அதோமுகம் – விமர்சனம்
நடிப்பு: எஸ்.பி.சித்தார்த், சைதன்யா பிரதாப், அருண் பாண்டியன் (சிறப்புத் தோற்றம்), அனந்த் நாக், சரித்திரன், ஜே.எஸ்.கவி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சுனில் தேவ்
ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்
படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்
பாடலிசை: மணிகண்டன் முரளி
பின்னணி இசை: சரண் ராகவன்
தயாரிப்பு: ரீல் பெட்டி
பத்திரிகை தொடர்பு: குமரேசன்
‘அதோமுகம்’ என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு ‘மறைத்து வைக்கப்பட்ட முகம்’ (Hidden Face) என்பது பொருளாம். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் வகைப்பட்ட இப்படக்கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால், இதற்கு ‘அதோமுகம்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.
கைக்கு அடக்கமான பட்ஜெட்டில், இரண்டு கை விரல்களுக்குள் அடங்கிவிடும் அளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைக் கொண்டு, வியப்பில் புருவத்தை உயர்த்தும் வகையில் அருமையான, ஸ்டைலிஷான, ரசிக்கத் தக்க படமாக இப்படத்தை எடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
கதை இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
அப்பாவியான கதை நாயகன் மார்ட்டீனின் வாழ்க்கையில் நிகழ்ந்த, அதிர்ச்சியூட்டும் பயங்கர சம்பவங்களின் கோர்வையாக, அவரது ‘பாயிண்ட் ஆஃப் வியூ’விலேயே கதை நகருகிறது.
ஊட்டியில், நெருங்கிய நண்பன் பாலுக்கு (அனந்த் நாக்) சொந்தமான டீ எஸ்டேட்டில் மானேஜராக பணி புரியும் மார்ட்டீன் (எஸ்.பி.சித்தார்த்), தன் மனைவி லீனாவுடன் (சைதன்யா பிரதாப்), தன்னந்தனியாக இருக்கும் தனி பங்களாவில் வசித்து வருகிறார்.
…பள்ளியில் படிக்கையில், தன்னுடன் சிநேகமாகப் பழகிய லீனாவை ஒருதலையாகக் காதலித்தார் மார்ட்டீன். ஒருநாள் காதலைச் சொன்னவுடன், அதை ஏற்க மறுத்து, கோபமாய் திட்டிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார் லீனா. சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். மார்ட்டீனின் காதலை முன்பு நிராகரித்ததற்காக லீனா வருத்தம் தெரிவித்தார். அதன்பின் இருவரும் காதலுடன் திருமணம் செய்துகொண்டார்கள்…
ஒரு திருமண நாளில், Wedding Anniversary கொண்டாட்டத்தின் துவக்கமாக மனைவி லீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறார் மார்ட்டீன். இதற்காக லீனாவுக்குத் தெரியாமல் ஒரு கிஃப்ட் பாக்ஸை பீரோவுக்குள் வைக்கிறார். லீனா தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், “உனக்கொரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்” என்று குதூகலமாக சொல்லி பீரோவைத் திறக்கச் சொல்கிறார். திறந்தால், மார்ட்டீன் வைத்த கிஃப்ட் பாக்ஸ் இல்லை. அதற்கு பதிலாக மார்ட்டீனுக்கு லீனா வைத்த கிஃப்ட் தான் இருக்கிறது. தன் சர்ப்ரைஸ் முயற்சி தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளும் மார்ட்டீன் ‘எப்போது, எப்படி கிஃப்ட் பாக்ஸ் மாறியது?’ என புரியாமல் மூளையைக் குழப்பிக்கொள்கிறார்.
மனைவியை என்றாவது ஒருநாள் சர்ப்ரைஸ் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் மார்ட்டீன், லீனாவுக்குத் தெரியாமல் அவரது நடவடிக்கைகளை வீடியோ படமாக எடுத்து, தொகுத்து, அவருக்கே பரிசாகக் கொடுத்து, ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இதற்காக லீனாவின் செல்போனில், அவருக்கே தெரியாமல், ‘Hidden Face’ என்ற Spy App-ஐ பதிவிறக்கம் செய்து பொருத்துகிறார். அதன்மூலம் லீனா என்ன செய்தாலும், என்ன பேசினாலும் மார்ட்டீனால் Live-ஆக, ரகசியமாக பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.
அப்படி மார்ட்டீன் ரகசியமாகப் பார்க்கையில், மனைவி லீனாவின் ‘மறைத்து வைக்கப்பட்ட முகம்’ தெரிய வருகிறது. திடுக்கிடுகிறார். தான் வீட்டில் இல்லாதபோது, முன் பின் தெரியாத மர்ம நபர் ஒருவர் வந்து லீனாவை சந்திக்கிறார். காதல் மொழியில் பேசுகிறார். “நான் சொன்ன வேலையை சீக்கிரம் முடி” என்கிறார். ‘சரி’ என்பதாக லீனா தலையை ஆட்டுகிறார்.
