’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’க்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலினின் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’ கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறியுள்ளன.
தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று… ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு… மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒன்றிய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானங்களை இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அதிமுக போன்ற கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
“மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை தமிழக பாஜக புரிந்துகொள்கிறது” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
உறுப்பினர்களின் விவாதங்களைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’ கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.