ரணம் அறம் தவறேல் – விமர்சனம்

நடிப்பு: வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரனிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்பிரமணியம், பத்மன், விலங்கு கிச்சா ரவி, தசரதி, தயாளன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஷெரீஃப்

ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா

படத்தொகுப்பு: முனீஸ்

இசை: அரோல் கரோலி

தயாரிப்பு: ’மிதுன் மித்ரா புரொடக்‌ஷன்ஸ்’ மது நாகராஜன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார்

”நடிகர் வைபவ்வின் 25-வது படம்” என விளம்பரப்படுத்தப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் இது. வழக்கமாக காமெடி நாயகனாக நடித்து வந்த வைபவ், முதல்முறையாக இதில் காமெடியைத் தூர தள்ளி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க சீரியஸான, கனமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். சீரியஸான கதாபாத்திரம் அவருக்கு செட் ஆகிறதா? கனமான கேரக்டரை அவரால் தாங்க முடிகிறதா? பார்க்கலாம்…

திரைப்படத் துறையில் பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவுடன், கதைகள் எழுதிக்கொண்டும், உதவி இயக்குநராக பணி புரிந்துகொண்டும் வருகிறார் நாயகன் வைபவ். ஒருநாள் அவர் படப்பிடிப்புத் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, தேவதை போல, நடிக்க வந்த கதாநாயகி போல, அழகாக நடந்து வருகிறார் சரஸ் மேனன். உண்மையில் புதிய உதவி இயக்குநராக பணி புரிவதற்காக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்திருக்கும் சரஸ் மேனனைக் கண்டதும் காதல் கொள்கிறார் வைபவ். அவரது காதலை சரஸ் மேனன் ஏற்றுக்கொண்டதும், இருவருக்கும் திருமணம் ஆகிறது. இதன்பின் பயங்கர விபத்து ஏற்பட, காதல் மனைவி சரஸ் மேனன் பரிதாபமாக உயிரிழக்கிறார். வைபவ், தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைக்கிறார். எனினும், தலையில் பட்ட அடியால் மூளையின் உட்புறம் காயம் ஏற்பட்டு, அடிக்கடி தன்னிலை மறக்கும் பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

அடையாளம் காண முடியாத அளவுக்கு கிரிமினல்களால் முகம் சிதைக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பது காவல் துறைக்கு பெரிய சவாலாக இருக்கிறது. இச்சவாலை சமாளிக்க, ‘முக மீட்டுருவாக்க வரைகலை’ திறமை கொண்ட வைபவ், சிதைந்த முகத்தின் அனாட்டமியை வைத்து, முழுமையான அசல் முகத்தை தத்ரூபமாக வரைந்து மீட்டுருவாக்கம் செய்து கொடுத்து காவல்துறைக்கு உதவி வருகிறார். மேலும், அந்த சடலம் தொடர்பான ’கிரைம் ஸ்டோரி’யையும் – ஓரளவு உண்மைக்கு நெருக்கமாக – எழுதிக் கொடுத்து, வழக்கின் சிக்கலறுக்க காவல்துறைக்கு பேருதவியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், பாதி எரிந்த நிலையிலிருக்கும் மனித உடல் பாகங்களை மூன்று தனித்தனி அட்டைப் பெட்டிகளில் அடைத்து, சென்னையின் மூன்று முக்கியமான இடங்களில் வீசிச் செல்கிறார் ஒரு மர்ம நபர். அவற்றில் ஒரு அட்டைப்பெட்டி மாதவரம் காவல் நிலையம் முன் போடப்பட்டிருக்கிறது.

மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், உடல் பாகங்களை மீட்டு, புலன் விசாரணையில் இறங்குகிறார். வைபவ் தனது பிரத்யேக திறமை மூலம் இப்புலனாய்வுக்கு உதவி செய்கிறார்.

மீட்கப்பட்ட உடல் பாகங்கள் ஒரே நபருடையவை அல்ல; அவை வேறு வேறு மனிதர்களின் உடல் பாகங்கள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை தெரிய வருகிறது.

இதற்கிடையில், வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் திடீரென மாயமாகி விடுகிறார். புதிய இன்ஸ்பெக்டராக தான்யா ஹோப் பொறுப்பேற்கிறார். அவரும், வைபவ்வும் சேர்ந்து இந்த வழக்கின் மர்ம முடிச்சுகளை வெற்றிகரமாக அவிழ்த்தார்களா? குற்றவாளிகள் யார்? கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? மாயமான இன்ஸ்பெக்டர் என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ரணம் அறம் தவறேல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1b

சால்ட் & பெப்பர் லுக்கில் நடுத்தர வயது கதாநாயகனாக நடித்திருக்கிறார் வைபவ். சக உதவி இயக்குநரை காதலிப்பது, காதலித்த பெண்ணை கரம் பிடிப்பது, விபத்தில் மனைவியை பறி கொடுப்பது, மூளைக் காயத்தால் அவ்வப்போது தன்னிலை மறந்து அவதிப்படுவது, காவல் துறைக்கு முக மீட்டுருவாக்கம் செய்து கொடுப்பது, சிக்கலான வழக்குகளின் ‘கிரைம் ஸ்டோரி’ எழுதிக் கொடுத்து புலன்விசாரணைக்கு உதவுவது என பன்முகத் தன்மை கொண்ட அழுத்தமான கதாநாயகப் பாத்திரத்தில் எவ்வித சிரமும் இல்லாமல் அசால்டாக அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார் வைபவ். இனி இதை விட சீரியஸான, கனமான கதாபாத்திரத்தைக் கூட அவர் தோளில் சுமத்தலாம் என்ற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் அவர் ஏற்படுத்தியிருக்கிறார். பாராட்டுகள்.

நாயகனின் காதலியாக, காதல் மனைவியாக இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ் மேனன் சிறிது நேரமே வந்தாலும், தன் அழகாலும் நடிப்பாலும் பார்வையாளர்கள் மத்தியில் மிக பெரிய ஆச்சரிய அதிர்வை உருவாக்கி விடுகிறார்.

காக்கி உடையில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக வரும் தான்யா ஹோப், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை விறைப்பாக, கம்பீரமாக குறைவின்றி செய்திருக்கிறார்.

எவரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, தன் மகளுக்கு உருகும் தாயாக நம் மனதில் நிற்கிறார்.

சுரேஷ் சக்கரவர்த்தி, பிரனிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்பிரமணியம், பத்மன், தசரதி, தயாளன் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

உயிரற்ற பெண் சடலங்களைப் புணரும் நெக்ரோபீலியா (Necrophilla) என்ற வக்கிர மனநோய் பற்றியும், வக்கிர மனநோயாளிகள் பற்றியும் செவி வழிச் செய்திகள் நிறைய உண்டு. அவற்றை அக்கறையுடன் பரிசீலித்து, திரைக்கதை ஆக்கி, கிரைம் திரில்லர் ஜானரில் இப்படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷெரீப். உயிர்பிரிந்து அமரராகிவிட்ட பெண்களின் சடலத்தை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் என்ற வலிமையான கருத்தை நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி ஓங்கி ஒலித்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்.

பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு, முனீஸின் படத்தொகுப்பு, அரோல் கரோலியின் இசை உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘ரணம் அறம் தவறேல்’ – அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்!