சிக்லெட்ஸ் – விமர்சனம்

நடிப்பு: சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் மற்றும் பலர்

இயக்கம்: முத்து

ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்

படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி

இசை: பாலமுரளி பாலு

தயாரிப்பு: எஸ் எஸ் பி பிலிம்ஸ்

தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசன் குரு ஏ

வெளியீடு: தமிழ் சினி கார்ப்பரேஷன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

ஹாலிவுட்டில் திரைப்படங்களை ‘லவ் ஸ்டோரி’, ‘போலீஸ் ஸ்டோரி’ ‘கேங்ஸ்டர் ஸ்டோரி’, ‘கிரைம் ஸ்டோரி’ என பல ரகங்களாக வகைப்படுத்துவார்கள். அவற்றில் ஒரு ரகம் ‘கம்மிங் ஆஃப் ஏஜ் ஸ்டோரி’. திடீரென மிகுதியாக செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் முதிர்ந்தாலும், மனம் முதிர்ச்சி அடையாததால் க்யூரியாசிட்டியும் குழப்பமுமாய் தத்தளிக்கும் பதின்ம வயது (டீன் – ஏஜ்) இளைஞர்கள் பற்றிய கதையைத் தான் ‘கம்மிங் ஆஃப் ஏஜ் ஸ்டோரி’ என்பார்கள். இதற்கு உதாரணம் ‘அமெரிக்கன் பை’ போன்ற ஹாலிவுட் படங்கள். தமிழிலும் இத்தகைய படங்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’, ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ போன்ற படங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.

‘கம்மிங் ஆஃப் ஏஜ் ஸ்டோரி’யை கத்தியைப் பயன்படுத்துவதைப் போல, கம்பி மேல் நடப்பதைப் போல இயக்குநர்கள் மிகவும் எச்சரிக்கையுடன், பொறுப்புடன் கையாண்டால், அது சமூகத்துக்கு பயன் தரும் ஆரோக்கியமான படமாக உருவாகும். மாறாக, லாப வெறியுடன் மலிவாகக் கையாண்டால், அது சமூகத்தைச் சீரழிக்கும் இழிவான படமாக மிஞ்சும். தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ திரைப்படம் ஆரோக்கியமான படமா? சீரழிக்கும் படமா? பார்க்கலாம்…

0a1l

ரியா (நயன் கரிஷ்மா), அனுஷா (அம்ரிதா ஹால்டர்), அம்பி (மஞ்சீரா) ஆகிய பதின்ம வயதுப் பெண்கள் மூவரும் சிறுவயது முதலே தோழிகள். ஒரே பள்ளியில் படித்து வருபவர்கள். இவர்களது பெற்றோர்களான கீர்த்தி (சுரேகா வாணி), சந்தோஷ் (ஸ்ரீமன்), அய்யர் (ராஜகோபால்) ஆகியோரும் கூட நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி, நல்ல முறையில் வளர்த்து வருவதாக நம்புகிறார்கள்.

ஆனால், பள்ளிப் படிப்பை முடிக்கும் அந்த பதின்ம வயதுப் பெண்கள் மூவரும், தங்களது வயதுக்கோளாறு காரணமாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல், இரட்டை அர்த்த சாட்டிங், டேட்டிங் போன்ற வில்லங்கமான விவகாரங்களில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள். இந்தப்போக்கு வளர்ந்து, செக்ஸ் மீதான க்யூரியாஸிட்டி அதிகரிப்பதை அடுத்து, எப்படியாவது ஒரு முறையாவது பாய் ஃபிரண்டுடன் உடலுறவை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஒரு நாள், ஒரு திருமணத்துக்குப் போவதாக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு, தத்தமது பாய் ஃபிரண்டுடன் காரில் கிளம்பிப் போகிறார்கள். வழியில், (மனோபாலாவின்) மெடிக்கல் ஷாப்பில் ஆணுறை பாக்கெட்டுகள் வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களைப் போலவே ஜோடி ஜோடியாக வந்திருப்பவர்களோடு சேர்ந்து பார்ட்டி அட்டண்ட் பண்ணி, ஆட்டம் – பாட்டம் என ஜாலியாக இருக்கிறார்கள். உடலுறவு கொள்ளும் வேட்கையுடன் படுக்கை அறைகளுக்கும் நுழைந்துவிடுகிறார்கள்.

ஆணுறை பாக்கெட் விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மூலம் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, அதிர்ச்சி அடைகிறார்கள். தங்கள் பிள்ளைகள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அவர்களைத் தடுத்து அழைத்து வந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில் பிள்ளைகளா… பெற்றோர்களா… யார் விருப்பம் நிறைவேறியது? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ‘சிக்லெட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மூன்று முதன்மையான பதின்ம வயதுப் பெண் கதாபாத்திரங்களில் ரியாவாக நயன் கரிஷ்மா, அனுஷாவாக அம்ரிதா ஹால்டர், அம்பியாக மஞ்சீரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பருவம் காரணமாக ஆர்வக்கோளாறில் வழிமாறிப்போக முனைப்புக் காட்டும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தங்கள் கதாபாத்திரம் கோருவதைக் காட்டிலும் கூடுதலாக தங்கள் உடம்பை கிளாமராக வெளிக்காட்டி பார்வையாளர்களை கவர்ந்திழுக்க முயன்றிருக்கிறார்கள்.

இந்த பெண்களின் பாய் ஃபிரண்ட் கதாபாத்திரங்களில் வருணாக சாத்விக் வர்மா, சிக்குவாக ஜாக் ராபின்சன், ஆரோனாக ஓர் இளைஞர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செக்ஸ் ஆர்வம் உந்தித்தள்ளும் இளைஞர் கதாபாத்திரங்களை இவர்கள் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

அந்த பெண்களின் பெற்றோர் கதாபாத்திரங்களில் கீர்த்தியாக சுரேகா வாணி, சந்தோஷாக ஸ்ரீமான், அய்யராக ராஜகோபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களும், இவர்களோடு சேர்ந்து பாட்டி வேடத்தில் வரும் பெண்மணி, மெடிக்கல் ஷாப் உரிமையாளராக வரும் மனோபாலா உள்ளிட்டோரும் தங்கள் அனுபவ நடிப்பால் கவனம் பெறுகிறார்கள்.

விடலைப்பருவ செக்ஸ் ஆர்வம் மற்றும் குழப்பம் குறித்து பொறுப்புணர்வுடன் அணுகுவதற்கு பதிலாக, இளைஞர்களை திரையரங்குக்குள் வர வைக்க வேண்டும், அப்படி வரும் இளைஞர்களின் காம உணர்வைத் தூண்டி, அவர்களை குஷிப்படுத்தி கல்லா கட்ட வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் முத்து. தனது மட்டரகமான நோக்கத்தை மூடி மறைத்து நியாயம் கற்பிப்பதற்காக படத்தின் இரண்டாம் பாதியில்… ”இந்தா பிடி…” என்று விடலைப் பருவத்தினருக்கு கொஞ்சம் அறிவுரை, அவர்களது பெற்றோர்களுக்கும் கொஞ்சம் அறிவுரை என வாரி வழங்கியிருக்கிறார்.

இயக்குநரின் ரசனைக்கேற்ப, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் கேமரா, பெண்களின் அங்கங்கள் மேல் ஈயாக மொய்த்திருக்கிறது.

‘சிக்லெட்ஸ்’ – ஆபாச விரும்பிகளுக்குப் பிடிக்கும்!