தூக்குதுரை – விமர்சனம்
நடிப்பு: யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், கும்கி அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜு, சிந்தாலபட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர்
இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்
ஒளிப்பதிவு: ரவி வர்மா
படத்தொகுப்பு: தீபக் எஸ்.துவாரக்நாத்
இசை: கே.எஸ்.மனோஜ்
தயாரிப்பு: அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் கதை நாயகனின் பெயர் ‘தூக்குதுரை’. அஜித் கதாபாத்திரத்தின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைத்தால் சட்டென கவன ஈர்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தினால் இந்த படத்துக்கு அந்த தலைப்பை வைத்திருக்கிறார்களே தவிர, வேறெந்த பொருத்தப்பாடும் கிடையாது பராபரமே!
ஒரு கிராமம். அதன் பெயர் கைலாசம். (சல்லாப சாமியார் நித்யானந்தாவின் ‘கைலாசா’வை பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தி சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பெயரை படக்குழு சூட்டியிருக்கிறது!)
திருவிழாக்களில் திரைப்படங்களைத் திரையிடும் ப்ரொஜெக்டர் ஆபரேட்டரான யோகி பாபு, ஃபிலிம் சுருளுடன் கைலாசம் கிராமத்துக்கு வருகிறார். வந்த இடத்தில், அவரும், அரச பரம்பரையைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் இனியாவும் காதலிக்கிறார்கள். இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போகவும் தயாராகிறார்கள்.
இதனிடையே, தலைமுறை தலைமுறையாக அரச குடும்பத்தின் பாதுகாப்பில் விலை மதிப்பில்லாத வைர கிரீடம் ஒன்று இருந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோயில் திருவிழாவின்போது மட்டும் அந்த கிரீடம் எடுத்து வரப்பட்டு, மக்களிடம் காண்பிக்கப்படும். அது தற்சமயம், அரச பரம்பரையைச் சேர்ந்த மாரிமுத்துவின் பாதுகாப்பில் இருக்கிறது.
மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணனுக்கு அண்ணன் மேல் பயங்கர பொறாமை. கிரீடம் மாரிமுத்துவின் வசம் இருப்பதால் தான் கோயில் திருவிழா உட்பட எல்லா முக்கிய நிகழ்வுகளும் அவரது தலைமையிலேயே நடக்கிறது என்ற எரிச்சலிலும், அந்த முதல் மரியாதை தனக்குக் கிடைக்கவில்லை என்ற கோபத்திலும் இருக்கிறார் நமோ நாராயணன். கிரீடம் காணாமல் போனால் திருவிழா தடைபடும்; அதன்பின் அண்ணனுக்கு முதல் மரியாதை கிடைக்காது என நினைக்கும் அவர், மாரிமுத்து வைத்திருக்கும் கிரீடத்தைத் திருட தனது அடியாட்களை ஏவி விடுகிறார்.
மறுபுறம், நகரத்தில், திருட்டுத் தொழிலை பாடமாகக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக விளங்குகிறார் நான் கடவுள் ராஜேந்திரன். அவரிடம் பாடம் பயில வரும் சென்ட்ராயன், பால சரவணன், மகேஷ் உள்ளிட்டோருக்கு, கைலாசம் கிராமத்தில் அரச பரம்பரையினரிடம் இருக்கும் வைரகிரீடத்தை திருடிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் அசைன்மெண்ட் கொடுக்கிறார்.
இந்நிலையில், காதலர்களான யோகி பாபுவும், இனியாவும் ஊரைவிட்டு ஓடுவதை அறிந்த மாரிமுத்து, ஊர் மக்களை உசுப்பிவிட்டு, யோகி பாபுவை அடித்துக்கொன்று கிணற்றில் வீசிவிடுமாறு கூறுகிறார். அதன்படி யோகி பாபு கொல்லப்பட்டு கிணற்றுக்குள் வீசப்படுகிறார். கிணறும் மூடப்படுகிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக வைரகிரீடம் கிணற்றுக்குள் சிக்கிக் கொள்கிறது. அதை எடுக்க முயலுகிறவர்களை எல்லாம் பேயாக இருக்கும் யோகி பாபு படாத பாடு படுத்துகிறார்.
வைரகிரீடம் கிணற்றுக்குள் சிக்கியது எப்படி? அது மீண்டும் மாரிமுத்துவுக்கு கிடைத்ததா? அல்லது அவர் நமோ நாராயணன் ஆசைப்பட்டபடி முதல் மரியாதையை இழந்தாரா? யோகி பாபுவைக் காதலித்த இனியாவின் கதி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘தூக்குதுரை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதை நாயகனான யோகி பாபு குறைவான காட்சிகளில் வந்தாலும், அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தனது தனித்துவமான நக்கல் நையாண்டியால் சிரிக்க வைக்கிறார். அவர் வராத காட்சிகளில் பால சரவணன் – செண்ட்ராயன் – மகேஷ் – நான் கடவுள் ராஜேந்திரன் கூட்டணி காமெடி வெடியை கொளுத்திப் போட்டு சிரிக்க வைக்கிறது.
அரச பரம்பரை வாரிசு என்று சொல்லத் தகுந்தாற்போல் அழகாகவும் செழுமையாகவும் வருகிறார் இனியா. யோகி பாபுவின் காதலி என்ற கதாபாத்திரத்தை அசால்டாக செய்து சிறப்பித்திருக்கிறார்.
மாரிமுத்து, நமோ நாராயணன், அவரது மகனாக வரும் கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹாரர் காமெடி ஜானரில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும், தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.
‘தூக்குதுரை’ – பார்த்து, சிரித்து, மகிழலாம்!