”தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினர் ஆகலாம்!”
‘டெவில்’ என்ற தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 3ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின்,
“விஜய் சேதுபதியை வைத்து நான் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை முழுக்க தேடி அலைந்து ஆறு திருநங்கைகளை கண்டுபிடித்தேன். துணை நடிகர்கள் குழுவில் திருநங்கைகளை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் சார்பாக நான் உங்களிடம் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணியிடம்) கோரிக்கை வைக்கிறேன். 100 துணை நடிகர்கள் இருந்தால், அதில் நான்கு பேராவது திருநங்கைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த சமூகம் அவர்களை மிக மோசமாக நடத்துகிறது. நீங்கள் நினைத்தால் அதை செய்ய முடியும். இதை எனக்காக நீங்கள் செய்ய வேண்டும்” என்று ஆர்.கே.செல்வமணியின் கைகளைப் பிடித்து கோரிக்கை வைத்தார்.
உடனே ஆர்.கே.செல்வமணி, “உங்கள் கோரிக்கை இப்போதே ஏற்றுக் கொள்ளப்படுகிறது” என்று பதிலளித்தார். மேலும் பேசிய அவர், “நடிப்பு மட்டுமின்றி, எந்தத் துறையில் அவர்கள் இடம் பெற வேண்டும் என்று திருநங்கைகள் விரும்பினாலும், அவர்கள் முறையாக வந்து அணுகினால் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்வோம். இதற்கு பெப்சி பைலாவில் எந்தத் தடையும் இல்லை. அவர்களால் கண்டிப்பாக உறுப்பினர் ஆக முடியும்” என்று மிஷ்கினிடம் உறுதி அளித்தார்.