கண்ணகி – விமர்சனம்

நடிப்பு: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஸோயா, மயில்சாமி, வெற்றி எம், அதேஷ் சுதாகர், மவுனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: யஷ்வந்த் கிஷோர்

இசை: ஷான் ரஹ்மான்

ஒளிப்பதிவு: ராம்ஜி

படத்தொகுப்பு: கே.சரத்குமார்

தயாரிப்பு: எம்.கணேஷ் & ஜே.தனுஷ்

வெளியீடு: ’சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பொள்ளாச்சியில் வசிக்கும் கலை (அம்மு அபிராமி) திருமணத்துக்காக காத்திருக்கிறார். அவரை பார்க்க வரும் வரன்களை அவரது அம்மா சரளா (மவுனிகா) ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக் கழித்தபடியே இருக்கிறார். அவரை அவரது கணவரால் (மயில்சாமி) கன்வின்ஸ் செய்ய இயலவில்லை.

கோயம்புத்தூரில் வசிக்கும் நேத்ராவால் (வித்யா பிரதீப்) குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அவரது கணவர் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கை எதிர்கொள்ள, இளம் வழக்கறிஞர் (வெற்றி எம்) நேத்ராவுக்கு உதவுகிறார்.

பெங்களூருவில் பணியாற்றும் நதி (ஷாலின் ஸோயா) காதலிப்பதையும், திருமணம் செய்துகொள்வதையும் அறவே வெறுக்கிறார். விட்டு விடுதலையாய், சுதந்திரமாக வாழ விரும்புகிறார். ஆனால் அவருடன் லிவ்-இன் உறவில் இருக்கும் அபிரூபன் (அதேஷ் சுதாகர்) திருமணத்துக்கு வற்புறுத்துகிறார்.

சென்னையில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் கீதா (கீர்த்தி பாண்டியன்). அவரும் உதவி இயக்குநராக இருக்கும் அவரது காதலரும் (யஷ்வந்த் கிஷோர்) அந்தக் கருவைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படாதபாடு படுகிறார்கள்.

இப்படி கலை, நேத்ரா, நதி, கீதா ஆகிய 4 பெண்களும் ஆளுக்கொரு பிரச்சனையில் சிக்கி அல்லாடும் நிலையில், அந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள்? இவர்களுக்கிடையிலான தொடர்பு என்ன? என்பதைச் சொல்கிறது ‘கண்ணகி’ திரைப்படத்தின் மீதிக் கதை.

0a1m

பொள்ளாச்சிப் பெண் கலையாக வரும் அம்மு அபிராமி, கோயம்புத்தூர் பெண் நேத்ராவாக வரும் வித்யா பிரதீப், பெங்களூரு பெண் நதியாக வரும் ஷாலின் ஸோயா, சென்னைப் பெண் கீதாவாக வரும் கீர்த்தி பாண்டியன் ஆகிய நால்வருமே கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விவாகரத்து வழக்கில் நேத்ராவுக்கு உதவும் வழக்கறிஞராக வரும் வெற்றி எம், காதலிலும், திருமணத்திலும் நம்பிக்கை இல்லாத நதியின் லிவ்-இன் உறவுக்காரராக வந்து தத்தளிக்கும் அதேஷ் சுதாகர், வேண்டாத கர்ப்பத்தைக் கலைக்க முயலும் கீதாவோடு சேர்ந்து அலையும் அவரது காதலராக வரும் யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

கலையின் அம்மா சரளாவாக வரும் மவுனிகா, அப்பாவாக வரும் மயில்சாமி ஆகிய இருவரும் தங்களது அனுபவ நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சமூக – பொருளாதார நிலை, வசிப்பிடம், வயது என வெவ்வேறு பின்னணி கொண்ட நான்கு கதாபாத்திரங்களை முன்வைத்து பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகளைப் பேச முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். பெண்களின் அசலானப் பிரச்சினைகள் குறித்து முற்போக்குப் பார்வையுடனும் அக்கறையுடனும் சரியான புரிதலுடனும் காட்சிகளை அமைத்து பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

ராம்ஜியின் தரமான ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. ஷான் ரகுமானின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

நம் சமூகத்தில் உள்ள எல்லா வகையான பெண்களின் வாழ்வையும், பிரச்சினைகளையும், அவர்களின் அனைத்து வகையான குணங்களையும் ஒரே திரைப்படத்தில் காட்டிவிட வேண்டும் என்ற திட்டத்தோடு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘கண்ணகி’ – கண்டு களிக்கலாம்!