ரத்தம் – விமர்சனம்
நடிப்பு: விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, கலைராணி, ஓஏகே.சுந்தர், ஜான் மகேந்திரன் மற்றும் பலர்
இயக்கம்: சி.எஸ்.அமுதன்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
படத்தொகுப்பு: டி.எஸ்.சுரேஷ்
இசை: கண்ணன் நாராயணன்
தயாரிப்பு: இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ்’ கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போரா
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
பிரபலமான தமிழ் திரைப்படங்களையும், தமிழ் திரைப்படக் கலைஞர்களையும் நையாண்டி செய்யும் ‘தமிழ் படம்’, ‘தமிழ் படம் 2’ ஆகிய முழுநீள ஸ்பூஃப் (spoof) வகை நகைச்சுவைப் படங்களை இயக்கி, அவற்றை வெற்றிப்படங்கள் ஆக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன், மேற்கண்ட நகைச்சுவை பாணியிலிருந்து முற்றிலும் விலகி, முழுக்க முழுக்க சீரியஸான ‘கிரைம் திரில்லர்’ வகைப் படமாக படைத்தளித்திருப்பது தான் ‘ரத்தம்’. அவரது இந்த சீரியஸ் முயற்சி, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…
சென்னையில், ஒரு முன்னணி நடிகரின் அதிதீவிர ரசிகன் ஒருவன், ‘வானம்’ என்ற புலனாய்வுப் பத்திரிகையின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, “என் தலைவனைப் பற்றியாடா தப்பா எழுதுற?” என்றவாறு, அப்பத்திரிகையின் ஆசிரியரான செழியனை கத்தியால் 27 முறை குத்திக் கொன்று, ‘ரத்தம்’ என்ற படத்தலைப்புக்குப் பொருத்தமாக ரத்த வெள்ளத்தில் சாய்க்கிற காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. கொலைகாரன் தப்பியோட முயலாமல், சம்பவ இடத்திலேயே நின்று கொண்டிருக்க, அலுவலகக் காவலாளிகள் அவனை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைக்கிறார்கள்.
இந்த பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியரும், உலக அளவில் பிரசித்தி பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளருமான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி), பிரசவத்தின்போது தன் மனைவி இறந்துபோன துக்கத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, பத்திரிகைத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கல்கத்தா சென்று, குதிரைகளைப் பராமரிக்கும் வேலை செய்துகொண்டு, தனது ஏழு வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வளர்ப்புத் தந்தையும், ‘வானம்’ பத்திரிகையின் நிறுவன அதிபரும், படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் செழியனின் தந்தையுமான நிழல்கள் ரவி, கல்கத்தாவுக்குப் போய், ரஞ்சித் குமாரை சந்தித்து, உருக்கமாக அழைப்பு விடுத்ததின்பேரில் சென்னை திரும்பும் குமார், மீண்டும் ‘வானம்’ பத்திரிகையில் சேர்ந்து பத்திரிகையாளராக பணியாற்ற தொடங்குகிறார்.
பத்திரிகை ஆசிரியர் செழியன் படுகொலை விவகாரம் பற்றி ஆராயத் தொடங்குகிறார் குமார். கொலை செய்தது ஒரு நடிகரின் அதிதீவிர ரசிகன் தான் என்றாலும், கொலை வேறு காரணத்துக்காக, வேறு யாருக்காகவோ நடந்திருக்கிறது என்று யூகிக்கிறார். இந்த யூகத்துக்கு வலு சேர்ப்பது போல், மணல் கொள்ளையைத் தடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதற்காக கொல்லப்படாமல், “என் மதத்தை ஏன் அசிங்கப்படுத்தினாய்?” என்றவாறு ஒரு மதவெறியனால் கொல்லப்படுவது, ஒரு அமைச்சரின் அயோக்கியத்தனத்தால் முறைகேடாக கர்ப்பிணியான ஒரு ஏழைப்பெண் அதற்காக கொல்லப்படாமல், கீழ்சாதிக்காரனின் சகவாசத்தால் கர்ப்பிணியானதாக குற்றம் சாட்டி ஒரு ஆதிக்க சாதிவெறியனால் ஆணவக்கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவை எல்லாம் ‘வெறுப்பு குற்றங்கள்’ (Hate Crime); இவற்றுக்குப் பின்னால் மிகப்பெரிய நெட்ஒர்க் அல்லது ஆர்கனைசேஷன் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் குமார்.
