லக்கிமேன் – விமர்சனம்

நடிப்பு: யோகி பாபு, வீரா, ரேச்சல் ரெபேக்கா, சுபாஷினி குமரன், அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயகுமார், கௌதம் சுந்தர்ராஜன், ஹலோ கந்தசாமி, ராகுல் தாத்தா, பிரதீப் கே.விஜயன், அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர்

இயக்கம்: பாலாஜி வேணுகோபால்

ஒளிப்பதிவு: சந்தீப் கே.விஜய்

படத்தொகுப்பு: ஜி.மதன்

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு: திங்க் ஸ்டூடியோஸ்

தமிழக வெளியீடு: ”சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டி ஒன்)

பிறந்ததிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கருதப்படும் ஒரு  ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், பம்பர் குலுக்கல் மூலம் திடீர் அதிர்ஷ்டசாலியாகிவிட, அவர் வாழ்க்கையில் நல்லது நடக்க ஆரம்பிக்கிறது. அதை கெடுக்கிற விதமாக ஒரு நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரி குறுக்கே வந்து இடையூறு செய்தால் என்ன ஆகும் என்பது ‘லக்கிமேன்’ படத்தின் லைன்.

ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றில் ஏஜெண்டாக கமிஷனுக்கு வேலை பார்க்கிறார் முருகன் (யோகி பாபு). இவரது மனைவி தெய்வானை (ரேச்சல் ரெபேக்கா). இவர்களுக்கு எட்டு வயதில் தமிழ் (சாத்விக்) என்றொரு மகன் இருக்கிறார்.

கைக்கும் வாய்க்கும் போதாத வருமானத்தில் ஏழ்மையில் உழலும் முருகன், பிறந்ததிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று பிறரால் வெறுக்கப்படுபவர். அதற்கேற்ப தரித்திரம் அவரை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது.

முருகன், சிட்பண்ட் நிறுவனம் ஒன்றின் சீட்டில் சேர்ந்து மாதாமாதம் பணம் செலுத்தி வருகிறார். அந்த நிறுவனம் நடத்தும் பம்பர் குலுக்கலில் முருகனுக்கு விலையுயர்ந்த கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. அதை விற்று கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழலாம் என்கிறார் மனைவி தெய்வானை. ஆனால், அது தன் அதிர்ஷ்டத்தில் கிடைத்த கார், அது வந்ததிலிருந்து எல்லாம் நல்லதாக நடக்கிறது என்று நம்பும் முருகன், மனைவியின் யோசனையை நிராகரிக்கிறார்.

காரை நிறுத்துவதற்கு தன் வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாததால், ரோட்டோரம் நிறுத்துகிறார் முருகன். அந்த ஏரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட வரும் போலீஸ் அதிகாரி சிவகுமார் (வீரா), ரோட்டில் முருகனின் கார் நிற்பதைப் பார்த்து டென்ஷன் ஆகிறார். இது தொடர்பாக அவருக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது வலுத்ததால், முருகனின் கார் கண்ணாடியை உடைக்க லத்தியை ஓங்குகிறார் சிவகுமார். அப்போது அங்கே வரும் மாவட்ட ஆட்சியர் அதை தடுத்து, முருகனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார். தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறார் சிவகுமார். அவரது ஈகோ காயமடைகிறது.

இன்னொரு  நாள். முருகன் ஒரு சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, மனைவி, மகனுடன் காரில் வீடு திரும்பும்போது, போலீஸ் அதிகாரி சிவகுமார் நடத்தும் செக்கிங்கில் மாட்டுகிறார். ”லைசென்ஸ் இல்லாமல் எல்.எல்.ஆர். வைத்துக்கொண்டு கார் ஓட்டுவது விதிமீறல்” என்று முருகனின் காரை பறிமுதல் செய்ய முனைகிறார் சிவகுமார். முருகன் சாமர்த்தியமாகப் பேசி, சிவகுமாரின் எண்ணத்தை முறியடித்து, காருடன் சென்று விடுகிறார். சிவகுமாருக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது.

