அரிமாபட்டி சக்திவேல் – விமர்சனம்

நடிப்பு: சார்லி, பவன், மேகனா எலென், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்பிரமணி, சேதுபதி ஜெயச்சந்திரன் மற்றும் பலர்

இயக்கம்: ரமேஷ் கந்தசாமி

ஒளிப்பதிவு: ஜேபி மேன்

படத்தொகுப்பு: ஆர்.எஸ்.சதீஷ்குமார்

இசை: மணி அமுதவன்

தயாரிப்பு: லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர்கள்: அஜிஷ் பி, பவன் கே

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

பன்னெடுங்காலமாக – குறிப்பாக, தெற்காசிய சமூகத்தில் சாதிகள் உருவாகி நிலைபெறத் துவங்கிய காலத்திலிருந்து – நிலவி வரும் பிரச்சனை இது. ‘ஒவ்வொருவரும் தன் சாதிக்குள் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; வேற்றுசாதிக்காரரை மணக்கக் கூடாது; சாதிக்கலப்புத் திருமணத்துக்கு வழி வகுக்கும் காதல் கூடவே கூடாது’ என்ற விதிகளை கண்டிப்புடன் கடைப்பிடிப்பதால் உருவாகும் பிரச்சனை இது. தப்பித் தவறி யாராவது சாதி கடந்து காதலித்தால், அப்படி காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டால், அடி-தடி, ஆள் கடத்தல், ஊரைவிட்டு விலக்கி வைத்தல் என்பதில் தொடங்கி சாதியாணவப் படுகொலை வரை நீளும் பிரச்சனை இது. விதிவிலக்காக சிற்சில குடும்பங்களில் இந்த விதிகள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில், குறிப்பாக கிராமத்துக் குடும்பங்களில் இன்றும் உயிருடன் இருக்கும் பிரச்சனை இது. அப்படிப்பட்ட பிரச்சனையை – ’சாதிக்கலப்புக்கு எதிரான கட்டுப்பாடுகளும், அவற்றை மீறி சாதி கடந்து காதலித்து கல்யாணம் செய்துகொண்டு பரிதவிக்கும் இளம் ஜோடியும்’ என்ற பிரச்சனையை – மையமாக வைத்து தமிழில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. வந்து கொண்டிருக்கின்றன. இனியும் வரும். அந்த பட்டியலில் இப்போது சேர்ந்திருப்பது ‘அரிமாபட்டி சக்திவேல்’ திரைப்படம்.

0a1m

சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் விண்கலன்களை அனுப்பிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியரை ஊருக்குள் நுழையக் கூடாது என தடை விதிப்பது, மீறி நுழைந்தால் வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பன போன்ற கொடூர நடைமுறைகள் ஊர்ப்பெரியவர்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த கிராமத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, புனைவு சம்பவங்களைச் சேர்த்து இப்படக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அந்த கிராமத்தின் உண்மையான பெயர் சினிமாவுக்காக ’அரிமாபட்டி’ என மாற்றப்பட்டுள்ளது. ’அரிமாபட்டி’ என்றால் சிங்கம்பட்டி’ என்று பொருள். ’துடைப்பக்கட்டைக்குப் பட்டுக்குஞ்சம்’ என்பார்களே, அதுபோல, சாதிவெறி புரையோடிக் கிடக்கும் அந்த அசிங்கமான கிராமத்துக்குப் பெயர் சிங்கம்பட்டி / அரிமாபட்டி!

சில ஆண்டுகளுக்கு முன், சாதி கடந்து காதலித்து கல்யாணம் செய்துகொண்ட இளம் ஜோடியை, சின்ன கலிங்கன் (அழகு) உள்ளிட்ட ஊர்ப்பஞ்சாயத்துப் பெரியவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்; ஊரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதை ஏற்க மறுக்கும் இளம் ஜோடி, அதே ஊரில் வாழ்வது என்பதில் தீர்மானமாக இருக்கிறது. மேலும், ”எங்களை மிரட்டி தொல்லை கொடுத்தால் போலீசுக்குப் போவோம்” என்றும் எச்சரிக்கிறது. இதனால் பம்மும் சாதிவெறி பிடித்த பஞ்சாயத்துப் பெரியவர்கள், “சரி, இருந்துவிட்டுப் போகட்டும்” என்று ஒப்புக்கு தீர்ப்பு சொல்லிவிட்டு, இரவு, வன்முறைக் கும்பல் ஒன்றை இளம் ஜோடியின் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பரம்பரை பரம்பரையாக சாதிய ஒழுங்கைப் பாதுகாத்துவரும் அந்த ஊரின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக, இளம் ஜோடியை வெட்டிக் கொலை செய்கிறது அந்த வன்முறைக் கும்பல்.

சில ஆண்டுகளுக்குப் பின், ஊர்ப்பஞ்சாயத்துப் பெரியவர்களில் ஒருவரான சின்ன கலிங்கனின் பேரனும், அவரது மகன் குழந்தைவேலின் (சார்லி) மகனுமான நாயகன் சக்திவேல் (பவன்), மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, வேற்று சாதியைச் சேர்ந்த பக்கத்து ஊர் மாணவியான நாயகி கவிதாவை (மேகனா எலென்) காதலிக்கிறார். பள்ளிப் படிப்பு முடிந்தபின், திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் ‘அரிமாபட்டி சக்திவேல்’ என்ற தலைப்பில் ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதி எடுத்துக்கொண்டு சென்னை செல்கிறார். அங்கு உதவி இயக்குநராக பணி புரிகிறார். அந்த வேலை இல்லாதபோது ஒரு கேக் கம்பெனியில் வேலை செய்துகொண்டே இயக்குநராக முயற்சி எடுக்கிறார். இடையிடையே, தற்போது ஆசிரியையாக பணிபுரியும் தன் காதலி கவிதாவைப் பார்க்க ஊருக்கு வந்து செல்கிறார்.

