அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படத்தை இந்தி பேசும் மாநிலங்களின் முக்கிய சிந்தனையாளர்கள் கொண்டாடுகிறார்கள்!
ஜவான், இந்தி திரையுலகத்துக்கு முக்கியமான ஒரு படம்.
ஷாருக்கான் நடித்த பதான் படத்தை சங்கிகள் இடித்த இடிக்கும், அவரது மகனை பாஜக அரசு அலைக்கழித்த விதத்துக்கும் மொத்தமாக வைத்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் அவர்.
வழக்கமான குடும்ப நடனங்கள், வெளிநாட்டு பயண மசாலாக்கள், வீர் சாரா ரக உருக்கமான காதல்கள் போன்றவை நிச்சயமாக ஜவானில் இல்லை. ஆதி புருஷ், பிரம்மாஸ்திரா போன்ற அரசியல் பிரசார படங்களுக்கு நடுவே ஜவான் வெளியாகி வெற்றி பெறுவது முக்கியமான விஷயமாக இருக்கிறது.
மணி ஹீஸ்ட் தொடங்கி, நம்மூர் கத்தி படம் வரை ஏகப்பட்ட கதை உருவல்கள், லாஜிக் சொதப்பல்கள் சந்தேகமே இல்லாமல் இருக்கின்றன. பொதுவாக நல்ல படம் – மோசமான படம், கமர்ஷியல் படம் – ஆர்ட்டிஸ்டிக் படம் போன்ற வித்தியாசங்களை காட்டிலும் ஒரு படம் அரசியலாக என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்கும் இயல்புக்கு ஜவான் மிகவும் உவப்பான படமாக இருக்கிறது.
விதர்பாவின் விவசாய தற்கொலையில் தொடங்கி, டாக்டர் கபீல் கான், நச்சு ஆலை என பாஜக அரசியலும் அதன் crony capitalism-மும் தெளிவாக முன்வைக்கப்படுகிறது. ரொம்ப பாஜக எதிர்ப்பாக தென்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு 1980-களின் ஆயுத ஊழலையும் காண்பித்திருக்கிறார்கள்.
தூக்கி எறிந்த கல்லே வீட்டின் முதல் கல்லாக ஆகும் என்பது போல் அட்லீ அற்புதமாக சாதித்திருக்கிறார். கறுப்பு நிறம், தமிழர் போன்ற காரணங்களால் வட இந்திய ஊடகங்கள் கொட்டிய வன்மம் மிக அதிகம். உண்மையில் எனக்கு அட்லீயின் திரைமொழியும் படங்களும் பிடிக்காது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து போகும் ஒரு சினிமா இயக்குநர் தன்னகத்தே கொண்டு செல்லும் சிந்தனையும் அரசியலும் கூட எப்படி வடநாட்டு சங்கிகளுக்கு எதிர்புறத்தில் இருக்கின்றன என்பதை இப்படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார் அட்லீ.
பாஜகவின் அரசியலை காட்டும் அதே நேரத்தில், குழந்தை பெற்ற தாயை மணம் முடிக்கும் நாயகனை வடநாட்டில் காட்டும் முக்கியத்தையும் இப்படம் நிகழ்த்தியிருக்கிறது. வழக்கமாக பெண்களை விளையாட்டு வீரர்களாக கொண்டு, உலக அரங்கில் இந்தியாவுக்காக போராடி பதக்கம் வெல்ல வைக்கும் நாயகப் படங்கள் இருக்கும் இந்தி சூழலில், பெண்களைக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக ஒரு ராணுவத்தை ஜவான் கட்டுவது முக்கியமாக இருக்கிறது.
நமக்கு அட்லீ படங்கள் மீது விமர்சனம் இருக்கிறது. கிண்டல் செய்கிறோம். ஏனெனில் நாம் பல அட்லீக்களை கொண்டிருக்கிறோம். பல ஜவான்களை கொண்டிருக்கிறோம். ஷங்கரின் vigilante ரக நாயகர்களை உருவாக்கிச் சலித்த தமிழ் சினிமா, ஒரு கட்டத்துக்கு மேல் அந்த நாயகர்களை வேறு வழியின்றி கத்தி பட நாயகர்களாக மாற்ற வேண்டிய நிர்பந்தத்தை நாம் தந்தோம். ஜனநாதனின் ஈ பட நாயகன், அந்த அவசியத்தை ஏற்படுத்தினான். உறியடி நாயகன் அந்த அவசியத்தை கூர்மைப்படுத்தினான்.
ஷங்கரின் திராவிட அரசு மற்றும் அரசியல் எதிர்ப்பு பார்ப்பன நாயகன், மெல்ல இடதுசாரியத்தன்மையும் தமிழ் தேசிய உணர்வும் கொண்ட, அரச எதிர்ப்பு நாயகனாக தமிழ்ச்சூழலில் மாற்றம் கொண்டான். அது தமிழ்ச்சூழல் கண்ட சமீபத்திய அரசியல் மாற்றத்தின் விளைவு. அதில் வலதுசாரிய தமிழ்தேசியம் பேசிய மோசமான படங்கள் விளைந்த போக்கும் அடக்கம்.
மேலும் தமிழ்நாட்டு அரசியலின் பிரத்தியேகதையான இயக்கவாத போராட்ட அரசியல், அரசியல் நாயகன் இடம்பெறும் பெரும்பாலான தமிழ்ப்படங்களில் தவிர்க்கவே முடியாத விஷயம்.
எனவே இடதுசாரிய தன்மையும் சமூகநீதி சிந்தனையும் கொண்டு, மக்கள் பக்கம் நின்று அரசாங்கத்தை கேள்வி கேட்கும் vigilante நாயகன், தமிழ்ச்சூழலின் பிரத்தியேக வார்ப்பு என சொல்லலாம்.
ஜவான் அத்தகைய நாயகனாக மிளிர்கிறார்.
தமிழ் ரசிகர்களுக்கு ஜவான் படம் மொக்கையான படமாகவே இருக்கும். ஏனெனில் அதைக் காட்டிலும் நல்ல படங்களை பார்த்த அனுபவம் நமக்கு உண்டு. ஆனால் இந்தி சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
பேராசிரியர் ராம் புனியானி உட்பட, so called hindi heartland-ல் வாழும் முக்கியமான சிந்தனையாளர்கள் ஜவான் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவை திரைவடிவத்திலும் எதிர்கொள்ளும் வாய்ப்பாக அதை வரித்துக் கொள்கின்றனர். ஷாருக்கான பேசும் இறுதி வசனம் ‘இந்தியா’ கூட்டணியின் வசனமாக ஏற்கனவே சமூகதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தேர்தல் பரப்புரைகளில் அந்த வசனம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.
எது இல்லை என்றாலும் தமிழ்நாட்டு அரசியலின் தனித்த சிறப்பியலபான ‘கேள்வி கேள்’ என்கிற அரசியலை வடநாட்டுக்கு கொண்டு சென்றதற்காகவ இப்படத்தை கொண்டாடலாம்.
ஷாருக்கானின் இரண்டு வேடங்களும் நன்றாக இருந்தாலும் என்னுடைய pick வயதான cool ஷாருக்தான் மக்களே!
RAJASANGEETHAN