ஜோ – விமர்சனம்

நடிப்பு: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா, சார்லி, அன்புதாசன், விஜே ராகேஷ், இளங்கோ குமணன், ஜெயகுமார், எம்.ஜே.ஸ்ரீராம் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஹரிஹரன் ராம்.எஸ்

ஒளிப்பதிவு: ராகுல் கே.ஜி.விக்னேஷ்

படத்தொகுப்பு: வருண் கே.ஜி

இசை: சித்து குமார்

தயாரிப்பு: ’விஷன் சினிமா ஹவுஸ்’ டாக்டர் டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர் (டிஒன்)

வெட்டு, குத்து, கொலை, ரத்தம் என வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டும் திரைப்படங்களும், பேய், பிசாசு, ரத்தக்காட்டேரி என ஈரக்குலையை நடுங்க வைக்கும் திரைப்படங்களும் வாராவாரம் வந்து குவிந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ் திரைச்சூழலில், இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அரிதாகப் பூக்கும் குறிஞ்சி மலர் போல, மனதை வருடி இதமளிக்கும் முழுமையான, உணர்வுபூர்வமான காதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ‘ஜோ’.

0a1b

கதை ராமேசுவரத்தில் ஆரம்பமாகிறது. இங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நாயகன் ஜோவும் (ரியோ ராஜ்), அவரது நண்பர்களும் விடலைப் பருவத்துக்குரிய கூத்தும் கும்மாளமுமாய் பொழுதைக் கழிக்கிறார்கள்.

பிளஸ்-2 முடித்தபின், கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேருகிறார் ஜோ. அதே கல்லூரிக்கு அவரது வகுப்பு சக மாணவியாக, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த சுசி (மாளவிகா மனோஜ்) என்ற மலையாளப் பெண்ணும் வருகிறார். அவரை கண்ட மாத்திரத்தில் அவர் மீது காதல் கொள்கிறார் ஜோ. ஆனால், சுசியிடம் காதலைச் சொல்ல தயங்குகிறார். காரணம், யார் லவ் புரபோஸ் செய்தாலும் உடனே அழ ஆரம்பித்துவிடுவார் சுசி. இந்நிலையில், தன்னை பின்தொடரும் ஜோ மீது சுசிக்கு மெல்ல மெல்ல காதல் வருகிறது. நண்பர்களின் உற்சாகத் தூண்டுதலில் ஜோ துணிந்து காதலைச் சொல்ல, சுசி ஏற்றுக்கொள்கிறார். இதன்பின் காதலர்கள் இளமை வேகத்தில் பொது இடங்களில் கட்டித் தழுவுதல், பஸ்ஸில் சேர்ந்து பயணித்தல், இதழ் முத்தம் பரிமாறுதல் என காதலையும், ஈகோவுடன் கோபித்தல், பின்னர் மன்னிப்புக் கோரி சமாதானம் ஆதல் என ஊடலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வருகிறார்கள்.

கல்லூரிப் படிப்பு முடிந்து, இருவரும் தத்தமது ஊருக்குச் சென்று விடுகிறார்கள். அதன்பின்னும் காதல் தொடர்கிறது. பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத சுசி, தன் வீட்டுக்கு வந்து திருமணம் குறித்து தனது பெற்றோர்களிடம் பேசுமாறு ஜோவுக்கு அழைப்பு விடுக்கிறார். அதன்படி ஆலப்புழாவுக்குச் செல்லும் ஜோ, சுசியின் பெற்றோர்களிடம் தங்கள் காதல் குறித்து தெரிவிக்கிறார். ஆனால், அந்நிய மாநிலத்தவன், அந்நிய மொழிக்காரன் என்பதால் ஜோவுக்கு பெண் கொடுக்க மறுக்கும் அவர்கள், ஜோவைத் தாக்கி வெளியே தள்ள முயலுகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் சுசி, ஜோ தான் தன் அப்பாவை கீழே தள்ளிவிட்டதாக தவறாக நினைத்து, ஆவேசப்பட்டு, “போதும் ஜோ. இனி என் முகத்தில் விழிக்காதே” என்று காதலை முறித்துக்கொள்கிறார்.

ஊர் திரும்பும் ஜோ, விரக்தியில் மதுவுக்கு அடிமை ஆகிறார். இந்நிலையில், சுசிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கப்போவது தெரிந்து, சுசியை தூரத்திலிருந்தாவது கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில், நண்பர்களுடன் ஆலப்புழா செல்கிறார் ஜோ. அங்கே சுசியின் கல்யாண வீடு இழவு வீடாகக் கதறிக்கொண்டிருக்கிறது. ஜோ அல்லாத வேறொருவரை மணக்க மனமில்லாத சுசி தற்கொலை செய்துகொள்ள, மூடிய கண்களும், பஞ்சடைத்த மூக்குமாய் பிணமாக கிடத்தப்பட்டிருக்கிறார்…

பிரிவு ஆற்றாமையிலும், ”சுசியின் தற்கொலைக்கு நான் தான் காரணம்” என்று குற்றவுணர்விலும் புலம்பும் ஜோ, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முயலுகிறார். எனினும், தக்க சமயத்தில் நண்பர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, காப்பாற்றப்படுகிறார்.

