லவ்வர் – விமர்சனம்

நடிப்பு: மணிகண்டன், ஸ்ரீ கௌரி ப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, அருணாச்சலேஸ்வரன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பிரபுராம் வியாஸ்

ஒளிப்பதிவு: ஷ்ரேயஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட்

தயாரிப்பாளர்கள்: நஸிரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன்

வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

புனிதமான காதல், தெய்வீகக் காதல், பள்ளிக்கூட காதல், கல்லூரிக் காதல், அலுவலகக் காதல் என எத்தனை வகை காதல்கள் இருந்தாலும், அத்தனை வகைக் காதல்களிலும் கசப்பான ஒரு கட்டம் வர வாய்ப்பு உண்டு. அது தான் அளவுக்கதிகமான, ஆபத்தான ‘பொசசிவ்னெஸ்’ அரங்கேறும் கட்டம். தன் இணை தன்னை விட்டு பிரிந்து போய்விடுமோ என்று நிஜமாகவோ, சந்தேகத்தின் பேரிலோ அச்சம் கொண்டு, இறுக்கிப் பிடிக்கும் கட்டம். இந்த கட்டம் வந்துவிட்டால், அதன்பிறகு காதலர்கள் இருவருக்குமே நரக வேதனை தான். புரிதலும், அறிவு முதிர்ச்சியும் உள்ளவர்கள் இந்த கட்டத்தை சேதமில்லாமல் பக்குவமாக கடந்து சென்றுவிடுவார்கள். புரிதலின்றி அதீதமாய் உணர்ச்சி வசப்படும் நபர்கள் கெஞ்சுவார்கள், மிஞ்சுவார்கள், அழுவார்கள், அடிப்பார்கள். அது மட்டுமல்ல… கொலை, தற்கொலை, திராவக வீச்சு என்றெல்லாம் கூட வளர்த்துக்கொண்டே போய் தன்னையும், தன் இணையையும் சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தி விடுவார்கள்.

இங்கே, இது போன்ற கட்டத்தில் இருக்கும் ஒரு காதல் ஜோடி, அதை எப்படி எதிர்கொள்கிறது? எப்படி வதைபடுகிறது? அதிலிருந்து எப்படி வெளியே வருகிறது? என்பது தான் ‘லவ்வர்’ திரைப்படத்தின் மையக்கரு.

0a1a

கல்லூரியில் பயிலும்போது, மாணவர் அருண் (மணிகண்டன்), பல நடிகர்களின் குரலில் அச்சு அசலாய் அப்படியே பேசி, ‘மிமிகிரி’ செய்து அசத்தும் ’பல குரல் மன்னனாக’ திகழ்கிறார். இந்த திறமையால் கவரப்படும் சக மாணவி திவ்யா (ஸ்ரீகௌரி ப்ரியா), அருண் மீது காதல் கொள்கிறார். அழகுப் பதுமையாக ஆகர்ஷிக்கும் திவ்யா மீது அருணும் காதல் வயப்படுகிறார். காதல் வானில் சிறகடித்துக்கொண்டே கல்லூரிப் படிப்பை முடிக்கும் இந்த காதல் ஜோடி அதன் பிறகும் காதலைத் தொடர்கிறது. இதற்குப் பிறகு தான் பிரச்சனை முளைக்கிறது.

திவ்யாவுக்கு ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கிறது. கை நிறைய சம்பளம் வாங்குகிறார். தனக்கான ஐ.டி நட்பு வட்டத்தில் சேர்ந்து சுதந்திரமாக ஜாலியாக பொழுதைக் கழிக்கிறார். அவருக்கு நேர்மாறாக அருண் எந்த வேலைக்கும் செல்லாமல், சொந்தமாக ‘கஃபே’ தொடங்கப் போவதாக சொல்லித் திரிகிறார். ஆனால் சுயதொழில் அமையாததால் விரக்தி அடைகிறார். சம்பாதிக்கும் திவ்யாவோடு தன்னை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை கொள்கிறார். ரகசியமாக கஞ்சா விற்கும் நண்பன் விஸ்வாவோடு (அருணாச்சலேஸ்வரன்) சேர்ந்து அலைகிறார். மதுவுக்கு அடிமை ஆகிறார். சகல விதமான போதைப் பொருட்களையும் சுவைக்கிறார். திவ்யா தன்னைவிட்டு போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனாலேயே அதிக பொசசிவ்னெஸ் கொண்டு திவ்யாவை இறுக்குகிறார். தன்னிடம் சொல்லாமல் எங்கும் போகக் கூடாது; பிற ஆண்களிடம் பழகக் கூடாது என்றெல்லாம் ஆணாதிக்க மனப்பான்மையோடு அதிகாரம் செய்து அவரை பெண்ணடிமையாக்க முயலுகிறார். இதற்கு அடங்க மறுக்கும்போது கண்மூடித்தனமாக கோபம் கொள்கிறார். திவ்யா பழகும் அவரது ஆண் நண்பர்களோடு பொறாமையுடன் மல்லுக்கு நிற்கிறார். அபரிமிதமான காதல், அளவுக்கதிமான அக்கறை என்ற பெயர்களில் அருண் செய்யும் இத்தகைய சித்ரவதைகளை திவ்யா ஒரு நேரம் பல்லைக் கடித்துக்கொண்டு, ஆறு வருட காதலுக்காக, சகித்துக்கொள்கிறார். இன்னொரு நேரம் சகிக்க முடியாமல் பிரேக்-அப் சொல்வது, அருண் சாரி சொல்லி, கெஞ்சி மன்றாடியவுடன் மனம் மாறுவது என காதலைத் தொடர்கிறார்.

