பார்க்கிங் – விமர்சனம்
நடிப்பு: ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ரமா ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு, சுரேஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ராம்குமார் பாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: ஜிஜு சன்னி
படத்தொகுப்பு: பிலோமின் ராஜ்
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ சுதன் சுந்தரம் & கே.எஸ்.சினிஷ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
இந்தியாவில், ஒரு காலத்தில் பணக்காரக் குடும்பங்களின் சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருந்த கார், 1990-களில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் துவங்கிய பின், திடீரென நடுத்தர வர்க்க குடும்பங்களின் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருளாகக் கருதப்படும் நிலையை எட்டிவிட்டது. இதனால், சொந்த வீடு வாங்குகிறார்களோ இல்லையோ, போட்டி போட்டுக்கொண்டு முதலில் கடனிலாவது கார் வாங்குவது ஃபேஷனாகிவிட்டது. விளைவாக, கார் பெருக்கம் வீங்கிக்கொண்டே செல்ல, காரை நிறுத்த – ‘பார்க்கிங்’ செய்ய – போதுமான இடவசதி இல்லாத நெருக்கடி எல்லா நகரங்களிலும் ஏற்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் பிரச்சனை இன்று நகர வாழ்க்கையின் அன்றாட முக்கியப் பிரச்சனையாய் வடிவெடுத்து, சாதாரண மனிதர்களுக்கிடையில் முட்டலையும் மோதலையும் உருவாக்கி வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்த – ஆனால் ஆழ்ந்து யோசிக்காமல் கடந்துபோகிற – இந்த பிரச்சனையையும், அது ஈகோவை உரசினால் எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதையும் கதைக்கருவாக வைத்து, ரசனையான, விறுவிறுப்பான, உயிரோட்டமுள்ள இப்படத்தை படைத்திருக்கிறார்கள்.
கதை சென்னையில் நடக்கிறது. ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர் ஈஸ்வர் (ஹரிஷ் கல்யாண்), கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி ஆதிகாவுடன் (இந்துஜா), தன் அலுவலகத்தின் அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மாடி போர்ஷனில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டின் கீழ் போர்ஷனில் குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பெரியவர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்), தன் மனைவி செல்வி (ரமா ராஜேந்திரா), பதின்ம வயது மகள் அபர்ணா (பிரார்த்தனா நாதன்) ஆகியோருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த இரண்டு குடும்பங்களும் ஆரம்பத்தில் நல்ல அண்டை வீட்டாராக அனுசரணையுடன் பழகி வருகின்றன.
இந்நிலையில், கர்ப்பிணி மனைவியை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்று வர வேண்டும் என்பதற்காக, லோன் போட்டு ஒரு புது கார் வாங்குகிறார் ஈஸ்வர். வீட்டின் பார்க்கிங் ஏரியாவின் இடப்போதாமை காரணமாக ஈஸ்வரின் காரையும், இளம்பரிதியின் பைக்கையும் ஒரே இடத்தில் நிறுத்துவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தச் சொல்லுகிறார் பெரியவர் இளம்பரிதி. ‘புது காரை வெளியே நிறுத்துவதா? முடியாது’ என்று திடமாக மறுக்கிறார் இளைஞர் ஈஸ்வர். அவ்வளவு தான். இரண்டு தலைமுறையினருக்கும் இடையே ஈகோ யுத்தம் வெடிக்கிறது. ‘அவனால் மட்டும் தான் கார் வாங்க முடியுமா? என்னால் முடியாதா?’ என்று ஆவேசப்படும் இளம்பரிதி, தன் பைக்கை விற்றுவிட்டு, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் போட்டு ரொக்கத்துக்கு ஒரு புது கார் வாங்குகிறார்.
