‘லியோ’ காலை காட்சியை 7 மணிக்கு தொடங்க அனுமதி தர முடியாது: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

‘லியோ’ திரைப்படத்தின் காலை காட்சியை 7 மணிக்குத் தொடங்க அனுமதிக்க முடியாது என்றும், ஏற்கெனவே அனுமதித்துள்ளபடி 9 மணிக்குத் தான் தொடங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை (அக். 19) வெளியாக உள்ளது. இப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க கோரி செவன் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக நேற்று விசாரித்த நீதிபதி, அதிகாலை 4 மணி காட்சிக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது என்று கூறி, 7 மணி காட்சி தொடர்பாக உரிய முடிவு எடுத்து அதனை தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ‘லியோ’ படத்தின் 7 மணி காட்சியை அனுமதிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, படத்தின் முதல் காட்சி 9 மணிக்குத் தொடங்கும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு உள்துறை செயலாளர் பி.அமுதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல் ஆறு நாட்களுக்கு வழக்கமான நான்கு காட்சிகளையும், கூடுதலாக தமிழக அரசு அனுமதித்துள்ள ஐந்தாவது காட்சியையும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை திரையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உள்துறைச் செயலாளரிடம் கூறியுள்ளது. இன்னொருபுறம், காலை 9 மணிக்கு முன் படத்தை திரையிட அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் டிஜிபி ஷங்கர் ஜிவால் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவின்படி ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கே தொடங்க வேண்டும் என உள்துறைச் செயலாளர் அமுதா தனது கடிதத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.