“டெங்கு, மலேரியாவை ஒழித்தது போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்”: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம் ஆகும்.
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். நம்முடைய கலைஞர், அவருடைய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் அவருடைய அப்பா முத்துவேல் தாத்தா கலைஞருடைய ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடக் கல்வியுடன் சேர்த்து இசைக் கல்வியும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்கள் என்று எழுதி இருக்கிறார். ஆனால், இசையைப் பள்ளியில் சேர்ந்து கற்றுக் கொள்வதற்கு கலைஞருக்கு ஈடுபாடும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதற்கான காரணத்தையும் அவர் அந்த ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் தெரிவித்திருக்கிறார்.
என்ன காரணம் என்றால், இசைக் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பயிற்சிக்கு சட்டை போட்டுக் கொண்டு போகக் கூடாது. துண்டை இடுப்பில் தான் கட்டிக்கொண்டு போகவேண்டும். காலில் செருப்பு போடக்கூடாது. இப்படிச் சாதி மத சாஸ்திர சம்பிரதாயம் என்பதன் பெயரால் நடத்தப்படும் கொடுமையை என்னுடைய பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியதுதான், நான் இசைக் கல்வி கற்க தனக்கு ஆர்வம் ஏற்படவில்லை என கலைஞர் தெரிவித்திருக்கிறார். அந்த வயதில் கலைஞரின் பிஞ்சு மனதில் சனாதனத்திற்கு எதிராக எரிமலை வெடித்துள்ளது. அதனால் தான் தன்னுடைய ஐந்து வயதில் ஆரம்பித்த அந்தப் போராட்டம், 95 வயது வரைக்கும் கலைஞர் சனாதனத்தை எதிர்த்து பெரும் போரை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மாற்றக் கூடாது என்று எதுவுமே இல்லையென்று எல்லாத்தையும் மாற்றிக் காட்டியவர்தான் கலைஞர். மனிதர்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். வள்ளலார், அன்றைக்குப் பற்ற வைத்த அந்த அடுப்பு இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்பிலிருந்து நெருப்பை எடுத்துத்தான் நம்முடைய முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.