நத்தம் விஸ்வநாதன் ரூ.525 கோடி லஞ்சம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
சூரிய சக்தி மின்சார கொள்முதலில் முறைகேடு செய்ததாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், ஊழல் தடுப்பு போலீஸார் ஜூன் 2-வது வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த எஸ்.பி.சீனிவாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சூரிய மின்சக்தி போன்ற மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. சூரிய சக்தி மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.6.48 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய, ஆரம்பத்தில் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறி, மின் பகிர்மானக் கழகம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7.01-க்கு வாங்க மீண்டும் விலை நிர்ணயம் செய்தது.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதானி குழுமத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்களை அமைப்பதற்காகவே முறைகேடாக அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ.5.01-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதற்காக அதானி உள்ளிட்ட பல்வேறு சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களிடம் இருந்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரு மெகா வாட் மின்சாரத்துக்கு ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். விதிமுறைகளை மீறி பல நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சில எம்எல்ஏக்களின் பினாமிகள் பெயரில் உள்ளவை.
அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதால் மின் பகிர்மான கழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து நத்தம் விஸ்வநாதன் ரூ.525 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக கடந்த மார்ச் 1-ம் தேதி ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.தேவ தாஸ் விசாரித்தார். இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் ஜூன் 2-வது வாரத்துக்குள் தங்கள் தரப்பு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.