இந்நிலையில், ஓரிரவில் முருகனின் கார் திடீரென்று மாயமாகிறது. போலீஸ் அதிகாரி சிவகுமார் தான் தன் காரை திருடி இருப்பார் என்று முருகன் சந்தேகப்படுகிறார். அதே சமயம், கார் திருடு போனது பற்றியும், அதை கண்டுபிடித்துக் கொடுக்கும்படியும் சிவகுமாரிடமே மனு கொடுக்க வேண்டிய கட்டாயம் முருகனுக்கு.

முருகனின் புகார்மனுவை பெற்றுக்கொண்ட பின் சிவகுமார் ஆடிய கபட நாடகங்கள் என்ன? மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்குத் திரும்பிவிட்ட முருகனுக்கு அவருடைய கார் கிடைத்ததா, இல்லையா?” என்பது ‘லக்கிமேன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை நாயகன் முருகன் கதாபாத்திரத்தில் வரும் யோகி பாபு தன் பங்களிப்பை இயல்பான நடிப்பு மூலம் சிறப்பாக செய்திருக்கிறார். அவ்வப்போது நகைச்சுவை கவுண்ட்டர் போட்டு சிரிக்க வைத்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கண் கலங்க வைத்துவிடுகிறார். ‘மண்டேலா’ படத்தைப் போல இந்த படமும் அவருக்கு ’நல்ல நாயக நடிகர்’ என்ற பெயரை நிச்சயம் பெற்றுத்தரும். பாராட்டுகள்.

 நாயகனின் மனைவி தெய்வானை கதாபாத்திரத்தில் வருகிறார் ரேச்சல் ரெபேக்கா. ஏழ்மையான குடும்பத் தலைவியாக, தாயாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘கடைசி விவசாயி’, ‘குட் நைட்’ போல இந்த படத்திலும் இவரது நடிப்பு கவனம் பெறும்.

நேர்மையும், கண்டிப்பும், ஈகோவும் மிகுந்த போலீஸ் அதிகாரி சிவகுமாராக வருகிறார் வீரா. தன் ஈகோவை காயப்படுத்திய நாயகனுக்கு துயரத்துக்கு மேல் துயரம் கொடுத்து, அலைக்கழித்து, கொடுமைப்படுத்தும் நடிப்பை பிய்த்து உதறியிருக்கிறார். அதே நேரத்தில் அவரது வளர்ப்பு நாய் மீது அவர் காட்டும் பாசம் அவருடைய இன்னொரு வகை நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

நாயகனின் நண்பன் வெங்கட்டாக வருகிறார் அப்துல் லீ. மாஸ் ஹீரோக்களின் படங்களில் அவர்களுடைய நண்பனாக வரும் யோகி பாபு என்னவெல்லாம் செய்வாரோ, அவற்றை எல்லாம் இந்த படத்தில் யோகி பாபுவின் நண்பனாக வந்து தூள் கிளப்பியிருக்கிறார் அப்துல் லீ.

நாயகனின் எட்டு வயது மகன் தமிழாக வரும் சாத்விக் சரியான தேர்வு. யோகி பாபுவுக்கு ஒரு மகன் இருந்தால் இப்படித்தான் இருப்பான் என்று சொல்லும்படியான தேர்வு. அச்சம் சிறிதுமின்றி அருமையாக நடித்திருக்கிறான்.

‘காமன்மேனுக்கும், நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் உரசல்’ என்ற எளிமையான கதைக்கருவை எடுத்து, முருகன், தெய்வானை, தமிழ், சிவகுமார் உள்ளிட்ட யதார்த்தமான கதாபாத்திரங்களை வடிவமைத்து, சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை திறமையாக வேலை வாங்கி, போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். வன்முறையோ ஆபாசமோ துளியும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ரசிக்க்க கூடிய நல்ல திரைப்படமாகவும் இதைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் பாலாஜி வேணுகோபாலுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் இயக்குனருக்கு உறுதுணையாக இருந்து கதைக்கும், காட்சிகளுக்கும் வலு சேர்த்துள்ளன.

‘லக்கிமேன்’ – குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!