‘லியோ’ திரைப்படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும், இறுதிக் காட்சியை இரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து அக்டோபர் 12-ல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, 19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம்” என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இதனால், அதிகாலை 4 மணி அளவில் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடங்கும் என சில யூடியூபர்களும், காலை 9 மணிக்குத் தொடங்கும் என சில செய்தியாளர்களும் தெரிவித்ததால் விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அதனை தெளிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் திரையரங்குகளில் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும், இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை விதிமீறல் இல்லாமல் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.