வட்டார வழக்கு – விமர்சனம்
நடிப்பு: சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், விஜி, சுப்பிரமணியபுரம் விசித்திரன், ஜெட் பிரசன்னா, முருகேசன், ஈஸ்வரன் மற்றும் பலர்
இயக்கம்: கண்ணுச்சாமி ராமச்சந்திரன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: சுரேஷ் மணியன் & டோனி சான்
தயாரிப்பு: கண்ணுச்சாமி ராமச்சந்திரன்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
மதுரை மாவட்டம் சமயநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், 1980களின் இறுதியில் இப்படத்தின் கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் அகமுடையார் (எ) சேர்வை சாதியைச் சேர்ந்த இரு பங்காளி குடும்பங்களுக்கு இடையே பல வருடங்களாக பகை இருந்து வருகிறது. இக்குடும்பங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சேங்கை மாறன் (சந்தோஷ் நம்பிராஜன்), பகைக் குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். இதனால், பகை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாயகனை பழிவாங்க முயற்சிக்க, அதை சுற்றி நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை எதார்த்தமாக சொல்வது தான் ‘வட்டார வழக்கு’.
‘டூலெட்’ என்ற விருதுப்படத்தில் கதையின் நாயகனாக நடித்த சந்தோஷ் நம்பிராஜன், இந்தப்படத்திலும் கதையின் நாயகன் சேங்கை மாறனாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். மண்ணுக்கேற்ற முகமும், உடல்வாகும் கொண்ட இவர் காதலையும், காமெடியையும், ஆக்ரோஷத்தையும் பார்வையாளர்களுக்கு அசத்தலாகக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
‘மாமன்னன்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ரவீனா ரவி, இந்தப்படத்தில் கதையின் நாயகி தொட்டிச்சியாக அருமையாக நடித்திருக்கிறார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கும் அதேநேரம், ஊரிலுள்ள முதியவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் அவரது கதாபாத்திரம் காமெடியாகவும் உயிரோட்டத்துடனும் படைக்கப்பட்டிருப்பதை நன்றாக உள்வாங்கி, அதற்கேற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கண்களாலும், சைகைகளாலும் நாயகனுடன் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகளில் பிரமாதமாக நடித்து பார்வையாளர்களின் மனங்களின் இடம் பிடித்துவிடுகிறார்.
பங்காளி குடும்பத்தின் மூத்தவராக வரும் விஜய் சத்யா, நாயகனின் அண்ணனாக வரும் பருத்திவீரன் வெங்கடேஷ், நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் மற்றும் சற்று மனநிலை சரியில்லாதவராக வரும் நபர் உள்ளிட்ட அனைவரும் செயற்கைத்தனம் இல்லாமல் தத்தமது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
எந்த பூச்சும், சினிமாத்தனமும் இல்லாமல், அச்சு அசலான கிராமியக் காதலையும், மோதலையும் மையப்படுத்தி, உணர்வுபூர்வமாக இந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கண்ணுச்சாமி. பெரும்பாலான கதாபாத்திரங்களில், இதற்குமுன் திரையில் தோன்றாத நிஜ கிராமத்து மக்களை நடிக்க வைத்து அவர்களது வாழ்வியலை யதார்த்தமாக காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்ப்பது போல், மதுரை மண்ணின் வட்டார வழக்கு உரையாடல் மிகவும் சிறப்பாக, துல்லியமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. அதை எழுதிய இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரனுக்கு பாராட்டுகள்.
இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசையும் அருமை. 1980களின் பிற்பகுதியில் நடக்கும் கதை என்பதால் அக்காலகட்ட இளையராஜாவின் பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது காட்சிகளுக்கு வலிமை சேர்க்கிறது.
சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் ஒளிப்பதிவு அனலான கிராமத்து மண்ணையும் மக்களையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது.
‘வட்டார வழக்கு’ – நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அசலான கிராமத்துப்படம்; கண்டு களிக்கலாம்!