திமுக கூட்டணி: தொகுதி எண்ணிக்கை பகிர்வு முடிந்தது!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி, இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கைப் பகிர்வு முடிவடைந்தது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகளை பகிர்ந்து கொடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 19 இடங்களை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது திமுக. இந்த முறை அதைவிட கூடுதலாக 1 தொகுதியில் களமிறங்க உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:
திமுக – 21
காங்கிரஸ் – 10
விசிக – 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 2
மதிமுக – 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1
மேற்கண்ட 8 கட்சிகளில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நீங்கலாக ஏனைய கட்சிகள் அனைத்தும் தத்தமது தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்றும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மட்டும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தொகுதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.