை என்னாலேயே நம்பமுடியாதது. கையில் என்ன கிடைத்தாலும் உடனே இசையமைக்க ஆரம்பித்துவிடுவான். அவன் அருகில் இருப்பதால் அவன் அருமை தெரியவில்லை. இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து திரை துறையினர் ஒன்று சேர்ந்து அவனுக்கு விழா எடுக்க வேண்டும் அதில் நான் பங்கு கொள்ள வேண்டும் அதுவே என் ஆசை. அவன் ஒரு அதிசயப்பிறவி, எத்தனை நூற்றாண்டு காலம் ஆனாலும் இந்திய நாடு இளையராஜாவை மறக்க முடியாது. இளையராஜாவின் பயோபிக்கை எடுப்பது மிகவும் கஷ்டம், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனுஷ் இதில் இணைந்துள்ளார், மகிழ்ச்சி, கடவுள் எப்படி ஒன்று சேர்த்துள்ளார் பாருங்கள். அற்புதமான நடிகன். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் ஜொலிக்கக்கூடியவன். தனுஷ் நடிப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நான் ஒரு படம் செய்திருக்கிறேன், மிகவும் முரட்டுத்தனமான இயக்குநர். என்னையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு இயக்குநர் என்றால் அவன் தான். மிகத் திறமைசாலி அவர் இந்த படத்தை இயக்குவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய எனது வாழ்த்துக்கள்.
நடிகர் கமல்ஹாசன் பேசும்பொழுது..
எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதே எனக்குப் புரியவில்லை இது மிக நீண்ட ஒரு பயணம் எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப்பெரியது. இவர் தான் இளையராஜா என்று தெரியாமல் இருந்த காலத்திலிருந்து அவரை அறிந்தவன் நான். பாவலர் பிரதர்ஸ் உடன் பணி புரியும் காலத்திலிருந்து இவரைத் தெரியும். நான் அப்போது அமர் தான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு விழாவில் இளையராஜாவைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது. அவரது இசைக்கு ரசிகனாக ஆரம்பித்துக் கொஞ்ச நாளில் அண்ணனாக மாறி பின்பு அய்யாவாக மாறி இன்று வரை தொடர்கிறது. எனக்கு இசையில் நாட்டமில்லை என்பதால் எனக்கு அவர் மீது பொறாமை இல்லை அவரை ரசித்துக்கொண்டே அவரது வெற்றிகளை எல்லாம் என் வெற்றியாய் நினைத்து பெருமை பட்டுக் கொண்டிருக்கிறேன். குணா படப் பாடல் குணாவுக்கும் அபிராமிக்குமானதல்ல எனக்கும் அவருக்குமான காதலைச் சொல்லும் பாடல். நான் எழுதினேன், அவர் இசையமைத்தார். எங்கள் காதல் பாடல் அது. ராஜாவின் கதையை எளிதாக எடுக்கலாம். கஷ்டம் அல்ல. அதை எடுக்கணும் என்று நினைத்தால் 8 பார்ட் வரை கூட எடுக்கலாம், ராஜாவைப் பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு மாதிரியானது. ராஜாவைப் பிடித்தவர்கள் எடுத்தால் அது வேறு மாதிரியாக இருக்கும், ஆனால் அதில் எல்லாவற்றிலும் இளையராஜா தனித்துவமாக இருப்பார். இங்குப் பலர் தங்கள் வாழ்க்கையையே அவரது பாடல்களுடன் இணைத்துத் தான் ஞாபகத்தில் வைத்துள்ளார்கள். மிக மகிழ்ச்சியுடன் எந்த பிரஷரும் இல்லாமல் படத்தை எடுங்கள். ஏனெனில் இது இளையராஜாவின் படம் கிடையாது. பாரத ரத்னா இளையராஜாவின் படம். தனுஷ் மற்றும் இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்பொழுது…
இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி, அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்திருக்கிறார். அவரது இசையால் எப்போதும் அவர் நம்முடன் தான் இருக்கிறார். அவரது ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்கள் எங்களுக்கு ஞாபகம் வரும். தற்போது அவரிடம் பணி புரியும் போது அவரைப் பற்றி நிறையத் தெரிய வந்தது. உண்மையில் அவர் மிகத் தன்னடக்கமானவர். என்னிடம் படம் குறித்து ஏதாவது விவாதிக்கும் போது கூட இதை நான் சொல்லலாமா? என அனுமதி கேட்பார். அவர் இசையமைப்பைப் பார்ப்பது வரம், அவர் இசையில் மெஜீசியன். விடுதலை படத்தில் ஒரு பாடலுக்கு நான்கு பாடல்கள் தந்து விட்டார். அவர் வரலாற்றை எடுப்பது என்பது நம் நாட்டின் வரலாற்றுப் பதிவு ஆகும். கிட்டதட்ட 80 வருட வரலாறு. நம் வரலாற்றின் புக்மார்க்க்காக அவர் இசை இருக்கிறது. அவர் வாழ்வு படமாவது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தனுஷ் நாயகனாக நடிப்பது இன்னும் மகிழ்ச்சி. அவருக்கு இது மிகப் பெரிய சவால் ஆனால் அந்த சவால்களை அவர் தாண்டி வருவார். இயக்குநர் அருணுக்கு இது மிகப்பெரிய பரிசு. இந்தப் படத்தில் இளையராஜா சார் இசையைக் கேட்க நான் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நடிகர் தனுஷ் பேசும்பொழுது…
இது வாழ்வின் மிக முக்கியமான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, இசைஞானி இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகன். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும்போது, அவை நிறைவேறும். இங்குப் பலரும் ராஜா சாரின் இசையில் தான் தங்கள் கவலைகளை மறக்கிறார்கள். இரவுகளில் தூக்கம் வராதவர்கள் அவரது இசையால் தான் தூங்குகிறார்கள். என் பல இரவுகளை அவரது இசையில் தான் கழித்திருக்கிறேன் எனக்கு இரண்டு பேரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது கனவு. ஒன்று ரஜினிகாந்த் சார், மற்றொன்று இளையராஜா சார், இப்போது இளையராஜா சாரின் பாத்திரத்தில் நான் நடிப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகனாக என் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்திலிருந்து, எப்போதாவது ஒரு இக்கட்டான காட்சிகள் நடிக்கும் சூழ்நிலை வரும்போது, ராஜா சார் பாடல்களை ஹெட்போனில் போட்டுக் கேட்டு, பின்பு அதன் தாக்கத்தில் தான் நடிப்பேன். இப்போது வரை அவரது பாடல்கள்தான் எனக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்கிறது. அதைப் போல் அவரது படத்திலும் அவராக நடிக்கும் போதும், அவர் என்னை வழிநடத்திச் செல்வார் என்று நம்புகிறேன். இளையராஜா சார் மீதுள்ள அன்பாலும், நட்பாலும் இங்கு வந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் நன்றிகள். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மீது மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது, ஆனால் நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். இந்த படத்தை மிக மகிழ்ச்சியாகவும் காதலுடனும் நாம் உருவாக்குவோம். இந்த படம் என்பது இளையராஜாவின் மீதான நம் காதல்.
இளையராஜாவின் அற்புதமான பாடல்களின் இசை குறிப்புகளால் நிறைந்த, ஒரு அழகான போஸ்டரை வெளியிட்டு , உலக நாயகன் கமல்ஹாசன் இளையராஜா படத்தினை துவக்கி வைத்தார். கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.