மறக்குமா நெஞ்சம் – விமர்சனம்

நடிப்பு: ரக்‌ஷன். மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனீஷ்காந்த், அருண் குரியன், அகிலா, ஆஷிகா, நட்டாலியா, விஷ்வத் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ராகோ.யோகேந்திரன்

ஒளிப்பதிவு: கோபி துரைசாமி

படத்தொகுப்பு: பாலமுரளி, சஷாங்க் மாலி

இசை: சச்சின் வாரியர்

தயாரிப்பு: ஃபிலியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் & குவியம் மீடியா ஒர்க்ஸ்

தயாரிப்பாளர்கள்: ரகு எல்லூரு, ரமேஷ் பாஞ்சங்னுலா, ஜனார்த்தன் சௌத்ரி, ராகோ.யோகேந்திரன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார்

ஆண், பெண் ஆகிய இரு பாலரும் சேர்ந்து படிக்கும் ’கோ-எட்’ பள்ளியில் படித்தவரா நீங்கள்? எந்த கவலையும் இல்லாமல் சக மாணவர்களுடன் சிரித்து, பேசி, மகிழ்ந்து திரிந்ததோடு, சக மாணவியைக் காதலிக்க முயன்ற இனிய அனுபவத்தையும் உள்ளடக்கிய உங்கள் பள்ளி வாழ்க்கையை மறக்குமா உங்கள் நெஞ்சம்? என்றென்றும் மறக்காது அல்லவா? அது தான் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படத்தின் மையக்கரு.

0a1k

2008ஆம் ஆண்டு, கன்னியாகுமரியில் உள்ள தனியார் கான்வென்ட் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பு (பிளஸ்-2) படிக்கிறார் விடலைப்பருவ மாணவர் கார்த்திக் (ரக்‌ஷன்). சக மாணவர்களான சலீம் (தீனா), கௌதம் (ராகுல்), பிரியதர்ஷினி (மலினா), சரண்யா (ஸ்வேதா வேணுகோபால்) உள்ளிட்டோருடன் நெருக்கமான நட்புடன் பழகி, விளையாட்டு, அரட்டை என ஜாலியாக இருக்கும் கார்த்திக், தனது நட்பு வட்டத்தில் இருக்கும் மாணவி பிரியதர்ஷினியை ஒருதலையாக, உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஆனால் தயக்கம் காரணமாக தன் காதலை பிரியதர்ஷினியிடம் சொல்ல இயலாமல் காலத்தைக் கடத்த, பள்ளிப் படிப்பு முடிந்துபோகிறது. நண்பர்கள் பிரிகிறார்கள்.

இதன்பிறகு, கார்த்திக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்துமளவுக்கு வளர்ந்த பிறகும், பள்ளிப் பருவத்தில் தான் ஒருதலையாய் காதலித்த மாணவி பிரியதர்ஷினியை மறக்க இயலாமல், அதே நினைவுடன், அதே காதலுணர்வுடன் இருக்கிறார். பிரியதர்ஷினியை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு, அதற்கான அரிய வாய்ப்பை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு – 2018ஆம் ஆண்டு – நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுக்கிறது…

அதாவது, கார்த்திக் படித்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 2008ஆம் ஆண்டு அந்த பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அந்த தேர்வும் அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் தேர்ச்சியும் செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் பிளஸ்-2 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

பிளஸ்-2 பாடங்களை மூன்று மாதங்களில் மீண்டும் படித்து, மீண்டும் தேர்வு எழுத வேண்டுமே என்ற கவலையில் சலீம், கௌதம், பிரியதர்ஷினி, சரண்யா உள்ளிட்ட அன்றைய மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால், பிரியதர்சினியிடம் சொல்லாமல் விட்ட காதலைச் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் வருகிறார் கார்த்திக். அவருக்கு அங்கே பேரதிர்ச்சி காத்திருக்கிறது. பிரியதர்ஷினிக்கும், வேறொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டு வருகிறது…