ஒரு கட்டத்தில், அருண் தரும் சித்ரவதைகள் பெரும் துயரமாக மாற, இனி அருண் திருந்தப் போவதே இல்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வரும் திவ்யா, “போதும். நம் லவ் ஒர்க்-அவுட் ஆகவில்லை. பிரிந்துவிடலாம்” என்று சொல்லி காதலை முறித்துக்கொள்கிறார். அருண் வழக்கம் போல, “சாரி திவ்யா. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு. நீ விரும்புற மாதிரி மாறிக் காட்டுறேன்” என்று கெஞ்சி மன்றாடிக்கொண்டே பின்தொடர்ந்தபடி இருக்கிறார். ஆனால் திவ்யா வழக்கம் போல் இல்லாமல் இம்முறை மனம் மாறுவதாக இல்லை. தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். அந்த நேரத்தில், திவ்யாவுக்குப் பிடித்த குணநலன்கள் கொண்ட டீம் லீடர் மதன் (கண்ணா ரவி) திவ்யாவுடன் நெருங்கிப் பழகுகிறார்.

இதன்பின் அருண் என்ன செய்கிறார்? அருண் – திவ்யா ஆறு வருடக் காதல் என்ன ஆகிறது? அது மீண்டும் உயிர் பெறுகிறதா? அல்லது நிரந்தரமாக மரணித்து விடுகிறதா? திவ்யா திசை மாறுகிறாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு அழுத்தமான காட்சிகளாலும், வசனங்களாலும் விடை அளிக்கிறது ‘லவ்வர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

’ஜெய் பீம்’ படத்தின் மூலம் சிறந்த நடிகராக வெளிப்பட்டு, ‘குட் நைட்’ படத்தின் மூலம் வெற்றி நாயகனாக உயர்ந்த மணிகண்டன், இந்தப்படத்தில், எந்த நாயக நடிகரும் ஏற்கத் தயங்கும் அருண் என்ற கதாபாத்திரத்தில், காதலியை அதீத அன்பால் டார்ச்சர் செய்யும் மது அடிமையாக நடித்திருக்கிறார். கனமாக மேக்கப் போட்டு, டிப்-டாப்பாக உடை அணிந்து, தலைமுடி கலையாமல் திரையில் கவர்ச்சியாகத் தோன்ற வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்காமல், கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தோற்றத்துடன், அந்த கதாபாத்திரமாகவே சிறப்பாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். இப்படியொரு காதலன் எந்தப் பெண்ணுக்கும் வாய்க்கக் கூடாது என பார்வையாளர்கள் கதறுவதே, மணிகண்டனின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றி தான். பாராட்டுகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல், கதை மற்றும் கதாபாத்திரத் தேர்வில் கவனமாக இருந்தால், குறுகிய காலத்துக்குள்ளாகவே அவர் மிகப் பெரிய உயரங்களைத் தொடுவார் என்பது நிச்சயம்.

‘மாடர்ன் லவ்’ என்ற இணையத் தொடரில் நடித்து கவனம் ஈர்த்த ஸ்ரீகௌரி ப்ரியா, இந்தப்படத்தில் நாயகி திவ்யாவாக அருமையாக நடித்திருக்கிறார். காண்போரை கவர்ந்திழுக்கும் அவரது அழகும், சகல உணர்வுகளையும் துல்லியமாகக் கடத்தும் அவரது நடிப்பாற்றலும், அவருக்கு மட்டுமல்ல, இந்த படத்துக்கே மிகப்பெரிய பலம். எதிர்காலத்தில் இன்னும் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் அவரை பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இந்த படம் ஏற்படுத்துகிறது.

டீம் லீடர் மதனாக வரும் கண்ணா ரவி, தோழிகள் ரம்யா, ஐஸுவாக வரும் நிகிலா சங்கர் மற்றும் ரினி, நாயகனின் குடிகார அப்பாவாக வரும் ‘பருத்தி வீரன்’ சரவணன், அம்மாவாக வரும் கீதா கைலாசம், நாயகனின் நண்பன் விஸ்வாவாக வந்து அவ்வப்போது காமெடி வெடிகளைக் கொளுத்திப் போடும் அருணாச்சலேஸ்வரன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தேவையான அளவு நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

உண்மையான அன்பு, அக்கறை இவற்றைப் பற்றியெல்லாம் சரியான புரிதலின்றி காதலிலும், போதையிலும் விழும் இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையை யதார்த்தத்துக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ். சுவாரஸ்யமான காட்சியமைப்புகளுடன், போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். பொசசிவ்னஸ் ஒருபோதும் காதலுக்கு உதவாது என்ற பயனுள்ள கருத்தை, வார்த்தைகளில் இல்லாமல் காட்சிகள் மூலம் தெளிவாக முன்வைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.

ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டன் இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

‘லவ்வர்’ – காதலிப்பவர்களும், காதலிக்க இருப்பவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்! காதலர் தினத்தை ‘லவ்வர்’ திரையரங்குகளில் கொண்டாடி மகிழுங்கள்!