ஒரு காரையும், ஒரு பைக்கையும் நிறுத்துவதற்கே தாராளமான இடம் இல்லாத பார்க்கிங்கில் இரண்டு கார்களை எப்படி நிறுத்துவது? இதனால் முதலில் வந்து பார்க்கிங்கில் இடம் பிடிப்பதற்காக இருவரும் போட்டி போடுகிறார்கள். இப்படி வளரும் ஈகோ யுத்தம் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – பாலஸ்தீன போர் ரேஞ்சுக்கு உக்கிரமடைந்து, ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் அளவுக்கு வெறியூட்டி, சதிச்செயல்கள் செய்ய வைக்கிறது. அந்த சதிச்செயல்கள் என்ன என்பதும், அவற்றின் விளைவுகள் என்ன என்பதும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை.
சாக்லேட் பாயாக வலம் வந்துகொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண், இப்படத்தில் ஈஸ்வர் என்ற ஐ.டி.துறை இளைஞராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்துள்ள படங்களில் இது தான் ‘கேரியர் பெஸ்ட்’ என சொல்லத்தக்க விதத்தில் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கர்ப்பிணி மனைவியை கவனிப்பதில் ஆகட்டும், ஈகோ மோதலில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சதிச்செயல்கள் செய்வதில் ஆகட்டும், அர்ப்பணிப்பு உணர்வுடன் தனித்துவமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.
பேரூராட்சி அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி பெரியவர் இளம்பரிதியாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதை தூக்கி நிறுத்துவதில் வல்லவர் என பெயர் பெற்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இதில் இளம்பரிதியாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். சட்னி முதற்கொண்டு எதுவாக இருந்தாலும் தான் நினைக்கிறபடி தான் இருக்க வேண்டும் என்ற பிடிவாதம், வீட்டிலும் அலுவலகத்திலும் கடைப்பிடிக்கும் கடுமையான கண்டிப்பு, ஈகோ யுத்தத்தில் எந்த எல்லைக்கும் போய் ஒருகை பார்க்கும் ஆக்ரோஷம் என அனைத்து உணர்வுகளையும் பிரமாதமாக வெளிப்படுத்தி பிய்த்து உதறியிருக்கிறார். அவருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான (supporting actor) விருது எத்தனை கொடுத்தாலும் தகும்.
நாயகனின் காதல் மனைவி ஆதிகாவாக இந்துஜா நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கர்ப்பிணி கோலத்தில் இருக்க வேண்டிய கதாபாத்திரம் என்று சொன்னால், பெரும்பாலான இளம் நடிகைகள் ஏற்க மறுத்து தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். ஆனால், சவாலான இந்த கதாபாத்திரத்தை ஏற்று, நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் இந்துஜா.
பெரியவர் இளம்பரிதியின் மனைவி செல்வியாக வரும் ரமா, மகள் அபர்ணாவாக வரும் பிரார்த்தனா, ஹவுஸ் ஓனராக வரும் இளவரசு, எல்.ஐ.சி. ஏஜெண்டாக வரும் சுரேஷ் மற்றும் இஸ்திரி கடைக்காரராக வருபவர் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இன்று நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கிற பெரும்பாலான குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஓர் எளிமையான, சாதாரண பார்க்கிங் பிரச்சனை, மெல்ல மெல்ல வளர்ந்து, கீரிக்கும் பாம்புக்கும் இடையே நடக்கும் தீவிர பிரச்சனையாக ஆக்ரோஷ வடிவம் எடுத்து, கொலைவெறியுடன் பழிவாங்கும் த்ரில்லராக மாறுவதை, சொற்ப கதாபாத்திரங்களை வைத்து மிக மிக அழகான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் . ஈகோ பார்க்காமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போனால் பல பிரச்சனைகள் சுமுகமாக தீர்ந்துவிடும் என்ற நல்ல கருத்தை பார்வையாளர்களின் மனதில் பதியும்படி – சொற்பொழிவாக அல்லாமல் – கலை வடிவில் சொல்லியிருக்கிறார். பாராட்டுகள்.
ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜின் படத்தொகுப்பும், சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசையும் இயக்குநரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
‘பார்க்கிங்’ – அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய தரமான நல்ல படம். அவசியம் கண்டு களியுங்கள்!