கார்த்திக் என்ன செய்தார்? தன் காதலை பிரியதர்சினியிடம் சொன்னாரா? அல்லது வழக்கம் போல் அதை தன் மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாரா? கிளைமாக்ஸ் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பிரபலமடைந்து, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றிப்படத்தில் நாயகன் துல்கர் சல்மானின் நண்பராக வெள்ளித் திரையில் அறிமுகமான ரக்‌ஷன், முதல் முறையாக இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். தான் ஏற்றிருக்கும் கார்த்திக் என்ற நாயக கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி, அதற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பத்து ஆண்டு இடைவெளியிலான இருவேறு தோற்றங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், பயம், வெட்கம், காமெடி என அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்புப் பயிற்சி எடுத்து தன்னை செதுக்கிக்கொண்டால், தமிழ் திரைவானில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.

நாயகி பிரியதர்ஷினியாக வரும் மலினா அழகாக இருக்கிறார். பள்ளி சீருடையில் வசீகரிக்கிறார். தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்.

ரக்‌ஷனைப் போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி புகழடைந்துள்ள தீனா, இப்படத்தில் நாயகனின் உற்ற நண்பன் சலீமாக நடித்திருக்கிறார். இவர் ஆங்காங்கே கொளுத்திப்போடும் கவுண்ட்டர் காமெடி வெடிகள் ரசிக்கும்படியாகவும், படத்துக்கு மிகப் பெரிய பலமாகவும் இருக்கின்றன.

“குண்டா” என்று சக மாணவர்களால் ’பாடி-ஷேமிங்’ செய்யப்படும் கௌதம் கதாபாத்திரத்தில் வருகிறார் ராகுல். கேலி செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தன் காதலையும், திருமணத்தையும் கூட நண்பர்களிடம் சொல்லாமல் மறைத்ததை உருக்கமாக வெளிப்படுத்தும் காட்சியில் நம் மனங்களைத் தொட்டு விடுகிறார். மேலும், கடைசி கல்ச்சுரலில் ஒரு டான்ஸ் ஆடுகிறார் பாருங்கள்… செம மாஸ்!

பி.டி மாஸ்டர் கார்த்திகேயனாக முனீஷ்காந்தும், கணக்கு ஆசிரியை ஜெனிஃபராக அகல்யாவும் நடித்திருக்கிறார்கள். இந்த காதல் ஜோடி குறைவான காட்சிகளே வந்தாலும், உண்மையான காதலுக்கு உதாரணமாக நம் இதயங்களில் இடம் பிடித்து விடுகிறது.

ராகவாக வரும் முத்தழகன், ஜோசப்பாக வரும் மெல்வின் டென்னிஸ், அர்ஜுனாக வரும் அருண் குரியன், லிண்டோஷாவாக வரும் ஆஷிகா, ஷில்பாவாக வரும் நட்டாலியா, யோகியாக வரும் விஷ்வத் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.

நினைத்தாலே இனிக்கும் பள்ளிப்பருவ வாழ்க்கையையும், அதில் முகிழ்க்கும் காதலையும், நட்பையும், கலாட்டாவையும் மையப்பொருளாக்கி, யாரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடிய கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் வடிவமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அருமையாக திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ராகோ.யோகேந்திரன். ஒவ்வொரு பார்வையாளரையும் இப்படத்தினூடே அவர்களுடைய பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் மேஜிக்கையும் இயக்குநர் நிகழ்த்தியிருக்கிறார். பாராட்டுகள்.

கன்னியாகுமரியின் எழிலை காட்சிப்படுத்தும் கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு அழகு என்றால், இசையமைப்பாளர் சச்சின் வாரியாரின் பாடலிசையும், பின்னணி இசையும் அழகோ அழகு!

‘மறக்குமா நெஞ்சம்’ – பார்க்கலாம்! ரசிக்கலாம்! பசுமை நிறைந்த பள்ளிக்கூட நாட்களுக்கு மனதுக்குள் சுகமாக போய் வரலாம்!