ஒருமுறை சக்திவேல் வந்து கவிதாவை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, கவிதாவின் அண்ணனும், சாதிவெறியருமான சுரேஷ் (பிர்லா போஸ்) அதை பார்த்துவிடுகிறார். சக்திவேலை அடித்துத் துவைத்துவிட்டு, கவிதாவை இழுத்துக்கொண்டு போகிறார். இனி ஆசிரியை வேலைக்குப் போகக் கூடாது என்று தடை விதிக்கிறார். அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அவர் வீட்டில் இல்லாத நேரம், கோயிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் கவிதா. சக்திவேலை சந்தித்து விஷயத்தைச் சொல்லுகிறார். அவரை சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளும் சக்திவேல், திருமணத்தை ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, கவிதாவுடன் சென்னைக்குக் கிளம்பிப்போய் விடுகிறார்.

புதுமணத் தம்பதியரை பிரித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அரிமாபட்டி ஊர்ப்பெரியவர்கள் ஒருபுறமும், கவிதாவின் அண்ணன் சுரேஷ் மறுபுறமும் தொடை தட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள். இவர்களால் சக்திவேல் – கவிதா தம்பதியரை கண்டுபிடிக்க முடிகிறதா? இவர்களால் அவர்களுக்கு என்னென்ன இன்னல்களெல்லாம் ஏற்படுகின்றன? அந்த இன்னல்களை எல்லாம் தாங்கி, தவிடுபொடியாக்கிவிட்டு, அவர்கள் இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘அரிமாபட்டி சக்திவேல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் சக்திவேலாக இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதை – திரைக்கதை எழுதியவருமான பவன் நடித்திருக்கிறார். மேல்நிலைப் பள்ளி மாணவர், இளம் உதவி இயக்குநர் ஆகிய இருவேறு தோற்றங்களில் மிகவும் எளிமையாக வருகிறார். காதல், பாசம், இயலாமை, ஆக்ரோஷம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் திறம்பட வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் நடிப்புப் பயிற்சி எடுத்திருந்தால், நாயக கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, பொருத்தமான நடிப்பை கூடுதலாக வழங்கியிருக்கலாம்.

நாயகி கவிதாவாக மேகனா எலென் நடித்திருக்கிறார். இளமையும், அழகுமாய் பார்ப்பதற்கு பப்ளிமாஸ் போல இருக்கிறார். அளவாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உடம்பு பெருக்காமல் கவனமாகப் பார்த்துக்கொண்டால், அவர் இன்னும் சில படங்களில் நாயகியாக வலம் வரலாம்.

நாயகனின் அப்பா குழந்தைவேலாக சார்லி நடித்திருக்கிறார். தன் மகனைவிட ஊர்ப்பெரியவர்கள் தான் முக்கியம் என கருதி, அவர்களைப் பகைத்துக்கொள்ளாமல், அவர்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவர்களின் கால்களில் கூட விழத் தயங்காத அப்பாவி கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து அனுதாபத்தை அள்ளுகிறார்.

நாயகியின் காதலை எதிர்க்கிற அண்ணனாக, சாதிவெறி தலைக்கேறிய வில்லனாக சுரேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிர்லா போஸ். நெகட்டிவ் கேரக்டர் என்பதற்காக கஞ்சி போட்டு அயர்ன் பண்ணிய முரட்டுத்துணி போல எந்நேரமும் விறைப்பாகவும், கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் முறைப்பாகவும் அலைந்து, தன் கதாபாத்திரத்துக்கு குறிப்பிட்ட குணநலன் சேர்த்திருக்கிறார்.

நாயகனின் தாத்தா சின்ன கலிங்கனாக வரும் அழகு, அரசியல்வாதி அன்பழகனாக வரும் இமான் அண்ணாச்சி, தங்கவேலாக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி, கஜேந்திரனாக வரும் சேதுபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை போரடிக்காமல் நகர்த்திச் சென்றிருக்கிறார். ”இது உண்மையில் நடந்த கதை” என்றும், ”கலப்புத் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட பல ஜோடிகள் வேறு ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்” என்றும் படத்தின் இறுதியில் சொன்னதோடு, அந்த ஜோடிகளின் குடும்ப புகைப்படங்களை வரிசையாகத் திரையில் காட்டி பார்வையாளர்களை திகைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

உண்மைக் கதையை திரைக்கதையாய் மாற்றும்போது கையாள வேண்டிய நுணுக்கமான சில டெக்னிக்குகளைக் கையாண்டிருந்தால் படம் சுவாரஸ்யமாகவும், கூடுதலாக ரசிக்கத் தக்கதாகவும் அமைந்திருக்கும்.

மணி அமுதவனின் பின்னணி இசையும், ஜெபி மேனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

’அரிமாபட்டி சக்திவேல்’ – ஒருமுறை பார்க்கலாம்!