‘யார் இவன்? லீனாவுக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறான்?’ என்று குழம்பித் தவிக்கையில், “காலதாமதம் செய்யாதே. உன் கணவனை போட்டுத் தள்ளு” என்றவாறு அந்த மர்ம நபர் ஒரு கைத்துப்பாக்கியைக் கொடுக்க, அதை லீனா வாங்கிக்கொள்ள, அதிர்ச்சியில் உறைந்துபோகிறார் மார்ட்டீன்.
’அவன் யார்? என்னை ஏன் கொல்ல வேண்டும் என்கிறான்? அவனுக்கும் லீனாவுக்கும் என்ன, எப்படி தொடர்பு?’ எனத் தெரியாத மார்ட்டீன், அவற்றை கண்டுபிடிப்பதற்காக மனைவியைத் தீவிரமாக கண்காணிக்கிறார். பின் தொடர்கிறார்.
அடுத்தடுத்து நடக்கும் விபரீத சம்பவங்கள் மார்ட்டீனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கின்றன. தன் மனைவியை வைத்து தன்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவலையைத் தெரிந்துகொண்டு, அதை அறுத்தெறியும் நடவடிக்கைகளில் இறங்குகிறார். ஆனால், அப்படிப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை அடுத்தடுத்த ஆபத்துக்குள் சிக்க வைப்பதாக இருக்கிறது. இறுதியில் நினைத்தே பார்க்க முடியாத பேராபத்தில் சிக்கிக்கொள்ளும் அவர், அதிலிருந்து மீண்டாரா, இல்லையா? என்பதே ‘அதோமுகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் மார்ட்டீனாக – நடிகர் அருண் பாண்டியனின் சகோதரி மகன் – எஸ்.பி. சித்தார்த் நடித்திருக்கிறார். புதுமுகம் என்றாலும், வெள்ளந்தியான அப்பாவி வேடத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் காதல் மனைவியை ரசிப்பது, போகப்போக அவரை வெறுப்பது, அந்த வெறுப்பை அவருக்குத் தெரியாமல் மறைப்பது என சகல உணர்வுகளையும் பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறை ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போதும் பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நாயகியாக, நாயகனின் மனைவி லீனாவாக சைதன்யா பிரதாப் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். பார்க்க ’அப்புராணி’ போல் இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் சாதுவான, குடும்ப குத்துவிளக்காக சுடர் விடும் அவர், காட்சிகள் நகர நகர, ஒளி மங்கி, இருண்ட நயவஞ்சக முகத்தைக் காட்டி, நாயகனை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் மிரட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் நெற்றிப்பொட்டை எடுத்து கீழே வைத்துவிட்டு, அழுத்தமான குரலில் அவர் பேசும் வசனங்கள், பார்வையாளர்களை “அடிப் பாவி” என அலற வைக்கின்றன.
நாயகனின் நெருங்கிய நண்பராக, டீ எஸ்டேட் முதலாளி பாலாக அனந்த் நாக் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் வீடியோ காலில் மட்டும் தோன்றிவிட்டு அதன்பின் முகம் காட்டாத அவர், இரண்டாம் பாதியில் வரும்போது, கதையையே தலைகீழாக மாற்றிவிடுகிறார். அத்தகைய முக்கிய கதாபாத்திரத்தில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
படத்தின் இறுதியில், சிறையிலிருக்கும் தாதா இந்திரஜித்தாக – சிறப்புத் தோற்றத்தில் – தோன்றி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அருண் பாண்டியன். அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படலாம் என்பதற்கான லீடு போர்ஷனில் வரும் அவர், அதற்கான பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
சூர்யாவாக வரும் சரித்திரன், வெற்றியாக வரும் ஜே.எஸ்.கவி, நாயகனின் அப்பாவாக வரும் மேத்யூ வர்கீஸ் மற்றும் பிபின் குமார் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான் நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானருக்கு மிக மிகப் பொருத்தமான கதைக்கருவை உருவாக்கி, தனித்தன்மை வாய்ந்த அழுத்தமான கதாபாத்திரங்களை வடிவமைத்து, யூகிக்கவே முடியாத திருப்பங்கள் நிறைந்த பிளாட் டிரைவன் ஸ்கிரிப்ட்டை சுவாரஸ்யமாகப் படைத்து, விறுவிறுப்பாக, அதே நேரத்தில் ஸ்டைலிஷாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ். படம் முழுவதும் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்து, அடுத்து என்ன நடக்கும் என பரபரப்புடன் எதிர்பார்க்க வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற ஆவலையும், எதிர்பார்ப்பையும் இப்போதே ஏற்படுத்தி விட்டார் இயக்குநர். பாராட்டுகள்.
அருண் விஜயகுமாரின் அற்புதமான ஒளிப்பதிவு, மணிகண்டன் முரளியின் இனிமையான பாடலிசை, சரண் ராகவனின் அருமையான பின்னணி இசை, விஷ்ணு விஜயனின் ஷார்ப்பான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் அழகை, நேர்த்தியை, வசீகரத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
‘அதோமுகம்’ – பார்த்து ரசியுங்கள்! சுவாரஸ்யமான புத்தம் புது அனுபவம் கிடைக்கும்! அனுபவியுங்கள்!