மகன் இப்படி இருப்பதை காணப் பொறுக்காத ஜோவின் பெற்றோர், அவருக்கு அறிவுரை கூறி, திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். பெற்றோருக்காக சம்மதம் தெரிவிக்கிறார் ஜோ. அவருக்கும் இன்னொரு நாயகியும், கல்லூரி தாளாளருமான ஸ்ருதி (பவ்யா திரிகா) என்ற பணக்காரப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

திருமணத்துக்கு முதல்நாள் இரவு ஜோவும், நண்பர்களும் குடித்துக்கொண்டிருக்கும்போது மணப்பெண்ணான ஸ்ருதி போன் செய்து, “இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல. அதனால நீயே கல்யாணத்தை நிறுத்திரு” என்று சொல்லுகிறார். ஜோவின் போனை எடுத்து இதைக் கேட்ட நண்பன், போதையின் உச்சத்தில் இதை சரியாக புரிந்துகொள்ளாமலும், ஜோவிடம் சொல்லாமலும் விட்டு விடுகிறார். அடுத்த நாள் ஜோ தாலி கட்ட முனையும்போது அவரை ஸ்ருதி பார்த்த பார்வையில் அத்தனை வெறுப்பு…

திருமணத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாத ஜோவை ஸ்ருதி எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறார்? அவற்றை ஜோ எப்படி எதிர்கொள்கிறார்? இந்த திருமணத்தை ஸ்ருதி வெறுப்பதற்கு என்ன காரணம்? இறுதியில் இருவரும் சுமுகமாய் இணைந்தார்களா? அல்லது நிரந்தரமாய் பிரிந்தார்களா ? என்பன போன்ற கேள்விகளுக்கு காதலுடன் விடை அளிக்கிறது ‘ஜோ’ திரைப்படம்.

நாயகன் ஜோவாக, சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் நடித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள போதிலும், இது தான் அவர் சொல்லிக்கொள்கிற மாதிரியான முதல் படம் என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இன்றைய தலைமுறைக்குப் பிடிக்கும் விதமாய் ஹியூமர், கிளுகிளுப்பு, உருக்கம் ஆகிய உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தி, வெற்றிகரமான ‘லவ்வர் பாய்’யாக ஜொலித்திருக்கிறார். தன்னை வெறுக்கும் மனைவியை கையாள முடியாமல் தவிப்பது, பின்னர் மனைவியின் பிரச்சனையை புரிந்துகொள்ள முயல்வது போன்ற எமோஷனல் காட்சிகளில் நல்ல கணவராக தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். இனி ரியோ ராஜுக்கு மளமளவென நிறைய புதுப்படங்கள் வசப்படும் என எதிர்பார்க்கலாம்.

நாயகனின் கல்லூரிக்கால காதலி சுசியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார். அழகாய் இருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகள் உயிரோட்டத்துடன் வருவதற்கு தன்னாலான பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னொரு நாயகியான ஸ்ருதியாக பவ்யா திரிகா நடித்திருக்கிறார். தன்னை மணந்த நாயகனை பார்வையாலும், வார்த்தையாலும் குத்திக் கிழித்து ரணமாக்கும் கதாபாத்திரத்தை மிகையில்லாமல் இயல்பாகச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பின் கல்லூரி செக்யூரிட்டியாக சில காட்சிகளே வந்தாலும், அனுபவ நடிப்பால் நெகிழச் செய்துள்ளார் சார்லி. அதுபோல்  அன்புதாசன், விஜே ராகேஷ், இளங்கோ குமணன், ஜெயகுமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன் ராம். இக்கால இளைஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையில் பூக்கும் வண்ணமயமான காதலையும் அழகாக காட்டியிருக்கிறார். இப்படத்தின் கதையோட்டம் ‘அலை பாயுதே’, ‘ஒருதலை ராகம்’, ‘மௌன ராகம்’ போன்ற சில படங்களை அங்கும் இங்கும் நினைவுபடுத்தினாலும், இயக்குநர் ஹரிஹரன் ராமின் காட்சியமைப்பும், மேக்கிங்கும், நடிகர்களிடமிருந்து அவர் வரவழைத்திருக்கும் நடிப்பும் அதை மறக்கடித்து, ஃபிரஷ்ஷாக பார்த்து ரசிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. பாராட்டுகள்.

இசையமைப்பாளர் சித்து குமார் ’பேச்சிலர்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் சிறப்பான இசையை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ராகுல் கே.ஜி. விக்னேஷின் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகளும், ஆத்மார்த்தமான காதல் காட்சிகளும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தொகுப்பாளர் வருண் கே.ஜி, அள்ள வேண்டியதை அள்ளி, தள்ள வேண்டியதைத் தள்ளி சிறப்பாக தொகுத்துள்ளார்.

’ஜோ’ – இன்னாள் காதலர்கள், முன்னாள் காதலர்கள், வருங்கால காதலர்கள் ஆகிய அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்! ரசிக்கலாம்! உருகலாம்!