ஹனு-மான்: விமர்சனம்
நடிப்பு: தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், சமுத்திரக்கனி, ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர்
இயக்கம்: பிரசாந்த் வர்மா
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
இசை: அனுதீப் தேவ், கெளரா ஹரி, கிருஷ்ணா செளரப்
தயாரிப்பு: ’பிரைம்ஷோ என்டர்டெயின்மெண்ட்’ நிரஞ்சன் ரெட்டி
தமிழ்நாடு வெளியீடு: ’சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’ சக்திவேலன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
பள்ளிச் சிறுவனான மைக்கேல், ’சூப்பர்மேன்’ ஆக வேண்டும் என பேராசை கொள்கிறான். இதை அவனது அம்மாவும், அப்பாவும் கண்டிக்கிறார்கள். தன் பெற்றோர்கள் இருக்கும் வரை தன்னால் சூப்பர்மேன் ஆக முடியாது என்ற முடிவுக்கு வரும் மைக்கேல், அம்மாவையும், அப்பாவையும் உயிரோடு எரித்து கொலை செய்கிறான். அவன் வளர்ந்து இளைஞன் மைக்கேலாக (வினய் ராய்) ஆன பிறகு, நிறைய ஆராய்ச்சிகள் – பரிசோதனைகள் செய்து, இறுதியில் சூப்பர்மேனாகவே ஆகிவிடுகிறான்.
இதனிடையே, ஆந்திராவின் மலையடிவாரத்தில் உள்ள அஞ்சானத்ரி என்ற குக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் (‘ஹனுமந்த்’ என்ற கதைப்பெயர் கொண்ட) தேஜா சஜ்ஜா. இவர் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து, அதில் சுவாரஸ்யத்தை தேடுபவர். இவரின் அக்கா வரலட்சுமி சரத்குமார். தனது தம்பி தேஜா மீது அளவற்ற பாசம் வைத்திருப்பவர். தேஜாவின் சிறுவயது சினேகிதி அம்ரிதா அய்யர். அவர் நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வருகிறார்.
அந்த கிராமத்தின் பரம்பரை வழக்கப்படி காவல்காரனாக இருந்துகொண்டு, அதிகாரம் செலுத்தி வருகிறான் ராஜ் தீபக் ஷெட்டி. மக்களை அடிமைகளாக வைத்து, அரட்டி, மிரட்டி, கசக்கிப் பிழிந்து, ரவுடித்தனம் செய்து, வரி வசூலித்து வருகிறான். இதனை ஏற்க மறுக்கும் அம்ரிதா அய்யர், “இந்த காலத்தில் காவல்காரனெல்லாம் தேவையில்லை. நமக்குத் தேவை கிராமத்துக்கு நல்லது செய்யக் கூடிய ஒரு தலைவன்” என்று பிரகடனம் செய்கிறார். இதன்மூலம் ராஜ் தீபக் ஷெட்டியின் பகையைச் சம்பாதிக்கிறார்.
அம்ரிதாவுக்காக ராஜ் தீபக் ஷெட்டியை எதிர்க்க முன்வருகிறார் தேஜா. அதுநாள் வரை அடங்கிக் கிடந்த தேஜா, திடீரென அபூர்வ சக்தி கிடைக்கப் பெற்றவராக, பலம் பொருந்தியவராக மாறுகிறார். இந்த மாற்றத்துக்குக் காரணம், அனுமாரின் ரத்தத் துளியால் உருவான, மிகவும் சக்தி வாய்ந்த அற்புதக் கல் அவருக்கு கிடைப்பது தான். அந்த அற்புதக் கல்லின் சக்தியால் தேஜா மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு, அதன்மூலம் மக்களுக்கு நல்லது செய்கிறார்.
தேஜாவின் சக்தி பற்றி தெரிந்துகொள்ளும் வில்லன் மைக்கேல், அவரிடம் இருக்கும் அற்புதக் கல்லை கைப்பற்றுவதற்காக அவரைத் தேடி வருகிறான். அவன் நினைத்தது நடந்ததா?, தேஜாவுக்கு அனுமாரின் சக்தி வாய்ந்த அற்புதக் கல் கிடைத்தது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஹனு-மான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனுக்கு ‘ஹனுமந்த்’ என்ற இந்துப் பெயரையும், கொடிய வில்லனுக்கு ’மைக்கேல்’ என்ற கிறிஸ்துவப் பெயரையும் வைத்திருப்பதில் தொடங்கி, இன்று வெறுப்பு பிரச்சார முழக்கங்களாக மாறிவிட்ட “ஜெய் ஸ்ரீராம்”, “ஜெய் ஹனுமன்” என்பனவற்றை ஆங்காங்கே நிரவி விட்டிருப்பது வரை இப்படம் எந்த அரசியலை உயர்த்திப் பிடிப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வெள்ளிடமலை. தெலுங்கு திரையுலகம் வெகுவேகமாக இந்துத்துவ மயமாகி சீரழிந்து வருகிறது என்பதற்கும், அங்கே இந்துத்துவம் லாபம் கொழிக்கும் விற்பனைச் சரக்காக மாறிவிட்டது என்பதற்கும் இந்த படம் மற்றுமொரு எடுத்துக்காட்டு.
‘ஹனு-மான்’ – இந்து மதத்துக்கும், இந்துத்துவ அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத பாமரர்கள் பார்த்து ரசிக்கலாம்! இந்துத்துவ வெறியர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம்!