“நிதிஷ் குமார் பேசிய விதம் கொஞ்சம் லோக்கலாக இருக்கிறது; அவ்வளவு தான்!”
பெண்கள் குறித்து பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் பேசிய ஒன்று சர்ச்சையாகி இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப, பிரதமர் மோடி அது குறித்து மத்தியப் பிரதேச தேர்தல் பரப்புரையில் விமர்சித்துப் பேச, நிதிஷ் குமார் அது குறித்து வெட்கப்படுவதாக சொல்லி மன்னிப்புக் கேட்க, இப்படி நிறைய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. பீகார் எதிர்க் கட்சிகள் அவரது ராஜினாமாவைக் கூடக் கோரி உள்ளன.
அப்படி என்ன பேசி இருக்கிறார் என்று அந்தக் காணொளியைப் பார்த்தேன்.
சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் பின்வருமாறு பேசுகிறார்:
‘செ*க்*ஸ்சின் பொழுது ஆண்கள் தாம் பாட்டுக்கு வந்து ஏதோ செய்து விட்டுப் போய் விடுகிறார்கள். தினம் தினம் செய்கிறார்கள். விளைவு, மென்மேலும் குழந்தைகள் பிறந்து விடுகின்றன. இதே படித்த பெண்ணாக இருந்தால் “டேய் கடைசியில் வெளியே எடுத்து விடு; உள்ளே விட்டு விடாதே,” என்று சொல்லுவாள். குழந்தைப் பிறப்பு தடுக்கப்பட்டு விடும். இப்படி படித்த பெண்கள் அதிகரிப்பதினால்தான் பீகாரில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.’
இது ஆணாதிக்கத் தனமாக இருக்கிறது; பெண்களை இழிவுபடுத்துகிறது என்றெல்லாம் கூக்குரல்கள் எழுந்திருக்கின்றன. மணிப்பூர், ஹரியானா நூஹ் போன்ற முக்கிய விஷயங்கள் பற்றியெல்லாம் இன்று வரை வாயையே திறக்காத பிரதமர் மோடிக்கு இது பற்றி மட்டும் ஒரே நாளில் பேசி விமர்சித்து விட வேண்டும் என்று தோன்றி விட்டிருக்கிறது.
என்னைப் பொருத்தவரை நிதிஷ் குமார் பேசியதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பேசிய விதம் கொஞ்சம் லோக்கலாக இருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் நகைச்சுவை எஃபக்ட்டுக்காக கூட அவர் அந்த ஸ்டைலில் பேசி இருக்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. ஆணுறை பயன்படுத்துவது குறித்த தெளிவும் கவலையும் கூட இருப்பதில்லை. குறிப்பாக ஊரக இந்தி பெல்ட்டில் வாழும் ஆண்களுக்கு இது மொத்தமாக மிஸ்ஸிங் என்பதுதான் தரவுகள் பேசும் விஷயம். பல ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதை என்னமோ தங்களுக்கு ஏற்படும் அவமானமாகக் கூட கருதுகிறார்கள். 2020-ல் மத்திய அரசே நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்த விஷயம்: இந்தியாவில் மொத்தம் 5% ஆண்கள் மட்டுமே தொடர்ச்சியாக ஆணுறையைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் ஆழமாக ஊறியுள்ள ஆணாதிக்க சிந்தனாவாதம் காரணமாக செக்ஸ் விஷயத்தில் பெண்களால் தெளிவாக எந்தக் கருத்தையும் ஆண்களுடன் பகிர இயலாத நிலை நிலவுகிறது. ‘காண்டம் போட்டுக்கடா’ என்று சொல்வதற்குக் கூட காண்டம் பற்றிய ஒரு புரிதல் வேண்டி இருக்கிறது. ஏன், நிதிஷ் பேசிய அந்த விஷயம் ‘கடைசியில வெளியே எடுத்துரு!’ என்று சொல்வதற்குக் கூட அது பற்றிய தெளிவும், அதை சொல்லும் தைரியமும் தேவைப்படுகிறது. அதை வலியுறுத்த ஒரு மன உறுதி வேண்டி இருக்கிறது. படிக்காத பெண்களுக்கு இவை எதுவுமே இருக்கும் வாய்ப்பு குறைவு. படித்த பெண்களுக்கு இருக்கும் வாய்ப்பு அதிகம்.
அதுவுமின்றி நிதிஷ் குமார் வெறுமனே ‘கல்வி கற்ற பெண்களுக்கு’ என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். நான் ஒரு படி மேலே போய் ‘பாலியல் கல்வி’ என்றும் சேர்த்துக் கொள்வேன். இந்தியாவில் வயதுக்கு வந்த அனைத்து சிறுவர் சிறுமியருக்கும் பாடத் திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும். பல்வேறு கலவி முறைகள், ஆண் / பெண்ணுக்கான கருத்தடை சாதனங்கள், Morning After Pills, போன்றவை குறித்த அறிவியல் பூர்வமான கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். போர்ன் படங்கள் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் அவர்களுக்கு இந்தப் பாடத்திட்டத்தில் கொடுக்க வேண்டும். கற்பு கத்திரிக்காய் போன்ற கற்பனை அசிங்கங்கள் குறித்த தெளிவு இருபாலாருக்கும் வழங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இவையெல்லாம் தடையின்றி நடந்தால் இந்தியாவில் கருத்தரிப்பு பாதிக்குப் பாதியாக குறையும். இது வெறும் அனுமானமல்ல. உலகெங்கும் பெண் கல்வி அதிகரித்து, பெண்கள் கேரியரில் ஈடுபடும்போது கலவியில் என்ன செய்வது என்பது குறித்து கணவனிடம் பேசும் உரிமை அவர்களுக்கு கணிசமாக அதிகரிக்கிறது. பாலியல் கல்வி கிடைத்து கலவி முறைகள் மற்றும் கருத்தடை குறித்த தெளிவு அதிகமாக உள்ள பிராந்தியங்களில் மக்கள் தொகை கணிசமாக குறைகிறது.
அறிவியல் பூர்வமாக இந்தப் பிரச்சினையை அணுகும் எவரும் நிதிஷ் குமார் பேசிய ஸ்டைலை ஒதுக்கி விட்டு பேசியதன் சாரத்தை ஆமோதிக்கவே செய்வார்கள். பாலியல் கல்வியை ஆதரித்து முன் நிற்பார்கள்.
கலாச்சார மற்றும் மதவாத மூடத்தனங்களுடன் இந்தப் பிரச்சினையை அணுகும் எவரும் நிதிஷ் குமார் பேசியதன் சாரத்தை விட்டு விட்டு அவர் பேசிய ஸ்டைலை பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். ‘பாரதப் பெண்களை அவமானப்படுத்தி விட்டார் பாரு’ என்று தேர்தல் மேடைகளில் அழுவார்கள்.
– ஸ்ரீதர் சுப்ரமணியம்