ரெட் சாண்டல் வுட் – விமர்சனம்

நடிப்பு: வெற்றி, தியா மயூரிக்கா, கேஜிஎஃப் ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: குரு ராமானுஜம்

ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா

படத்தொகுப்பு: ரிச்சர்ட் கெவின்

இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ’ஜேஎன் சினிமாஸ்’ ஜே.பார்த்தசாரதி

பத்திரிகை தொடர்பு: மணவை புவன்

 2015ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி காட்டுப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக குற்றம் சாட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஏழைத் தமிழர்களை ஆந்திர போலீசார் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றார்கள். நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதில் கற்பனை கலந்து ‘ரெட் சாண்டல் வுட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் குரு ராமானுஜம்.

வட சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் கதை நாயகனுமான பிரபாகரன் (வெற்றி), வேலை தேடிச் சென்று காணாமல்போன தன்னுடைய நண்பன் கர்ணன் (கபாலி விஷ்வந்த்) ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதை அறிந்து அவரைத் தேடிச் செல்கிறார்.

திருப்பதியில் அவர் கர்ணனைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்ற தகவல் பரவியதும், பிரபாகரன்  மீதான தாக்குதல்கள் தொடங்குகின்றன. இதன் மூலம் கர்ணன் ஏதோவொரு பயங்கரமான ஆபத்தில் சிக்கியிருப்பது பிரபாகரனுக்கு புரிகிறது. அவர் முயற்சியைத் தீவிரப்படுத்துகையில், சட்டத்துக்குப் புறம்பாக செம்மரங்களைக் கடத்தும் கும்பலிடம் கர்ணன் மாட்டியிருக்கிறார் என்பதையும், அந்த செம்மரக் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை அரசியல், அதிகாரம், பணபலம் உள்ள அரிமாறன் (கேஜிஃஎப் ராம்) ஆள்கிறார் என்பதையும் பிரபாகரன் கண்டறிகிறார்.

நண்பனை மீட்கத் தனியாளாகக் களமிறங்குகிறார் பிரபாகரன். கடுமையாகப் போராடி நண்பனைக் கண்டுபிடித்து மீட்கும் வேளையில், ”செம்மரக் கடத்தல்காரர்கள்” என்று குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் மீதான ஆந்திர போலீஸின் ‘போலி என்கவுண்ட்டர்’ வேட்டை பிரபாகரன், கர்ணன் ஆகிய இருவரையும் சுற்றி வளைக்கிறது.

அங்கிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? போலி என்கவுண்ட்டரில் சிக்கிய ஏழைத் தமிழர்களின் கதி என்ன? என்பது ‘ரெட் சாண்டல் வுட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி, இந்த படக்கதையைத் தேர்வு செய்ததிலும் அதை நிரூபித்துள்ளார்.  நாயகன் பிரபாகரனாக அவர் நண்பனைத் தேடிச் செல்வது, செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டெடுப்பது என யதார்த்தமாக நடித்து, படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கையில் மாஸ் காட்டியிருக்கிறார்.

நாயகனின் நண்பன் கர்ணனாக வரும் கபாலி விஷ்வந்த், அந்த கதாபாத்திரமாகவே மாறி, ஏழ்மையான சூழலில் வாழும் இளைஞனை தோற்றத்திலும், நடிப்பிலும் அச்சு அசலாகப் பிரதிபலித்திருக்கிறார்.

நாயகனின் காதலியாக, கர்ணனின் தங்கையாக, நாயகி வினிதாவாக வரும் தியா மையூரிக்கா குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் அழகான நடிப்பால் கவர்கிறார்.

செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவன் அரிமாறனாக, முக்கிய வில்லனாக வரும் கேஜிஎஃப் ராம், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

சிறப்புத் தேடுதல் படை காவல் அதிகாரி ராமையாவாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் ஆரம்பத்தில் வில்லன் போல் தோன்றினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நிலைமைகளைப் புரிந்துகொள்ளும் மனிதாபிமானியாக மாறும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகவே இருக்கிறார்.

நாயகனுடன்  போலீசில் பிடிபடும் குழுவில் உள்ள வயோதிகர் முத்தையாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் நம் மனதை மிகவும் கலங்கடிக்கிறார். மாரிமுத்து உள்ளிட்ட ஏனையோரும் அளவாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.

 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட நல்ல கதை, அபூர்வமான கதைக்களம், உணர்வுப்பூர்வமான கதைக்கரு ஆகியவற்றைக் கொண்டு சமகால தமிழ்சினிமாவுக்கு ஒரு சிறந்த படத்தைக் கொடுக்க இயக்குநர் குரு ராமானுஜம் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பாராட்டலாம், எனினும், 90 நிமிட படத்துக்குள் 180 நிமிட படத்துக்கான செய்திகளைச் சொல்ல முயன்றிருப்பது பார்வையாளர்களுக்கு கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

படத்தின் மையப் புள்ளியாக இயக்குனர் வைத்திருக்கும் விஷயம், சிஐஆர் என்று சொல்லப்படும் ‘சிவில் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் ‘ தான். வேலைக்காக மாநிலம் கடந்து செல்பவர்கள் இந்த சிஐஆரை கையில் வைத்திருந்தால் எந்த விதமான சட்ட சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க முடியும் என்கிற விஷயம் இப்படத்தின் செய்தியாக சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும்,  சாம் சி.எஸ்ஸின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கின்றன.

’ரெட் சாண்டல் வுட்’ –  நம் ரத்தத்தை உறைய வைக்கும் தமிழர்களின் ரத்தக்காடு! அவசியம் பார்க்க வேண்டிய படம்!