‘வெறுப்பு குற்றங்கள்’ என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? அவற்றுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள்? என்பவற்றையெல்லாம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் புலனாய்வு பத்திரிகையாளரான குமார் கண்டறிந்து அம்பலப்படுத்துவது தான் ‘ரத்தம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
புலனாய்வு பத்திரிகையாளர் ரஞ்சித் குமாராக வருகிறார் விஜய் ஆண்டனி. மனைவியை இழந்த சோகத்தையும், கொலைகளுக்குள் மறைந்திருக்கும் மர்மத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தீவிரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் படம் முழுவதும் சீரியஸான முகத்துடன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். தாயில்லாப் பிள்ளையான தன் மகள் மீது அவர் கொண்டுள்ள பாசம், பார்வையாளர்களின் மனதை நிச்சயம் நெகிழச் செய்யும். குற்றச்செயல்களை புலனாய்வு செய்யும் பத்திரிகையாளர் எப்படி கூர்மையாக சிந்திப்பார், எப்படி ராப்பகலாக உழைப்பார் என்பதை தனது நடை, உடை, பாவனைகள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்துவதில் விஜய் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார்.
கொலையுண்ட பத்திரிகை ஆசிரியர் செழியனின் மனைவியாக வரும் ரம்யா நம்பீசன், பத்திரிகை அலுவலகத்தில் பம்பரமாக சுழலும் உதவி ஆசிரியராக வரும் நந்திதா சுவேதா, டிராவல் ஏஜென்சி நடத்துபவராக வந்து, எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் மகிமா நம்பியார் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக அல்லாமல், கதைக்கு பலம் சேர்க்கும் வலிமையான கதாபாத்திரங்களாக வந்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
நிழல்கள் ரவி, கலைராணி, ஓஏகே.சுந்தர், ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
வெறுப்பு அரசியலும், அதன் விளைவாக வெறுப்பு குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து நாடு நாசமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அதை அம்பலப்படுத்தும் வகையில், இதுவரை யாரும் சொல்லாத திடுக் அம்சங்களை கிரைம் திரில்லர் ஜானரில் கலந்து, காலத்தின் தேவைக்கேற்ற படமாக ‘ரத்தம்’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் சி.எஸ்.அமுதனுக்கு பாராட்டுகள். முழுப்படத்தையும் பார்வையாளர்கள் சீட்டின் நுனியில் அமர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்று பதட்டத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கும் வகையில், யூகிக்க இயலாத திருப்பங்களுடன் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். சமூகவலைத் தளங்களில் ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களையும் எண்ணங்களையும் பதிவிடும் சாதாரண பதிவுகள், கிரிமினல்களின் கையில் சிக்கி, எத்தகைய அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பன போன்ற ஏராளமான புதிய விஷயங்களை – போதனையாக இல்லாமல் – புனைவுக் காட்சிகளாக பார்வையாளர்களுக்கு திறம்பட கடத்தியிருக்கிறார். ஸ்பூஃப் (spoof) வகை நகைச்சுவைப் படங்களைப் போலவே சீரியஸான கிரைம் திரில்லர் படங்களையும் சுவாரஸ்யமான படைப்புகளாக தன்னால் படைத்தளிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் கண்ணன் நாராயணனின் இசையில் பாடல்கள் இரண்டும் அருமை. பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோரது நிறைவான பங்களிப்புகள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’ரத்தம்’ – சமூக உணர்வுடன் கூடிய, சமகாலத்துக்குத் தேவையான கிரைம் திரில்லர் படைப்பு. அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கலாம்!