ப்ளூ ஸ்டார் – விமர்சனம்

நடிப்பு: அசோக் செல்வன், ஷாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் (எ) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, திவ்யா துரைசாமி, டி.என்.அருண் பாலாஜி மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.ஜெயக்குமார்

ஒளிப்பதிவு: தமிழ் அ அழகன்

படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே

இசை: கோவிந்த் வசந்தா

தயாரிப்பு: ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா

வெளியீடு: ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ பா.இரஞ்சித்

பத்திரிகை தொடர்பு: குணா

சமீபகாலமாக சாதியச் சமூகத்தை தோலுரித்துக் காட்டும் யதார்த்த திரைப்படங்கள் தமிழில் நிறையவே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மிக முக்கியமான படமாக வந்திருக்கிறது ‘ப்ளூ ஸ்டார்’. “ஆதிக்க சக்தி எனும் பொது எதிரியை வீழ்த்த, பிற்படுத்தப்பட்ட மக்களும், பட்டியலின மக்களும் தங்கள் மனமாச்சரியங்களைக் களைந்து ஒன்றுசேர வேண்டும்” என்ற கருத்தை, பிரசாரமாக அல்லாமல், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ஜனரஞ்சக கலை வடிவத்தில் எடுத்துரைக்கப் படைக்கப்பட்டிருக்கிறது இந்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்.

0a1b

1990-களின் இறுதியில், அரக்கோணம் அருகில் உள்ள பெரும்பச்சை என்ற கிராமத்தில் இப்படக்கதை நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு கிரிக்கெட் அணிகள் இருக்கின்றன. ஒன்று, பட்டியலின மக்கள் வாழும் ’காலனி’ சார்பான ‘ப்ளூ ஸ்டார்’ அணி. இதன் தலைவர் ரஞ்சித் (அசோக் செல்வன்). மற்றொன்று, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் ’ஊர்’ சார்பான ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணி. இதன் தலைவர் ராஜேஷ் (ஷாந்தனு பாக்யராஜ்).

சில ஆண்டுகளுக்கு முன், கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட சண்டை காரணமாக, மேற்கண்ட இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ப்ளூ ஸ்டார் அணியின் தலைவரான ரஞ்சித்துக்கு, ராஜேஷ் தலைமையிலான ஆல்ஃபா பாய்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வெற்றி வாகை சூட வேண்டும் என்று ஆசை.

ஒருநாள், ஊராரின் அனுமதியுடன் ப்ளூ ஸ்டார் அணிக்கும், ஆல்ஃபா பாய்ஸ் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதில், நகரத்திலிருந்து தொழில்முறை ‘கிளப்’ அணி வீரர்களை பணம் கொடுத்து அழைத்து வந்து, தனது ஆல்ஃபா பாய்ஸ் அணி சார்பில் விளையாட வைத்து, வெற்றி பெறுகிறார் ராஜேஷ். எனினும், பணத்துக்காக வந்து விளையாடிய கிளப் அணியினர் ராஜேஷையும், அவரது அணியினரையும் கேவலமாகப் பார்க்கிறார்கள்.

ஒரு நாள் கிளப்புக்குச் செல்லும் ராஜேஷை, “இங்கே வருவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும்; அது உனக்கு இல்லை” என்று கிளப் அணியினர் ஏளனமாகப் பேசி அடித்து விரட்டுகிறார்கள். அப்போது ராஜேஷுக்கு தோள் கொடுக்க முன்வருகிறார் ரஞ்சித். அடுத்தவரை தாழ்வாக நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்து திருந்துகிறார் ராஜேஷ்.

ரஞ்சித்தும், ராஜேஷும் கை கோர்க்கிறார்கள். ப்ளூ ஸ்டார் அணியும், ஆல்ஃபா பாய்ஸ் அணியும் ஓரணி ஆகிறது. அவர்கள் கிளப் அணியையும், ஏனைய அணிகளையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதை சுவாரஸ்யமாக சித்தரிக்கிறது ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ரஞ்சித்தாக நடித்திருக்கும் அசோக் செல்வன், மீசை இல்லாமல், விடலைப் பருவத்துக்குரிய கல்லூரி மாணவர் தோற்றத்தில் வருகிறார். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் நெருப்பாகவும், காதலில் உருகும் பனியாகவும் பிரமாதமாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது காதலி ஆனந்தியாக, பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்ணாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன், நாயகனுடன் வெறுமனே டூயட் பாடிவிட்டுப் போகும் நாயகியாக அல்லாமல், கதையின் முக்கியமான, தைரியம் மிக்க கதாபாத்திரம் தாங்கி வருகிறார். அக்கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பொறுப்பாக நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகன் ராஜேஷாக நடித்திருக்கும் ஷாந்தனு பாக்யராஜ், தனது கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பதற்கு தனக்கொரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா என வெகுநாட்களாக ஏங்கிக்கொண்டிருந்த அவருக்கு இந்த படத்தில் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நாயகன் ரஞ்சித்தின் (அசோக் செல்வனின்) தம்பி சாமாக நடித்திருக்கும் பிரித்வி, காதலும் காமெடியும் கலந்த கதாபாத்திரத்தில் கலகலப்பூட்டும் நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். அவரது காதலி தேன்மொழியாக வரும் திவ்யா துரைசாமி அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகன் ரஞ்சித்தின் அன்பான அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல், அவ்வப்போது சிரிக்க வைக்கும் அம்மா சுசிலாவாக வரும் லிஸ்ஸி ஆண்டனி, இளைஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் கிரிக்கெட் மென்ட்டர் இமானுவேலாக வரும் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கிராமப்புறத்தில் நிலவும் கேடுகெட்ட சாதிய ஏற்றத்தாழ்வும் – ஒடுக்குமுறையும், காதல் திருமணம், பொதுக்கிணறு, பொது இடுகாடு, இரட்டை டம்ளர் போன்ற விவகாரங்களில் மட்டும் அல்ல, இளைஞர்களின் விளையாட்டிலும் பிரதிபலிப்பதை கவனித்து, அதை கதைக்கருவாகத் தேர்ந்தெடுத்து, அதோடு கிரிக்கெட் விளையாட்டைக் கலந்த இயக்குநர் எம்.ஜெயக்குமார் பாராட்டுக்குரியவர். எழுத்தாளர் தமிழ் பிரபாவின் வீரியமிக்க திரைக்கதை – வசனத்தில் விரிந்த இப்படத்தை, தொய்வின்றி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்களும், பட்டியலின மக்களும் ஒன்றுபட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை முன்வைத்ததற்காக இயக்குநருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய தேவைக்கேற்ற இது போன்ற திரைப்படங்களை அவர் எதிர்காலத்திலும் படைத்தளிப்பார் என நம்புவோம்.

ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் கதை மாந்தர்களை மட்டுமின்றி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கதைக் களத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசையில், உமாதேவி, அறிவு ஆகியோரின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.

செல்வா ஆர்.கே படத்தொகுப்பும், ஜெயரகு.எல் கலை இயக்கமும் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘ப்ளூ ஸ்டார்’ – அவசியம் கண்டு களிக்க வேண்டிய பிரகாசமான நட்சத்திரம்!